திங்கள், 21 ஜனவரி, 2019

திமுக தேர்தல் பேச்சுவார்த்தைக் குழு அறிவிப்பு.. துரைமுருகன், இ.பெரியசாமி,, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு

மின்னம்பலம் : வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக சார்பில் ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று (ஜனவரி 20) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குக் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவுக்குத் தலைவராக திமுக பொருளாளர் துரைமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். குழு உறுப்பினர்களாக திமுக துணைப் பொதுச் செயலாளர் இ.பெரியசாமி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிகாரபூர்வ கூட்டணி குறித்த எந்தத் தகவலையும் இதுவரையில் தமிழகத்தில் எந்தக் கட்சியும் அளிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலை சந்திப்பதை திமுக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அண்மைக்காலமாக திமுகவுடன் தோழமைக் கட்சிகளாக இணைந்து செயல்பட்டுவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக