சனி, 26 ஜனவரி, 2019

ஆந்திர மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ..சந்திரபாபு நாயுடு

நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள்!
மின்னம்பலம் :
மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் மக்கள் தொகை 133 கோடியை தாண்டி சென்றுகொண்டிருக்கிறது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு பல முயற்சிகள் எடுத்து வருகிறது. குழந்தைகள் பெற்றுக்கொள்வதை குறைக்கவும், குடும்பக் கட்டுப்பாட்டையும் தலைவர்கள் வலியுறுத்த வேண்டிய நிலையில், அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும்படி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார். நேற்று (ஜனவரி 25) அமராவதியில் அவர் பேசுகையில், “ஆந்திர மக்கள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்ப அமைப்பு பாதுகாக்கப்படும். எதிர்காலத்துக்கு மனிதவளம் மிகவும் அவசியமானதாகும்.

நீங்கள் கட்டாயமாக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுகிறேன். மனிதவளம் மிக முக்கியமானது. குறைந்தபட்சமாக ஒரு குழந்தையாவது பெற்றுக்கொள்ளவேண்டிய பொறுப்பை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவின் குடும்ப அமைப்பே மிகவும் முக்கியமானது. இக்காலத்தில் சில இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதில்லை. அல்லது குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புவதில்லை. இது மிகவும் ஆபத்தாக முடியலாம். சீனா, ஜப்பான் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகை வளர்ச்சியில்லாமல் உள்ளது. இப்போது இந்தியா நல்ல நிலையில் உள்ளது. ஆனால், இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் எதிர்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம்.
முன்பெல்லாம் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள் பஞ்சாயத்து தேர்தல்களில் போட்டியிட முடியாது. ஆனால் இப்போது நாங்கள் புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளோம். அதன்படி நீங்கள் நான்கு குழந்தைகளை பெற்றுக்கொண்டாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
ஒருகாலத்தில், வெறும் 10 ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தை அமல்படுத்தி ஆந்திர மாநிலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் இப்போது, “எந்தக் கவலையும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று தம்பதியினருக்கு சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக