ஞாயிறு, 13 ஜனவரி, 2019

உயர்கல்வியில் தலித், பழங்குடியினர் நிலை!

மின்னம்பலம் : சிறப்புச் செய்தி: உயர்கல்வியில் தலித், பழங்குடியினர் நிலை! முன்னேறிய வகுப்பினருக்குக்
முதல் பழங்குடி இன மருத்துவ பட்டதாரி
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தின் வெளியில் பாரதிய ஜனதா கட்சியின் இம்முயற்சிக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அகில இந்திய அளவில் மசோதாவை ஆதரித்து வாக்களித்திருக்கிற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளில் கூட தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மத்திய அரசுப் பணியிடங்களில் ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான வேலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் மக்களைவில் ஒன்றிய அரசு அளிக்கும் தகவல்களிலிருந்து தெரிய வருகிறது. 1971ஆம் ஆண்டில் மத்திய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 26.99 லட்சமாக இருந்தது.

இது 2014ஆம் ஆண்டில் 32.24 லட்சமாக மட்டுமே உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக 1995ஆம் ஆண்டில் 39.82 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளை வழங்கியிருந்தது. இதில் தேவையான பணியிடங்களுக்கும், நிரப்பப்பட்டுள்ள பணியிடங்களுக்குமான இடைவெளி 2012ஆம் ஆண்டில் 6 லட்சமாகவும், 2013ஆம் ஆண்டில் 5.31 லட்சமாகவும், 2014ஆம் ஆண்டில் 4 .22 லட்சமாகவும் இருந்தது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சாதி வாரியான மக்களின் பங்கேற்பு விகிதம் என்ன என்பது குறித்து ஆராய்ந்தால் இந்தியாவில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு பெற்றுக்கொண்டிருக்கிற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் பங்கேற்பு விகிதத்தைக் காட்டிலும் முன்னேறிய சமூகத்தினரின் பங்கேற்பு விகிதம் என்பது மிக உயர்வாகவே உள்ளது.
அனைத்திந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையே இதை உறுதிப்படுத்துகிறது. மற்ற உலக நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் விகிதம் மிகவும் குறைவுதான். 18 வயது முதல் 23 வயது வரையிலான உயர் கல்வி கற்போரின் மொத்த பதிவு விகிதம் இந்தியாவில் சராசரியாக 25 விழுக்காடாக மட்டுமே உள்ளது. ஆனால், இது தென்கொரியாவில் 93 விழுக்காடாகவும், சீனாவில் 48 விழுக்காடாகவும் உள்ளது. தமிழ்நாட்டில் இந்திய சராசரியுடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு மாணவ-மாணவியர் உயர்கல்வி கற்கின்றனர். ஆனால், இந்திய அளவில் உயர்கல்வி கற்கும் மாணவி-மாணவியரின் எண்ணிக்கை மிகக் குறைவான இருப்பதற்கு இட ஒதுக்கீடு முறைகள் முறையாக அமல்படுத்தப்படாததும் முக்கியக் காரணமாக உள்ளது.
இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் மொத்த பதிவு விகிதமானது 2012 - 13ஆம் நிதியாண்டில் 21.5 விழுக்காடாக இருந்தது. இதில் கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 4 விழுக்காடு வளர்ச்சி மட்டுமே காணப்பட்டுள்ளது. 2016 - 17ஆம் ஆண்டில் உயர் கல்வி கற்போரின் மொத்த பதிவு விகிதம் 25.2 விழுக்காடாக மட்டுமே அதிகரித்துள்ளது. 2013 - 14ஆம் நிதியாண்டில் 23 விழுக்காடாகவும், 2014 - 15ஆம் நிதியாண்டில் 24.3 விழுக்காடாகவும், 2015 - 16ஆம் நிதியாண்டில் 24.5 விழுக்காடாகவும் இருந்தது.
உயர்கல்வியில் சமூக ரீதியான பங்கேற்பு விகிதம் குறித்த அட்டவணை:

எனவே, பொதுப்பிரிவினருக்குக் கல்வியில் தனி இட ஒதுக்கீடு இல்லாதபோதே அவர்கள்தான் உயர்கல்வியில் நிறைந்திருக்கிறார்கள் என்பது இதன்மூலம் தெரிய வருகிறது. பட்டியலின மக்களுக்கு 15 விழுக்காடும், பழங்குடியின மக்களுக்கு 7.5 விழுக்காடும் இட ஒதுக்கீடு இருந்தும் அவர்களின் உயர்கல்வி பங்கேற்பு விகிதம் என்பது மிக மோசமான நிலையில்தான் உள்ளது. உயர்கல்வியிலேயே இந்த இரு சமூகக் குழுக்களும் இன்னும் தடுமாறிக்கொண்டிருக்கும் நிலையில், உயர்கல்வி கற்றால்தான் அரசு வேலைகளுக்கு வர முடியும் என்ற சூழலில் வேலைவாய்ப்புகளில் இவர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதும் சிந்திக்க வேண்டியது. எனவே, ஏற்கெனவே நடைமுறையில் இருக்கிற இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டியதே தற்போதைய நிலையில் அவசியமாக இருக்கிறது.
தகவல்கள் : தி எகனாமிக் டைம்ஸ்
தமிழில் : பிரகாசு
மின்னஞ்சல் முகவரி : feedback@minnambalam.com
முந்தைய பகுதிகள் :
பழங்குடியினர் இட ஒதுக்கீட்டின் நிலை!
இட ஒதுக்கீடு: புறக்கணிக்கப்படும் பிற்படுத்தப்பட்டோர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக