ஞாயிறு, 13 ஜனவரி, 2019

திரமென்ஹீர் .. பஞ்சமி நிலப் போராட்ட வரலாற்றோடு ஓர் அடையாளமாகிய James Henry Apperley Tremenheere

ஒரு சிலையின் கதை! - ஸ்டாலின் ராஜாங்கம்மின்னம்பலம் - ஸ்டாலின் ராஜாங்கம்:   நீலம் பண்பாட்டு மையத்தின் வானம் கலை விழாவில் உருவாக்கப்பட்ட திரமென்ஹீர் சிலையின் கதை! நீலம் பண்பாட்டு மையம் சார்பாகப் புத்தாண்டையொட்டி நடந்த வானம் கலைத் திருவிழாவில் அமைக்கப்பட்டிருந்த நந்தா விளக்கு என்ற பெயரிலான சிற்பக் கண்காட்சி, வந்திருந்தோரின் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. தமிழகத்தில் 1890 தொடங்கி 1990 வரையிலான காலப் பகுதியில் செயல்பட்ட தலித் ஆளுமைகளுள் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கேற்பச் சிலரைத் தேர்ந்தெடுத்து 28 சிற்பங்கள் என்ற அளவில் அங்கு வைத்திருந்தனர்.

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி டிசம்பர் 8ஆம் நாள் ஓவியர் சந்ரு தலைமையில் தமிழகத்தின் பிரதான ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் ஒன்றுகூடி இந்தச் சிற்ப வடிவமைப்பில் ஈடுபட்டனர். வானம் திருவிழாவில் இச்சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தாலும் சிற்பமாக வடிப்பதையே ஒரு கண்காட்சியாக மாற்றியிருந்தனர். தமிழக அளவில் அறியப்பட்ட ஆளுமைகள் தவிர, தமிழகத்தில் வட்டார அளவில் செயல்பட்டு அறியப்படாத உள்ளூர் ஆளுமைகள் சிலரும் முதன்முறையாக இந்தச் சிற்ப வரிசையில் இடம்பெற்றிருந்தனர்.
இச்சிற்பங்களில் 25 பேர் தலித் ஆளுமைகள். மூவர் மட்டுமே தலித் அல்லாத ஆளுமைகள். அம்மூவரில் பெரியார், லட்சுமண அய்யர் ஆகிய இருவரும் உள்ளுர்க்காரர்களாய் இருக்க, ஒருவர் மட்டும் தலித் அல்லாதவராய் இருந்தது மட்டுமல்லர்; இந்தியர் அல்லாத வெள்ளைக்காரராகவும் இருந்தார். அந்த நிலையில்தான் அச்சிற்பம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. பலரும் அச்சிற்பத்தோடு நின்று படமெடுத்துக்கொண்டனர். அவர் பற்றிய குறிப்பை உன்னிப்பாய் படித்துக்கொண்டனர். அவர் பெயர் ஜேம்ஸ் திரமென்ஹீர்.
உள்ளூர்க்காரர்கள் நிறைந்த கூட்டத்தில் அவர் மட்டும் ‘அந்நியமாய்’ தெரிந்ததே இந்த வியப்புக்குக் காரணம். இங்கு தலித் அல்லாதோர் பலரும் செயல்பட்டிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒரு வெள்ளைக்காரர் என்ன செய்திருக்க முடியும்? தலித் ஆளுமைகளுக்கு மத்தியில் இடம் பெறக்கூடிய அளவுக்கு அவர் என்ன செய்தார்?
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஒன்றுபட்ட சென்னை மாகாணத்தின் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தவர் ஜே.எச்.ஏ. திரமென்ஹீர். அவர் 1892ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் நாள் ‘செங்கல்பட்டு பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கை ஒன்றைச் சென்னை அரசாங்கத்திடம் சமர்ப்பித்தார். சென்னை மாகாண ஒடுக்கப்பட்ட மக்களின் தாழ்ந்த நிலையை விவரித்து அதற்கான காரணங்களையும் அவ்வறிக்கை குறிப்பிட்டிருந்தது. அவர்களின் தாழ்நிலையை மாற்றச் சில பரிந்துரைகளையும் அந்த அறிக்கை பரிந்துரைத்திருந்தது.
நிலமின்மையால் வாழ்வாரத்தை இழந்து நிலவுடைமையாளர்களின் நிலங்களில் குறைந்த கூலிகளாகவும் நீண்ட நேரம் உழைப்பவர்களாகவும் இம்மக்கள் கிடக்கின்றனர். இவர்களின் வாழ்க்கை தற்சார்பானதாக மாறுவதற்கு நிலம் அவசியம் என்றும் அதற்கு மிராசி முறையில் மிராசுகளுக்குப் பயனளித்துவரும் தரிசு நிலங்களைப் பஞ்சமர்களுக்கு வழங்கலாம் என்றும் அவரின் அறிக்கை மேலும் பரிந்துரைத்தது.
தலித் முன்னோடிகளின் விண்ணப்பங்களும் கிறிஸ்துவ மறை பரப்பாளர்களின் பதிவுகளும் தொடர்ந்து இருந்து வந்திருப்பினும் தங்களின் அதிகார நலனுக்குட்பட்டு பிரித்தானிய அரசு தலித்துகளுக்கு நிலம் வழங்கும் முடிவுக்கு இப்பரிந்துரையே முக்கியக் காரணமானது. அதாவது டி.சி. நிலம் என்று இன்றைக்கு அழைக்கப்படும் பஞ்சமர் நிலத்துக்கான கருத்துரு இந்த அறிக்கைதான். இதன்படி 12 லட்சம் ஏக்கர் நிலம் பரிந்துரைக்கப்பட்டது.

அறியப்படாத பெயர்
எனினும் பரிந்துரைத்த அவரின் பெயர் நீண்ட காலம் இங்கு அறியப்படாமலும் பரவலாக்கப்படாமலும் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்நிலங்கள் பரிந்துரைக்கப்பட்டன என்ற தகவல் மட்டும் அரசல் புரசலாக புழங்கி வந்தது. அதனால் திரமென்ஹீரின் பெயர் ஆவணத்துக்கு வெளியே, அதாவது அரசியல் வெளிக்கு வராமலே இருந்தது.
இந்த நிலையில் எந்தக் காரணங்களை ஒட்டி தலித் அல்லாதோர் வாங்க முடியாதென்ற சட்டப் பாதுகாப்போடு தலித்துகளுக்கு இந்நிலங்கள் வழங்கப்பட்டனவோ, அதே காரணங்கள் திரும்ப நிகழ்த்தப்பட்டு இந்த 100 ஆண்டுக் காலத்தில் மீண்டும் பறிக்கப்பட்டிருப்பதை இப்போது பார்க்கிறோம். அதாவது 12 லட்சம் ஏக்கரில் 10 லட்சத்து 73 ஆயிரத்து 887 ஏக்கர் நிலம் இன்றைக்குப் பிறரிடம் முடங்கிக் கிடக்கிறது. அது தொடர்பான ஆவணங்கள் அழிக்கப்பட்டும், திருத்தப்பட்டும் இந்த மாறுபாடுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. இந்த மோசடிகள் தாமதமாகவே அறியப்பட்டன.
தலித் தலைவர்களும் அமைப்புகளும் தொடர்ந்து இதைப் பேசிவந்தன என்ற போதிலும் 1990களில் உருவான புதிய வகை தலித் எழுச்சிக் காலத்தில் பஞ்சமி நிலவுரிமைப் போராட்டம் தலித் அரசியல் களத்தில் புலப்படும்படியான வடிவத்தில் வெளிப்பட்டது. குறிப்பாக செங்கல்பட்டு அருகேயுள்ள காரணை என்ற கிராமத்தில் நடத்த போராட்டத்தில் ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இருவர் காவல் துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர். அதற்குப் பின்னர் பஞ்சமி நிலவுரிமை என்ற சொல்லாடல் முறைப்படியாகவும் தொடர்ச்சியாகவும் போராட்ட வடிவமாக மாறி அழுத்தம் பெற முடியவில்லையென்றாலும் தலித் மக்களுக்கான அரசியல் உரிமைக் களத்தில் பஞ்சமி நிலவுரிமை கோரிக்கை என்பது இன்றைக்கு முக்கியமான இடத்தை எடுத்திருக்கிறது. ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இருவரின் இழப்பும் அவர்களின் பிம்பத்தோடு கூடிய நினைவு நாளும் பஞ்சமி நிலவுரிமைக்கான அடையாளமாக மாறியிருக்கின்றன.
இதே காலகட்டத்தில்தான் திரமென்ஹீர் பெயரும் மேலுக்கு வந்தது. பஞ்சமி நிலம் கிடைத்த வரலாற்றை, போராட்டச் சூழலை ஒட்டிப் பேச வேண்டி வந்தபோது அவரின் பெயர் இச்சொல்லாடலோடு இணைய வேண்டிய அவசியம் வந்தது. இப்போது அவரின் பெயர் ஜான் தாமஸ், ஏழுமலை என்ற இரு தியாகிகளின் பெயர்களைப் போல் உச்சரிக்கப்படுவதாக மாறிவருகிறது. இதன்படி இன்றைய பஞ்சமி நிலப் போராட்ட வரலாற்றோடு இவரின் பெயரும் ஓர் அடையாளமாக அழுத்தம் அடைகிறது. ஜான் தாமஸும் ஏழுமலையும் போராடியதற்கான அடையாளமாய் இருக்க, திரமென்ஹீர் பெயரோ ‘அந்நியனான வெள்ளைக்காரன்கூட நிலம் கொடுத்திருக்கிறான்; இந்திய சுதேசிகளோ பறித்திருக்கிறார்கள்’ என்று உள்ளூர் சாதி வன்மையைச் சுட்டுவதற்கான அடையாளம் போன்று மாறியிருக்கிறது.
இந்தப் பின்னணியில்தான் திரமென்ஹீரின் பிம்பம் தலித் அரசியலில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால், இது உடனடியாகவோ, எளிமையாகவோ நடைபெற்றுவிடவில்லை. இதில் ஒரு வளர்ச்சிப் போக்கு இருக்கிறது. இதை அறிவது பிம்ப உருவாக்கத்தின் வளர்ச்சியைப் புரிந்துகொள்ள உதவலாம்.
திரமென்ஹீரின் உருவம் இவ்வாறு பொதுக் கவனத்துக்குக் கொண்டுவரப்படுவதற்குப் பின்னால் பலரின் சிறுகச் சிறுக அமைந்த உழைப்பும் ஆர்வமும் இருக்கிறது. அந்த உழைப்பின், ஆர்வத்தின் அடுத்த கட்டம்தான் இந்தச் சிலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக