செவ்வாய், 1 ஜனவரி, 2019

பாகவதர் படங்கள்: கிடைக்காத பொக்கிஷங்கள்.. oldmadraspress.com என்ற இணையதளத்தில்

பாகவதர் படங்கள்: கிடைக்காத பொக்கிஷங்கள்!
மின்னம்பலம் -D.V.பாலகிருஷ்ணன் :
ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் (1910 – 1959) இறந்து 60 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு அவரை அன்றைய இளைய தலைமுறையினர் பெரிதும் மறந்துவிட்டார்கள் என்பதுபோல ஒரு தோற்றம் நிலவியது. பாகவதர் படங்கள் இன்னொரு முறை காணக் கிடைக்காதா என்று ஏங்கும் நிலைமை இருந்தது. அப்போது தூர்தர்ஷன் வழங்கிய ஒரே ஒரு தொலைக்காட்சி அலைவரிசைதான் இருந்தது. 1980களில் ஒரு கார்த்திகை தீபத்தன்று பல வெட்டுகளுடன் சிவகவி படம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்பட்டபோது என் போன்ற பாகவதர் ரசிகர்கள் அதை ஆவலுடன் எதிர்பார்த்து மனம் மகிழ பார்த்து அனுபவித்ததெல்லாம் இன்று பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், இன்று அவருடைய படங்களில் பல காணொளியாக நாமே சொந்தமாக வைத்துப் பார்க்கும் வகையில் எளிதில் கிடைக்கின்றன. ‘யூடியூப்’பில் அவருடைய படங்களுக்கும் பாடல்களுக்கும் கிடைக்கும் பாராட்டுக் கருத்துகளைப் படிக்கும்போது அவரை இன்றும் பலர் ஞாபகம் வைத்துப் பாராட்டுகிறார்கள் என்பது தெரிகிறது.

சரித்திரம் படைத்த அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவர் நடித்த படங்களைப் பற்றியும் அவர் பாடிய சாகாவரம் பெற்ற பாடல்களைப் பற்றியும் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால், அவர் நடிப்பில் வெளிவராத படங்களைப் பற்றி பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவை நமக்குக் கிடைக்காத பொக்கிஷங்களாகவே நின்றுவிட்டன. அவற்றைப் பற்றி இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.
தமிழ் பேசும் படம் தொடங்கிய காலத்திலிருந்து சுமார் 15 வருடங்கள் முடிவடைவதற்கு முன்பே தமிழ் சினிமா மக்கள் மனதில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ‘கோல்டு ரஷ்’ என்று சொல்வார்களே அது போன்ற காலம் அது. திடீரென்று பல புதிய தயாரிப்பாளர்கள், பல புதிய இயக்குநர்கள், பல புதிய நடிகர் - நடிகைகள், பல புதிய இசை அமைப்பாளர்கள், பல புதிய தொழில்நுட்பக் கலைஞர்கள் சினிமா உலகை நோக்கிப் படையெடுத்தனர். கூடவே பல புதிய ஸ்டுடியோக்களும் சினிமா செய்திகளுக்காகவே நடத்தப்பெற்ற பல புதிய பத்திரிகைகளும் தோன்றின. 1931இல் பேசத் தொடங்கிய தமிழ் சினிமா 1934 முடியும் வரை ஒரு மந்த நிலையில் இருந்ததென்று சொல்லலாம். ஆனால் 1935இல் இருந்து சினிமாப் பித்து தீப்போல் பற்றிக்கொண்டது. ‘அவர் இந்தப் படத்தில் நடிக்கிறார்’, ‘அந்த ஸ்டுடியோவில் இந்தப் படம் பாதி முடிவடைந்துவிட்டது’, ‘அந்தப் படத்தின் தயாரிப்பு முடிவடைந்து திரைக்கு வரத் தயாராக இருக்கிறது’ என்பது போன்ற செய்திகள் இடைவிடாது வந்துகொண்டே இருந்தன. பல படங்கள் வெளிவந்த அதே நேரத்தில் என்ன ஆயிற்று என்று தெரியாமல் காணாமல்போன படங்களும் உண்டு.
அப்படிப்பட்ட காலகட்டத்தில் பாகவதர் நடிப்பில் வெளிவருவதாக அறிவிப்பு மட்டுமே வெளிவந்த படங்களும் உண்டு, தயாரிப்பு தொடங்கி ஏதோ ஒரு கட்டத்தில் நின்றுவிட்ட படங்களும் உண்டு. வெளிவராத படங்கள் என்ற வரிசையில் ‘விக்ரம ஸ்த்ரீ சாகசம்’ என்ற படத்தை முதலில் குறிப்பிட வேண்டும். 1936இல் பாகவதர் நடிப்பில் இப்படி ஒரு படம் வருவதாக அறிவிப்பு மட்டுமே வந்தது. 1936இல் அவருடைய சொந்தத் தயாரிப்பான ‘சத்திய சீலன்’ வெளிவந்தது. அடுத்த வருடம் வெளிவந்த சிந்தாமணி, அம்பிகாபதி இவ்விரண்டு படங்களின் அபார வெற்றியின்மூலம் அவர் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றார் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். 1942இல் அவர் தமிழ்த் திரை உலகின் உச்ச நட்சத்திரமாக இருந்த நேரத்தில் ‘ஹரிச்சந்திரா’ என்ற படம் அவர் நடிப்பில் வருவதாக விளம்பரங்கள் வந்தன. ஆனால், இந்தப் படமும் தயாரிக்கப்படவில்லை.

1944 வரை ஒரு வருடத்துக்கு அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு படம் என்ற முறையில் நடித்துக்கொண்டிருந்த பாகவதர் ஒரே நேரத்தில் பத்துப் படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டார். அவை ஜீவகன், காளிதாஸ், ராஜ யோகி, உதயணன், பில்ஹணன், பக்த மேதா, வால்மீகி, நம்பி ஆண்டார் நம்பி, ஸ்ரீமுருகன், ஹரிதாஸ்.
இவற்றில் ஹரிதாஸ் மட்டும்தான் வெளிவந்தது. மற்ற படங்கள் வெளிவரவில்லை. அதற்குக் காரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய லட்சுமிகாந்தன் கொலை வழக்கும் அதைத் தொடர்ந்த சிறைவாசமும்தான். அந்த வழக்கில் என்ன நடந்தது என்று இங்கு விரிவாக அல்ல சுருக்கமாகக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும் குற்றமற்றவர்கள் என்பதை மட்டும் திட்டவட்டமாகக் குறிப்பிட விரும்புகிறேன். செய்யாத குற்றத்துக்குச் சிறை தண்டனை அனுபவித்தார்கள்.
சிறைவாசத்தின் விளைவாக பாகவதர் நடிக்க ஒப்புக்கொண்ட அநேக படங்கள் அப்படியே நின்றுபோய் விட்டன. சிலவற்றின் படப்பிடிப்பு தொடங்கவே இல்லைபோல் தெரிகிறது. சிலவற்றின் படப்பிடிப்பு பாதியில் நின்றுவிட்டது. ராஜ யோகியின் தயாரிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. பாகவதர் சிறையிலிருந்த 1946ஆம் வருடத்தில்கூட ராஜ யோகி வெளிவந்துவிடும் என்ற நம்பிக்கையூட்டும் வகையில் அந்தப் படத்தின் விளம்பரங்கள் வந்துகொண்டிருந்தன. 1947இல் சிறையிலிருந்து விடுதலையான பிறகு ராஜ யோகியின் பட உரிமையை வாங்கி தானே அதை முடித்து வெளியிடப் போகிறார் பாகவதர் என்ற செய்தியும் வந்தது. ஆனால், ராஜ யோகி வெளிவராத படங்களின் வரிசையிலேயே நின்றுவிட்டது.
பாகவதரின் கடைசிப் படமான சிவகாமியில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அவர் ராஜ யோகிக்காகப் பாடி ஒலிப்பதிவு செய்தவை என்ற செய்தி இருக்கிறது. அவர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்தவுடன் எடுத்த முதல் படம் ராஜ முக்தி. இந்தப் படம் ராஜ யோகியைத் தழுவி இருந்திருக்கக்கூடும். ராஜ முக்தியில் அவர் ஒரு கூட்டத்துடன் பாடும் ‘உன்னையல்லால் ஒரு துரும்பசையுமோ’ என்ற பாடல் ‘தெய்வ கனக சபையை’ என்ற பாடலை ஒத்திருப்பதுபோல் தோன்றுகிறது. மேலே தெரியும் ராஜ யோகி பட விளம்பரத்தில் பானுமதி நடிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், முதலில் வசுந்தராதான் ராஜ யோகியில் நடிப்பதாக இருந்தது. வெளிவந்த ராஜ முக்தியில் பானுமதி நடித்தார் என்று பலருக்குத் தெரிந்திருக்கும்.
ராஜ முக்தி வெற்றியடையவில்லை, ஆனால் படுதோல்வியடையவும் இல்லை. அதன் பிறகு பாகவதர் பட உலகில் நாட்டம் இல்லாதவர்போல் காணப்பட்டார். மேடைக் கச்சேரிகளில் அதிக கவனம் செலுத்தினார். இதன் காரணமாக அவர் நடிப்பதாக அவ்வப்போது செய்தி வெளிவந்த படங்கள் தயாரிக்கப்படாமல் போய்விட்டன.

1950இல் சக்தி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் விதி என்று ஒரு படத்தில் அவர் நடிக்கவிருப்பதாகச் செய்தி வந்தது. விதி படத்தின் இயக்குநர் புகழ்பெற்ற கே. சுப்பிரமணியம் என்றும் அறிவிக்கப்பட்டது. அதே வருடத்தில் பாகவதர் மோஹினித் தீவு என்ற படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் வந்தது. விதி படத்தின் தயாரிப்பு தொடங்கியது. சில பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. மோஹினித் தீவைப் பற்றித் தெரியவில்லை. ஆனால், இவ்விரண்டு படங்களும் வெளிவரவில்லை. 1952இல் அவர் நடித்த அமரகவி, சியாமளா என்ற இரண்டு படங்கள் வந்தன.
1953இல் நாதஸ்வர சக்கரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளையுடன் நாதஸ்வர வித்வானாக ஒரு படத்தில் அவர் நடிக்கப்போவதாகச் செய்திகள் வந்தன. இந்தப் படத்துக்காக அவர் நாதஸ்வரம் வாசிப்பதுபோல் புகைப்படங்களும் எடுக்கப்பட்டன. ராஜரத்தினம் பிள்ளை வாசித்த நாதஸ்வர இசையும் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் படமும் தயாரிக்கப்படாத படங்களில் ஒன்றாக நின்றுவிட்டது.
1955இல் சன் லைட் பிக்சர்ஸ் பாகவதருடன் பண்டரிபாயை வைத்து பட்டினத்தார் என்ற படத்தைத் தயாரிக்கப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. ஆனால், அந்தப் படமும் தயாரிக்கப்படவில்லை. எந்த வருடம் என்று தெரியவில்லை. ஆனால், பாகவதர் நடிப்பில் வித்யாசாகர் என்று ஒரு படம் வருவதாகச் செய்தி வந்தது. அந்தப் படமும் தயாரிக்கப்படவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸைப் பற்றி ஜெய் ஹிந்த் என்று ஒரு படத்தில் பாகவதரும் நடிக்கப்போகிறார் என்ற செய்தி வந்தது. ஆனால், அப்படி ஒரு படம் தயாரிக்கப்படவில்லை. இந்த வரிசையில் அவர் நடிப்பில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட ஞான வள்ளல் என்ற படத்தையும் குறிப்பிட வேண்டும்.
அவர் சிவாஜி கணேசனுடன் நடிக்கும் பாக்ய சக்கரம் என்ற படத்தைச் சொந்தமாகத் தயாரிப்பதாக 1956 முதல் செய்திகள் வந்தன. அதே காலகட்டத்தில் எம்.ஆர்.ராதாவுடன் நடிக்கும் வசந்தசேனா என்ற படமும் வருவதாக விளம்பரம் வந்தது. இவ்விரண்டு படங்களின் இயக்குநர் காலம்சென்ற நடிகர் வி.எஸ்.ராகவன். ஆனால், அவ்விரண்டு படங்களும் தயாரிக்கப்படவில்லை.
1957இல் வெளிவந்த பாகவதரின் சொந்தப் படமான புது வாழ்வு தோல்வியடைந்தது. அத்துடன் அவருடைய திரை வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டதென்றே சொல்ல வேண்டும். 1.11.1959 அன்று அவர் மறைந்தார். சிவகாமி அவர் இறந்த பின் வெளிவந்த படம்.

பாகவதர் நடித்து வெளிவந்த படங்கள் மொத்தம் 14 தான். அதோடு ஒப்பிட்டால் அவர் நடிப்பதாகச் செய்திகள் வந்து ஆனால் வெளிவராத படங்களின் எண்ணிக்கைதான் அதிகம். ஒரு படத்துக்கு ஆறு பாடல்கள் என்று வைத்துக்கொண்டால்கூட குறைந்தது அறுபதிலிருந்து நூறு பாடல்கள் வரை நமக்குக் கிடைக்காத துரதிருஷ்டமாகப் போய்விட்டது. அவர் நடித்து வெளிவந்த படங்களில்கூட நமக்கு எல்லாப் படங்களும் கிடைக்கவில்லை. கிடைத்திருக்கும் கையளவு படங்களும் பாடல்களும் பொக்கிஷங்கள். அவற்றின் மூலம் அவருடைய புகழும் தமிழ்த் திரை உலக வரலாற்றில் அவர் பெற்றிருக்கும் தனிப்பெரும் அந்தஸ்தும் என்றுமே மங்காது நிலைத்திருக்கும்.
(கட்டுரையாளர் D.V.பாலகிருஷ்ணன் இந்தியன் வங்கியிலிருந்து ஓய்வு பெற்ற உதவி பொது மேலாளர். அவர் எழுதிய எம்.கே.டி. பாகவதர்: இசையும் வாழ்க்கையும் என்ற புத்தகம் தற்போது வெளிவந்துள்ளது. அந்தப் புத்தகத்தைப் பற்றிய அறிமுகக் காணொளி ‘யூடியூப்’பில் உள்ளது. ஐந்நூறுக்கு மேற்பட்ட படங்களும் இணைப்பாகப் பல அரிய பாடல்கள் கொண்ட குறுந்தட்டும் அந்தப் புத்தகத்தில் உள்ளன. மேலும் விவரங்களுக்கு www.oldmadraspress.com என்ற இணையதளத்தில் பாருங்கள்.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக