திங்கள், 7 ஜனவரி, 2019

திருவிடைமருதூர் மாணவன் கடத்தி கொலை: நண்பர்கள் கைது!

திருவிடைமருதூர் வாலிபர் கொலை: நண்பர்கள் கைது!மின்னம்பலம் : திருப்புவனம் ஆற்றங்கரையில் வாலிபர் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில், அவரது நண்பர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவரது மனைவி மும்தாஜ் பேகம். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் மும்தசீர் மயிலாடுதுறையிலுள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியொன்றில் படித்து வந்தார். சாகுல் ஹமீது துபாயில் பணியாற்றி வருகிறார்.
கடந்த 4ஆம் தேதியன்று கல்லூரிக்குச் சென்ற மும்தசீர், திருமங்கலக்குடியில் உள்ள தனது சகோதரியின் வீட்டுக்குச் செல்வதாக மும்தாஜ் பேகத்திடம் கூறியிருந்தார். இரவு 8 மணியளவில் மும்தசீர் செல்போனில் இருந்து மும்தாஜுக்கு அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசிய நபர்கள், “உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவன் உயிரோடு வேண்டுமானால் எங்களுக்கு ரூ.5 லட்சம் வேண்டும்” என்று மிரட்டினர். அதிர்ச்சியடைந்த மும்தாஜ் பேகம், தனது உறவினர்களுடன் திருவிடைமருதூர் காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார்.

போலீசார் அவரது செல்போனை தொடர்புகொண்டபோது, அது ‘ஸ்விட்ச் ஆஃப்’ செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், ஜனவரி 5ஆம் தேதியன்று காலை திருபுவனம் வீரசோழன் ஆற்றங்கரையில் கழுத்து அறுக்கப்பட்டு ஒரு வாலிபர் கொலையாகிக் கிடந்ததைப் பார்த்தனர் அப்பகுதியினர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மும்தசீர் உறவினர்கள், இறந்தது அவர்தான் என்பதை உறுதி செய்தனர். சடலத்தைக் கைப்பற்றிய திருவிடைமருதூர் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மும்தசீரின் நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், திருப்புவனத்தைச் சேர்ந்த அவரது நண்பர்கள் இஜாஜ் அகமது, ஜலாலுதீன், முகமது சமீர் ஆகிய 3 பேரும் கொலை செய்தது தெரியவந்தது. நேற்று (ஜனவரி 6) இரவு 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இஜாஸ் அகமது ஐடிஐ ஒன்றில் படித்து வருகிறார். மற்ற இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். இஜாஸ் அகமது இன்ஸ்டாகிராமில் ஒரு பெண்ணுடன் பழகிவந்ததாகவும், அதே பெண்ணுடன் மும்தசீர் நட்பு கொண்டதாகவும், இதனால் இஜாஸ் ஆத்திரமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று பிறந்தநாள் ஆச்சர்யம் காத்திருப்பதாகச் சொல்லி, மும்தசீரை மூவரும் திருப்புவனம் வரவழைத்துள்ளனர். அவரது கண்ணைக் கட்டி, கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இதன்பின்னர் தங்கள் மீது சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக, அவர்கள் மும்தாஜிடம் 5 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக