திங்கள், 21 ஜனவரி, 2019

தினத்தந்தி ஆதித்தனாரை காமராஜர் ஏன் வெறுத்தார்? தந்தி வாசனை..

 பேராசிரியர்.மு.நாகநாதன்: தமிழ் நாளிதழ்களில் தினத்தந்தி இதழ்
தனித்துவமானது. மறைந்த சி.பா.ஆதித்தனார் மிகவும் பாடுபட்டு, பல அறைகூவல்களை சந்தித்து இந்த நாளிதழை‌, செய்தி ஊடகச் சந்தையில் நிலைப் பெறச் செய்தார்.
அரிய சாதனை.
பள்ளி‌ பருவத்திலேயே இந்த இதழை படிக்கத் தொடங்கினேன்.
இன்று வரை வாங்கிப் படித்து வருகிறேன்.
தொழில் நுட்ப வளர்ச்சியால் தந்திப்பிரிவு அஞ்சல் துறையிலிருந்து நீக்கப்பட்டது..
தந்தியை நினைவு படுத்திக்கொண்டு விரைவான செய்திகளை தினத்தந்தி முந்தித்தருகிறது.
இதழுக்கு இலட்சியம் இருந்ததா?
இருக்க வேண்டுமா?
இக்கேள்விகளுக்கு எல்லாம் விடை காண முடியுமா?
தற்போது நடப்பது சந்தை வணிகம்தானே!
சதை வணிக போட்டியாக மாறாமல் இருந்தால் போதுமே!
காங்கிரசு ஆட்சியில் முதல்வர் காமராசரை ஆதரித்து செய்திகளை வெளியிடுவதில் முதன்மையான ஏடுகளில் தந்தி ஏடும் ஒன்று.
அக்காலத்தில் காங்கிரசுக் கட்சியின்
தீவிர ஆதரவாளர்கள் ஒரு கையில் நவசக்தி ஏட்டினையும் ,தந்தியையும் வைத்திருப்பார்கள்.
அறிஞர் அண்ணா காஞ்சியில் சட்டமன்ற தேர்தலில் 1962 ஆம் ஆண்டு போட்டியிட்டபோது, அண்ணாவை எதிர்த்து பேருந்துகளின் முதலாளி நடேச(முதலியார்) போட்டியிட்டார்.
அண்ணாவை தோற்கடிக்க வேண்டும் என்று காமராசரும் காங்கிரசு கட்சியினரும் முழு முயற்சி செய்தனர்.

அறிஞர் அண்ணாவின் பேச்சையோ மற்ற கழக முன்னணி தலைவர்களின் பேச்சோ தந்தியில்இடம் பெறாது.
இடம் பெற்றாலும் ஆளும் கட்சியின் மனம் குளிர வைப்பதாக இருக்கும்.
அப்போது அறிஞர் அண்ணாவின்
பேச்சின்‌ ஒரு பகுதியை வெட்டி ஒட்டி ஆளும்கட்சிக்கட்சிக்கு சாதகமாக
"நடேச ( முதலியார்) சாணி"
அண்ணாதுரை சந்தனம்" என்றுஅண்ணாவின் உவமையை தவறான பொருள் படும் படி செய்திவெளியிட்டது.
வழக்கம் போல அண்ணா இதைப் பற்றியெல்லாம் கவலைப்பட்டதில்லை.கண்டு கொண்டதும் இல்லை.
எம்.ஜி.ஆர் நடித்த" நீதிக்குப் பின் பாசம் "
என்ற திரைப்படம் வெளியானபோது,"பாதிக்கு பின் மோசம்"என்று திரைப்பட திறனாய்வு செய்தது.
அப்படம் நூறு நாட்கள் ஓடியது.
எம்.ஜி.ஆர் இதையெல்லாம் நினைத்து மனம் கொதித்து போனார்.
1965 இல்
ஆதித்தனாரையும் ,தந்தி ஏட்டையும் தாக்குவது போல கதை அமைக்கப்பட்டது.சந்திரோதயம் திரைப்படம் வெளியானது.
சிறந்த திராவிட இயக்க எழுத்தாளரான ஏ.கே.வில்வம் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதா ஏட்டின் உரிமையாளர் வேடத்தில் வில்லனாக நடித்தார்
.எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த இப்படம் 100நாட்கள் ஓடியது.
இது போன்ற பலஎதிர்ப்புகளை சந்தித்து தான் அறிஞர் அண்ணா தலைமையில்
1967இல் திமுக பெரும் வெற்றியைப் பெற்றது.ஆட்சி அமைத்தது.
1967இல் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் திமுக அணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முதலாக தேர்தலில் சி.பா.ஆதித்தனார் வெற்றிப் பெற்றார்.
அமைச்சர் பொறுப்பினைப் பெறுவதற்குஆதித்தனார் அண்ணாவிடம் வலியுறுத்தினார்.ஆனால் அண்ணா மறுத்த விட்டார்.
அண்ணா மறைவிற்குப் பிறகு 1969 இல்
கலைஞர் ஆட்சியில் ஆதித்தனார் கூட்டுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
நாம் தமிழர் கட்சியை கலைத்தார்.
1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் நாள் சாதி மறுப்பு, சுயமரியாதை திருமணமாக எனது திருமணம் நடைப்பெற்றது.
எனது மாமனார் க.ரா.ஜமதக்னியும் விடுதலைப் போராட்டக் காலத்தில் ஒரே சிறையில் ஒரே அறையில் 2ஆண்டு காலம் ஒன்றாகயிருந்தவர்கள்.
எனவே திருமணத்திற்கு முன்பு பெருந்தலைவர் காமராசரை சந்தித்து மணவிழா அழைப்பிதழை அளித்தேன்.
அவர் காட்டிய‌ அன்பில் உருகிப் போனேன்.
பெருந்தலைவர் காமராசரரை, மணம் முடித்து சில வாரங்கள் கழித்து
அவர் இல்லத்திற்கு வாழ்த்து பெற சென்றோம்.
என் மாமனாரும் அவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டுயிருந்தனர்.
அப்போது தினத்தந்திப் பற்றி காமராசர் குறிப்பிட்டது அதிர்ச்சியாகயிருந்து.
இப்போதெல்லாம் எனது செய்திகள் தந்தியில் முதன்மை பெறுவதில்லை.
ஏடு நடத்துபவர்களுக்கு விற்பனை அடிப்படையில் மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ள வாய்ப்பு அதிகம்.
1963 ஆம் ஆண்டிற்கு பிறகு
காங்கிரசு செய்திகளை குறைத்துக் கொண்டே தந்தி வந்தது.
1965 இல் இந்தி எதிர்ப்பு - மாணவர் போராட்டமாக வெடித்தது.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுக கூட்டணியில் ஆதித்தனார் இடம் பெற்றார்.
கலைஞர் அமைச்சரவையில் இன்று இடம் பெற்றுள்ளார்.
நெருக்கடி நிலையில் "கருணாநிதி"ஆட்சிக்கு எந்த நேரத்திலும் ஆபத்து வரலாம்.
அப்போது திமுக விலிருந்து முதலில் விலகுபவர் ஆதித்தனாராக தான் இருப்பார்.
என் அனுபவத்தை வைத்து இதை கூறுகிறேன் என்றார் பெருந்தலைவர் காமராசர்.
இதை உடனடியாக
கலைஞரிடம் குறிப்பிட்டேன்.
சில மாதங்கள் கழித்து 1976 ஆம் ஆண்டு ஜனவரி 31 நாள் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
இப்போது 90அகவையை எட்டிக் கொண்டிருக்கும் திரு.சபாநாயகம் தான்அப்போது தலைமைச் செயலாளர்.
சனவரி திங்களிள் ஒரு நாள் ‌தலைமைச் செயலாளர் அலுவலக அறைக்கு சென்று கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு.ஆதித்தனார் திருவாளர்.சபாநாயகத்திடம் ஒரு மடலை அளித்தார்.
அம் மடலில் தான் திமுக உறுப்பினர் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
திமுக ஆட்சி கலைக்கப்பட்ட மறுநாள்
மரியாதை நிமித்தம் காரணமாக கலைஞரைக் கண்டு விடைப்பெற்ற தலைமைச் செயலாளர் சபாநாயகம்
ஆதித்தனார் மடலை கலைஞரிடமே அளித்து விட்டார்.
இந்த நிகழ்விற்கு பின்பு பெருந்தலைவர் காமராசரின் பட்டறிவைக் கண்டு வியந்து கலைஞர் என்னிடம் பாராட்டினார். அவர் சொன்னது அப்படியே நடந்து விட்டதே என்றார் கலைஞர்.
இந்த நிகழ்விற்கு பிறகும் கூட கலைஞர் சிவந்தி ஆதித்தினிடம் பேரன்புக் காட்டினார்.
1996 இல் கலைஞர் முதல்வரானார்.
காலை நடைப்பயிற்சி முடித்து பல நேரங்களில் அவருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு உடன் செல்வேன்.
ஒரு நாள் காலை வேளையில் சிவந்தி முதல்வர் கலைஞரை கண்டு வாழ்த்துக்கள்தெரிவிக்க
வந்தார்.
நான் கலைஞரிடம் சொல்லாமல் என் இல்லத்திற்கு நடந்தே வந்துவிட்டேன்.
மறுநாள் சிவந்தி வந்தார் என்னிடம் வாழ்த்துக்கள் பெற்றார்.
முதல்வர் ஜெயலலிதாவின் செய்திகளை,வண்ணப்படங்களை முதல் பக்கத்தில் தினத்தந்தி வெளியிட்டதற்காக வருத்தப்படவேண்டாம்.
வெளியூர் பதிப்புகளில் உங்கள் செய்திகளும் வெளிவந்தன என்று சிவந்தி குறிப்பிட்டார்.
அண்ணா போன்று நான் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை .
அந்த அம்மையார் மீது நீ காட்டிய பந்தப் பாசத்தையும் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று
கலைஞர் குறிப்பிட்டுள்ளார்.
2006 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் 150 ஆண்டு விழா நடைபெற்றது.
15 நபர்களுக்கு முதுமுனைவர் பட்டம் அளிக்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் 36 ஆண்டுகள் பணி ஆற்றிய எனது கருத்தையும் முதல்வர் கலைஞர் கேட்டார்.
125 ஆண்டு நிறைவு விழாவில் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்து கொண்டபோது பின்பற்றிய மரபுகளை விளக்கினேன்.
துணை வேந்தர் பேராசிரியர்.ராமசந்திரனும் இதுபற்றி என்னிடம் விவாதித்தார்..
சென்னைப்பல்கலைக்கழக மாணவர்கள் பயன் பெறும் வகையில் திரு.சிவன்(நாடார்) குறைந்த விலையில் அவரது நிறுவனத்தின் சார்பில் கணிகளை வழங்கியுள்ளார்.
எனவே தொழில் முனைவோருக்கான பட்டியலில் சிவன் பெயரை இணைக்கலாம் என்றேன்.
.
கலைஞர் சிவந்தி பெயரையும் சேர்த்தார்.
சிவந்தியும் மகிழ்ந்தார்.
ஆனால் 2011 ஆண்டிற்கு பிறகு நடந்த தினத்தந்தி தொலைக்காட்சி கலைஞரை ஒருமையில் ஒருவர் வசைப்பாடியதை ஒளிபரப்பு செய்தது.
கலைஞரும் பார்த்து விட்டு போனா போரார் என்று தான் குறிப்பிட்டார்.
சிவந்தி உடல் நலிவுற்ற நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
அவருக்கு சிகிச்சை அளித்தவர் எனது மகன்கள்- மருத்துவர்கள்- முத்தழகள்,எழிலன் ஆகியோருக்கு மருத்துவம் கற்பித்த பேராசிரியர் கருணாநிதி.
சிவந்தி உயர் சிகிச்சை பெற்றுவருவதால்,பார்க்க வருகிறவர்கள் காலணியை அகற்றி விட்டு வரும்படிக்கூறினார்
என்று சொல்லி முதல்வர் ஜெயலலிதாவை அவமதிக்கும் விதமாக நடந்துக் கொண்டார் என்று பழி சுமத்தி
மத்திய சிறையில் மருத்துவரை ஒரு நாள் வைத்தார்கள்.
மும்பையிலிருந்து வரும் அரசியல் பொருளாதார ஏடு மட்டுமே இந்த சர்வாதிகாரச் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது.
தந்தி முதலாளிக்கு சிகிச்சை அளித்த புகழ்மிக்க மருத்துவரை சிறையில் அநியாயமாக அடைத்த போதும் தந்தியும் பாண்டேயும் அம்மா" தோத்திரம்" பாடி அமைதிக் கொண்டார்கள்.
.
தந்தை பெரியார் தான் எழும்பூரில் இருந்த டிராம் தொடர் வண்டிக்கு சொந்தமான இடத்தை 1950 கோளில் வாங்கினார்.
அதன் ஒரு பகுதியை ஆதித்தனாருக்கு விற்றார்.
இங்குதான் தந்தி அலுவலகம் இன்றுவரை இயங்கி வருகிறது.
என்னதான் பாஜக விற்கு பயப்பட்டாலும் பயன் பெற்றாலும்,
லட்சக் கணக்கில் இளைஞர்கள் பெரியார் வழியில் திருச்சியில் அணி திரண்ட செய்தியை
ஆங்கில இந்து நாளிதழ் போன்றே ஒற்றை வரி செய்தியாக கூட வெளியிடாமல் இருந்தது ஊடக நெறியா?
போனால்போகட்டும்!
கடந்த ஒரு வாரமாக முன்னால் வந்த செய்திகள் பின்பக்கம் செல்கின்றன.
பின்பக்க செய்திகள் முன்பக்கம் வருகின்றன..
தந்தி வழக்கம் போல் வாசனை பிடித்துவிட்டது! மோடி போகப் போகிறார் என்று!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக