ஞாயிறு, 20 ஜனவரி, 2019

பன்னீர் யாகம் .. தலைமைச் செயலகத்தில் யாகம் நடத்துவது சட்ட விரோதமான செயலே.. ஆசிரியர் கி.வீரமணி கண்டனம்

tamil.thehindu.com : தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முயற்சியில் யாகம் நடத்தியிருப்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு அப்பட்டமான விரோதமாகும், குற்றமாகும் என்று திராவிடர்  கழகத் தலைவர் கி.வீரமணி கண்டித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முயற்சியில், யாகம் இன்று (20.1.2019) விடியற்காலை நடத்தப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகம் என்பது எவருடைய தனிப்பட்ட உடைமையும் அல்ல; அரசின் தலைமை அலுவலகமாகும்.

அங்கு குறிப்பிட்ட மதத்தின் செயல்பாடாக யாகம் நடத்தப்பட்டுள்ளது. அரசு என்பது மதச்சார்பற்றது என்று  இந்திய அரசமைப்புச் சட்டம் திட்டவட்டமாகவே உறுதிப்படுத்துகிறது.
இந்திய அரசமைப்பின் முகப்புரை என்பது இந்திய அரசமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.
நாம், இந்திய மக்கள், உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர் இறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற மக்களாட்சி குடியரசாக கட்டமைத்திடுவது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னைத் தலைமைச் செயல கத்தில் துணை முதலமைச்சர் அலுவலகத்தில் யாகம் நடத்தப்பட்டதானது -  அப்பட்டமான சட்ட விரோதமான நடவடிக்கையே!
அண்ணா அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், முக்கியமான ஆணை ஒன்றைப் பிறப்பித்தார்.
அரசு அலுவலகங்களில் எந்தவிதமான மதச் சின் னங்கள், கடவுள் உருவங்கள், மதச் சார்பான நிகழ்வுகள் இடம்பெறக்கூடாது என்பது தான் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் முக்கிய ஆணையாகும்.
அண்ணா பெயரில் ஆட்சியையும், கொடியில் அண்ணாவின் உருவத்தையும் வைத்துக்கொண்டு, அந்த அண்ணாவின் கொள்கையையும், அண்ணா கண்ட அரசின் ஆணையையும் அவமதிப்பது - குழிதோண்டிப் புதைப்பது எந்த வகையில் சரி என்பது முக்கியமான வினாவாகும்.
இதுபோன்ற யாகத்தின் அய்திகம் என்பது - இந்து மதத்தில் உக்கிரக் கடவுள் என்று கூறப்படும் கால பைரவனுக்கு நடத்தப்படுவதாகும். பதவிகள் கிடைக்கவும், மரண பயம் நீங்கவும் அர்த்தஜாமத்தில் - அதாவது அரை இரவு விழித்திருந்து நடத்தப்படுவதாகும்.
இந்த அடிப்படையில் மட்டுமல்ல, வேறு எந்த அடிப்படையிலும் இந்த யாகம் அதுவும் ஒரு துணை முதலமைச்சரால் நடத்தப்பட்டு இருப்பது கண்டிக்கத் தக்கது மட்டுமல்ல, அப்பட்டமான சட்ட விரோதமாகும்.
இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக