செவ்வாய், 11 டிசம்பர், 2018

ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்?

ரங்கராஜ் பாண்டே விலகியது ஏன்?மின்னம்பலம் : தந்தி தொலைக்காட்சியில் இருந்து அதன் தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே விலகியதாகச் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவிய நிலையில், அது உண்மைதான் என்று தனது யூடியூப் பக்கத்தில் அவர் விளக்கமளித்துள்ளார். இதன் மூலமாகத் தான் ரிஸ்க் எடுத்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரங்கராஜ் பாண்டே எனும் யூடியூப் பக்கத்தில் நேற்று (டிசம்பர் 10) அவர் விளக்கம் அளித்தார். அதில், நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான் என்றும், தந்தி டிவியின் தலைமைச் செய்தி ஆசிரியர் என்ற பொறுப்பிலிருந்து விலகியிருக்கிறேன் என்றும் தெரிவித்தார். “அந்தப் பதவியிலிருந்து விலகினாலும், பத்திரிகையாளர் என்ற கடமையில் இருந்து விலகவில்லை. நான் விலகியதற்குக் காரணம், சிக்கல், பிரச்சினை என்று எதுவும் இல்லை. தினமும் ஒரே வேலையைச் செய்வதனால் ஏற்படும் அயர்ச்சியில் இருந்து வெளியே வருவதற்கான முயற்சி இது. புதிதாக ஒன்றை முயற்சிக்க வேண்டுமென்ற ஆசையில் அங்கிருந்து வெளியேறியிருக்கிறேன்” என்று கூறினார்.

இதற்கு முன்னர் பணியாற்றிய தினமலர் நிறுவனத்தையோ, தினத்தந்தி குழுமத்தையோ குறை கூறினால் அது அபாண்டமாக இருக்குமென்று தன் பேச்சில் ரங்கராஜ் பாண்டே குறிப்பிட்டார். எல்லா நிறுவனங்களிலும் சின்னச் சின்ன சச்சரவுகள் இருக்குமென்றும், அது ஒரு குடும்பத்துக்குள் நிகழ்வது போன்றது என்றும் அவர் கூறினார். தந்தி குழுமத் தலைவர் பாலசுப்பிரமணிய ஆதித்தனுக்குத் தன் பேச்சினிடையே நன்றி தெரிவித்தார்.
“ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஏதோ ஒன்றை நோக்கி நகரும்போது, அடுத்தவர்களுக்கு ஒரு இடம் கிடைக்குமென்று நம்புகிறேன். இரண்டு ஆண்டுகளாக, ஆயுத எழுத்து நிகழ்ச்சியைச் செய்யவில்லை. அடுத்த தலைமுறைக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்று, எனது வாய்ப்புகளைக் குறைத்துக்கொண்டேன். எனது மூவ் காரணமாக, இப்போது குறைந்தபட்சம் ஆறு அல்லது ஏழு பேருக்கு ஏற்றம் கிடைக்குமென்று நம்புகிறேன். இது தினமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு பணியிலிருந்து என்னை நானே விடுவித்துக்கொள்ளும் ஒரு முயற்சி. இது புரிதலோடு நிகழ்ந்திருக்கும் ஒரு பிரிதல்” என்று அவர் தனது வீடியோவில் விளக்கமளித்தார்.
இதன் மூலமாகத் தான் ஒரு பெரிய ரிஸ்க்கை எடுத்திருப்பதாக நம்புவதாகவும் தெரிவித்தார்.
தந்தி தொலைக்காட்சியிலிருந்து விலகிய ரங்கராஜ் பாண்டே, ஒரு தொலைக்காட்சியின் தலைமைப் பொறுப்பை விரைவில் ஏற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது இயங்கிவரும் ஒரு தொலைக்காட்சியை விலைக்கு வாங்கிய பிரபல தொழிலதிபர் ஒருவர், 60:40 என்ற அடிப்படையில் பாண்டேயுடன் இணைந்து அதனை நடத்தவுள்ளதாகவும், அந்த காரணத்தின் அடிப்படையிலேயே நீண்ட நாட்கள் கழித்து அவர் தந்தி குழுமத்திலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. எந்நேரத்திலும் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக