திங்கள், 25 பிப்ரவரி, 2019

பிரதமர் மோடி 1 கோடி பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்முதல் தவணையாக, வங்கி கணக்கில்! .... சிதம்பரம்: அதிகாரப்பூர்வ லஞ்சமாக பாரதீய ஜனதா கூட்டணி

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்: 1 கோடி பேருக்கு தலா ரூ.2 ஆயிரம்முதல் தவணையாக, வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதுதினத்தந்தி :விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார். கோரக்பூர், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்கும் திட்டத்தை உத்தரபிரதேச மாநிலம், கோரக்பூரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கிவைத்தார்.
மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு 2019-20 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1-ந் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
அந்த பட்ஜெட்டில், நாட்டில் உள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் வகையில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.75 ஆயிரம் கோடி செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி தலா ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஏறத்தாழ 12 கோடி விவசாயிகளும், தமிழ்நாட்டில் சுமார் 75 லட்சம் விவசாயிகளும் பலன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்த திட்டத்தை பல்வேறு காரணங்களை சொல்லி காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடுமையாக சாடினாலும் கூட, விவசாயிகளின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் தொடக்க விழா, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில், இந்திய உர கழக மைதானத்தில் நேற்று நடந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் ரூ.2 ஆயிரத்தை மின்னணு பரிமாற்றத்தின் மூலம் நேரடியாக செலுத்துவதற்கான பொத்தானை பிரதமர் நரேந்திர மோடி அழுத்தி, திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதன் மூலம் ஒரே நாளில் 1 கோடியே 1 லட்சம் பேரின் வங்கி கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என முழங்கியவாறு தனது பேச்சை தொடங்கினார்.

அப்போது அவர், “ விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்குகிற திட்டத்தின் கீழ், 1 கோடியே 1 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டு விட்டது. மற்றவர்களுக்கும் விரைவில் வழங்கப்பட்டு விடும்” என அறிவித்தார்.

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி வழியாக கலந்துரையாடினார். இந்த திட்டத்தை குறை கூறுகிற எதிர்க்கட்சியான காங்கிரசை சாடினார்.

அப்போது அவர், “ அவர்கள் (காங்கிரசார்) தேர்தலுக்கு முன்பாகத்தான் விவசாயிகளை நினைப்பார்கள். அப்போதுதான் அவர்களுக்கு கடன் தள்ளுபடி ஜுரம் வரும். அவர்கள் ஓட்டுகளை பெறுவதற்காக பிச்சை போல கடன் தள்ளுபடியை வழங்குவார்கள். இந்த முறை மோடி அவர்களை அம்பலப்படுத்தி விடுவார் என்பதை அவர்கள் அறியவில்லை.

ரூ.75 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டம் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டது அல்ல. இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்து அறிவித்த பின்னர்தான் நாடாளுமன்றத்தில் இதுபற்றி பேசினேன்.

கடன் தள்ளுபடி என்பது எளிதானதாக இருக்கலாம். எங்களுக்கும் வசதியானதாக இருக்கலாம். நாங்களும் அரசியல், தேர்தல் பலன்களை அடைவதற்காக அதை செய்து விடலாம். ஆனால் அத்தகைய பாவத்தை எங்களால் செய்ய முடியாது. ஏனென்றால் கடன் தள்ளுபடி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டுமே பலனைத் தரும்.

ஆனால் இப்போது வழங்குவது உங்கள் பணம். இது திரும்பப் பெறப்பட மாட்டாது. எனவே வதந்திகளை நம்ப வேண்டாம். கவனமுடன் இருங்கள். இந்த தொகையை கொண்டு விவசாயிகள் தங்கள் உடனடி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

இதற்கு முன்பாக பதவியில் இருந்த அரசுகள் விவசாயிகளுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை. எனவே அவர்களால் சரியான முடிவு எடுக்க முடியவில்லை. எனவேதான் 2014-ம் ஆண்டில் இந்த நிலைமையை மாற்றுவதற்காக நீங்கள் பாரதீய ஜனதா அரசை தேர்ந்தெடுத்தீர்கள்.

விவசாயிகள் 2022-ம் ஆண்டுக்குள் தங்கள் வருமானத்தை இரண்டு மடங்காக பெருக்கிகொள்வதற்கு, எங்கள் அரசால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் நேர்மையுடன் செய்வோம்.

அரசால் 100 ரூபாய் வழங்கப்படுகிறதென்றால், அதில் 85 ரூபாய் இடைத்தரகர்களால் பறிக்கப்பட்ட காலம் எல்லாம் போய் விட்டது. இந்த திட்டத்தில் இடைத்தரகர்கள் எல்லாம் கிடையாது.

இந்த திட்டம் எந்தவிதமான தவறும் இன்றி, முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பயனாளிகளை அடையாளம் கண்டு பட்டியல் அளிக்குமாறு மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

ப. சிதம்பரம் சாடல்

முன்னதாக பிரதமர் மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்ததை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் கடுமையாக சாடி, டுவிட்டரில் பதிவுகள் வெளியிட்டார்.

அதில் அவர்,“ இன்று (நேற்று) ஓட்டுக்காக ரூ.2 ஆயிரம், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாய குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரத்தை அதிகாரப்பூர்வ லஞ்சமாக பாரதீய ஜனதா கூட்டணி அரசு தருகிறது. விவசாயிகளுக்கு ஓட்டுக்காக லஞ்சம் தருவதை தேர்தல் கமிஷனால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்பது மிகவும் வெட்கக்கேடானது” என கூறி உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக