சனி, 15 டிசம்பர், 2018

ISCKON ..சத்துணவில் வெங்காயமும் பூண்டும் தீட்டாம் ! இந்துத்துவ இஸ்கான் கும்பலின் கொழுப்பு !

வினவு :அரசு உத்தரவிட்டாலும் பள்ளி
மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவில் பூண்டையும், வெங்காயத்தையும் சேர்க்க முடியாது என “அட்சய பாத்ரா” எனும் என்.ஜி.ஓ. நிறுவனம் மறுத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மதிய உணவு வழங்கும் திட்டம் கடந்த 2002-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. அரசு மற்றும் அரசு ஆதரவுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைகிறார்கள். இங்கு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க கர்நாடக அரசு பல்வேறு என்.ஜி.ஓ. அமைப்புகளோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது.
அதில் ஒரு என்.ஜி.ஓ-தான் “அட்சய பாத்ரா”. இந்நிறுவனம் இந்துத்துவா அமைப்பான “இஸ்கான்” (ISCKON) அமைப்பின் துணை நிறுவனமாகும். கர்நாடகத்தின் மிகப்பெரிய மதிய உணவு வழங்குனராக இந்த என்.ஜி.ஓ செயல்பட்டு வருகிறது. அரசாங்கத்திடமிருந்து பெறப்படும் பணம் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நன்கொடைகள் பெறுவதன் மூலமாக கர்நாடகாவில் மட்டும் சுமார் 4.43 இலட்சம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது.

இந்நிறுவனம் தங்களது நம்பிக்கையின்படி ’சாத்விக’ உணவுகளையே சமைக்கவும் உண்ணவும் செய்வார்களாம். அந்த அடிப்படையில் கடந்த 16 ஆண்டுகளாக மாணவர்களுக்கு சமைத்து வழங்கும் உணவில் வெங்காயம் மற்றும் பூண்டை அறவே தவிர்த்து வருகிறது.  ஏனெனில் அவை ’தமஸ்’ வகைப்பட்ட உணவுகளாம்.
இந்நிலையில், அரசால் பரிந்துரைக்கப்பட்ட உணவுப் பட்டியலில் உள்ளபடி உணவு வழங்கவேண்டும் என மதிய உணவு வழங்கல் திட்டத்தின் அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இந்த நிறுவனம் அரசுடன் 2018-19-ம் ஆண்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை கையெழுத்திட மறுத்து, சாத்விக உணவுகளையே தாம் தொடர்ந்து வழங்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து கர்நாடக அரசின் மதிய உணவுத் திட்டத்தின் கூடுதல் இயக்குனர் எம்.ஆர். மாருதி கூறுகையில் “சமீபத்தில்தான் அந்நிறுவனத்திடம் வெங்காயம் மற்றும் பூண்டை உணவில் சேர்க்கக் கூறி வழிகாட்டுதல் அனுப்பினோம். மதிய உணவில் வெங்காயமும், பூண்டும் சேர்ப்பது ஊட்டச்சத்தை மட்டுமல்ல, உணவின் சுவையையும் அதிகரிக்கும். இதனை கருத்தில் கொண்டே நாங்கள் அந்நிறுவனத்தை மாநில அரசு தரும் பட்டியலின்படி உணவு வழங்கக் கேட்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் எங்கள் கடிதத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை.” என்றார்.
கர்நாடகத்தில் மொத்தம் 71 என்.ஜி.ஓ. நிறுவனங்கள் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்துகின்றன. சுமார் 9.31 இலட்சம் மாணவர்கள் இந்த மதிய உணவுத் திட்டத்தின் கீழ பயனடைகின்றனர். இதில் 4.43 இலட்சம் மாணவர்களுக்கான உணவை அட்சய பாத்ரா என்.ஜி.ஓ. வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் இணைந்திருக்கும் பிற தன்னார்வ நிறுவனங்களும், அறக்கட்டளைகளும் அரசாங்கம் தரும் பட்டியலை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. ஆனால் ‘அட்சய பாத்ரா’ என்.ஜி.ஓ. மட்டும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.
‘அட்சய பாத்ரா’ தனது அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டில், “மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் மனித வளத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஊட்டச்சத்துக்கள் இருக்கும்படியான உணவையே நாங்கள் வழங்குகிறோம் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
அதாவது “பூண்டையும் வெங்காயத்தையும் சேர்க்க முடியாது. உன்னால் ஆனதைப் பார்” என்பதையே நாசூக்காக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு மதிய உணவு வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துள்ளதன் மூலம், “பள்ளி மாணவர்களை பட்டினி போட்டுவிடுவேன், ஜாக்கிரதை” என மறைமுகமாக மிரட்டியுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆதிக்க சக்திகள் தமது கட்டுப்பாட்டில் வைத்து மிரட்டுவதற்கான ஏற்பாடுதான் இந்துத்துவா என்.ஜி.ஓ.-க்கள் என்பதை ‘அட்சய பாத்ரா’ தெளிவாக உணர்த்தியிருக்கிறது.

கர்நாடக மதிய உணவுத் திட்டம்
சமூக வலைதளங்களில், ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் பல்வேறு இந்துத்துவவாதிகள் “அட்சய பாத்ரா”-வுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ”தொண்டு நிறுவனத்தின்” மத நம்பிக்கையை குமாரசாமி அரசு பறிக்க நினைப்பதாக கூச்சலிடுகின்றனர். இது தொண்டு நிறுவனத்தின் மத நம்பிக்கையா? அல்லது சனாதன தர்மமா?
இந்து சனாதன கும்பலான இஸ்கான் அமைப்பின் ஒரு பிரிவான ‘அட்சய பாத்ரா’ நடைமுறைப்படுத்துவது சுத்தமான பார்ப்பனியமே. வட இந்திய பார்ப்பனமயமாக்கப்பட்ட ஜெயின்களின் நம்பிக்கையின் படி வெங்காயம், பூண்டு ஆகியவை தமஸ் குணத்தைக் கொண்ட காய்கறிகள். அதாவது ‘சூத்திர’ காய்கறிகள். இந்தக் காய்கறிகளை உட்கொண்டால் கெட்ட உணர்ச்சிகள் உண்டாகுமாம். அதன் காரணமாக இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது இந்த பார்ப்பன சனாதனிகளின் கோட்பாடு. காய்கறிகளிலும் கூட தமது சாதிய வன்மத்தைக் காட்டுகிறார்கள்.
“இஸ்கான் அமைப்பைச் சேர்ந்தவர்களையோ அல்லது ”அக்சய பாத்ரா”-வைச் சேர்ந்தவர்களையோ யாரும் பூண்டையும், வெங்காயத்தையும் தின்னச் சொல்லவில்லையே. இவர்களது சனாதன தர்மம் வகுத்துத்தந்த விதிப்படி சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஆக்கப்பட்ட இலட்சக்கணக்கான உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகள்தானே? இந்த ’சூத்திரக் காய்கறிகளை’ சமைத்துப் போடுவதற்கு இவர்களுக்கு என்ன கேடுவந்தது?” என நீங்கள் கேட்கலாம். ஆனால் இவர்கள் சூத்திரக் காய்களை சமைக்கக்கூட மாட்டார்களாம். அவ்வளவு ஆச்சாரமாம் ! ஏனெனில் சூத்திரனை தொட்டாலே தீட்டுதான் அல்லவா?

ஆனால் இந்த என்.ஜி.ஓ. நிறுவனம் மதிய உணவுத் திட்டத்திற்காக ஆயிரக்கணக்கானோரிடம் நன்கொடை பெறுகிறது. இந்த ஆயிரக்கணக்கானோரில் 99% ‘சூத்திரர்களும்’ ‘பஞ்சமர்களும்’தானே ! அவர்கள் இரத்தத்தில் ‘சூத்திரக்’ காய்கறிகளான வெங்காயமும் பூண்டும் கலந்தில்லாமல் இருக்குமா ? இவர்களுக்கு ‘சூத்திரன்’ கசக்கிறானாம். சூத்திரக் காய்கறி கசக்கிறதாம். ஆனால், சூத்திர பஞ்சமர்களின் பணம் மட்டும் இனிக்கிறதாம் இந்தக் கும்பலுக்கு.
இணையத்தில் அட்சய பாத்ரா-வுக்கு ஆதரவாக லாவணி பாடும் இந்துத்துவக் கும்பல், கர்நாடக அரசுக்கு 4.43 இலட்சம் மாணவர்களின் உணவுக்கு அட்சய பாத்ரா நிறுவனம் வழங்கும் பங்களிப்பின் அருமை தெரியவில்லை எனக் கூறிவருகிறது. அதாவது 4.43 இலட்சம் மாணவர்களுக்கு அட்சய பாத்ரா அமைப்பு போனால் போகட்டும் என பொங்கிப் போடுகிறதாம். கர்நாடக அரசுக்கு அதன் அருமை புரியவில்லையாம்.
ஆனால் உண்மை என்ன ? இலட்சக்கணக்கான ‘சூத்திர’ மாணவர்களைக் காட்டிதான் இந்த ‘அட்சய பத்ரா’ என்.ஜி.ஓ. ஆயிரக்கணக்கான ‘சூத்திரர்களிடம்’ பணம் பெற்று தனது நிறுவன தொந்தியையும், தமது இந்துத்துவ அரசியல் நோக்கையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்பதுதானே உண்மை.
இந்தப் பார்ப்பனக் கொழுப்பை கொத்தி எடுக்காமல் நமது குழந்தைகளுக்கு சத்துணவும் கிடையாது, சமத்துவமும் கிடையாது.

நந்தன்
செய்தி ஆதாரம் : நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக