புதன், 2 ஜனவரி, 2019

ரஃபேல் ... பாஜகவையும் அதிமுகவையும் நாடாளுமன்றத்தில் அடித்து துவம்சம் செய்த ராகுல் ! விடியோ!


மின்னம்பலம் : ரஃபேல் விவகாரத்தில் பதில் சொல்ல மோடிக்குத் தைரியம் இல்லை என்று குறிப்பிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மோடி தனது அறையில் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்று விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றம் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ள குளிர்கால கூட்டத்தொடரின் போது அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளின் அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தை முடக்கத் தமிழக எம்.பி.க்களுடன் பாஜக கூட்டு வைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இன்று ரஃபேல் ஊழல் தொடர்பாக விவாதம் நடைபெற்ற நிலையில்,மேகதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பிகள் அமளியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிமுக எம்பிகள் பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என்று விமர்சித்தார். அதுபோன்று மோடிக்கு ரஃபேல் விவகாரத்தில் பதில் கூற தைரியம் இல்லை என்று குறிப்பிட்ட ராகுல், பிரதமர் தனது அறையில் ஒளிந்துகொண்டிருக்கிறார். 95 நிமிடம் நேர்காணல் கொடுக்கும் மோடி, நாடாளுமன்றத்துக்கு வந்து ரஃபேல் விவகாரம் குறித்து 5 நிமிடம் பேச தைரியமில்லையா என்று கடுமையாக சாடினார்.

ரஃபேல் விவகாரத்தில். ஒப்பந்தம் எப்படி போடப்பட்டது, விலை எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது, இது யாருக்கு ஆதரவானது என்று தனது கேள்வியைத் தொடங்கிய ராகுல் அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்தார்.
126 போர் விமானம் வாங்கத் திட்டமிட்ட நிலையில் 36 ஆக அதன் எண்ணிக்கையை மாற்றியமைத்தது யார், விமானப்படையே மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ததா, ஹச்ஏஎல் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படாதது ஏன், அதிக விலைக்கு விமானம் வாங்கியதற்குக் காரணம் என்ன, ஏன் அனில் அம்பானி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது , ஏன் இன்னும் ஒரு போர் விமானம் கூட இந்தியாவுக்கு வரவில்லை என சரமாரியாக கேள்விகளை முன்வைத்த ராகுல், ஒட்டுமொத்த நாடே ரஃபேல் தொடர்பான இந்த கேள்விகளை கேட்கிறது என்று குறிப்பிட்டார்.
இந்த ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்திய ராகுல், ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். அந்த ஆடியோவில் இருப்பது கோவா முதல்வரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் குரல் என்றும் அந்த ஆடியோவில் பாரிக்கர் ரஃபேல் விவகாரம் குறித்த முக்கிய ஆவணங்களைத் தனது படுக்கை அறையில் வைத்திருப்பதாகக் கூறுகிறார் என்றும் குறிப்பிட்டார்.
இந்த ஆடியோ ஒலிபரப்பப்பட்டபோது, அதுகுறித்து கேள்வி எழுப்பிய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன், ''இந்த ஆடியோ உண்மையானதுதானா?'' என்று வினவினார். ஆடியோ விவகாரம் குறித்து ட்வீட் செய்துள்ள மனோகர் பாரிக்கர், ''விரக்தியடைந்திருப்பதால் வேறு வழியின்றி போலியான ஆடியோக்களை காங்கிரஸ் கட்சியினர் தயாரித்துள்ளனர்'' என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ராகுல் கேள்விக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, ரஃபேல் விவகாரத்தில் ராகுல் தொடர்ந்து பொய் கூறி வருகிறார். பொய்யான தகவல்களுக்கு எப்படி விளக்கமளிக்க முடியும்.
ரஃபேல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக தனக்கும் பிரான்ஸ் அதிபருக்குமான உரையாடல் ஒன்றை உருவாக்கினார். தற்போது ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அது சோடிக்கப்பட்ட ஒன்று. அதன் உண்மைத் தன்மை என்ன?
போர் விமானம் குறித்து தெளிவு இல்லாதவர் தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ளார். அவர் சிறுவயதாக இருக்கும் போது குவட்ரொச்சி (ஹெலிகாப்டர் பேர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்) மடியில் விளையாடிக் கொண்டிருந்தார். அகஸ்டா வெஸ்ட்லாண்ட், நேஷ்னல் ஹெரால்டு, போபர்ஸ் என பல்வேறு ஊழல் புகார்களை கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியினர் ரஃபேல் விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்புகின்றனர். ஜேம்ஸ்பாண்டு படத்தில் வருவதுபோல், மாயாஜாலம் நிகழ்த்த ராகுல் முயற்சிக்கிறார் என்று அருண் ஜேட்லி விமர்சித்தார்.

நிதியமைச்சர் பேசிக் கொண்டிருக்கும் போது, பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சுர்ஜீத் சிங் அஜுலா திடீரென, காகித விமானத்தை, அருண் ஜேட்லியை நோக்கிப் பறக்கவிட்டார். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. காங்கிரஸ் எம்.பி.யின் இச்செயல் குறித்து பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் புகார் செய்தார்.இதையடுத்து அவை நடவடிக்கைகள் 3.30 வரை ஒத்திவைக்கப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக