செவ்வாய், 11 டிசம்பர், 2018

மன்மோகன் சிங் : பணமதிப்பிழப்பு .. எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது கடைசியில் நடந்துவிட்டது!

ரிசர்வ் வங்கி தலைவர் ராஜினாமா மன்மோகன் வேதனை
மன்மோகன் சிங்
குருமூர்த்தி
ஆர் எஸ் எஸ் அடியாள்
vikatan.com - kumaresan- : நாட்டின் மதிப்புமிகு அமைப்புகளில் ஒன்றாக ரிசர்வ் வங்கி கருதப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் கவர்னர் மத்திய நிதியமைச்சருக்கு இணையாகப் பார்க்கப்படுபவர். ரிசர்வ் வங்கியின் ஒவ்வொரு செயல்பாடும் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பொருளாதாரத்தைத் துல்லியமாகக் கணித்து நீண்ட காலத்துக்கு பயன்தரக்கூடிய முடிவுகளை எடுக்கும் திறன் படைத்தவர்கள்தான் ரிசர்வ் வங்கியின் தலைவர்களாக வர முடியும்.
தற்போது பதவியை ராஜினாமா செய்துள்ள உர்ஜித்துக்கு முன்னதாக ரகுராம் ராஜன் இருந்தார். `மூன்று  ஆண்டுகளுக்கு மேல் ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருக்க விரும்பவில்லை’ என்று வெளிப்படையாக ரகுராம் ராஜன் அறிவித்தார்,
தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உர்ஜித் பட்டேல் கவர்னராக நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 14-ம் தேதி நடந்த ரிசர்வ் வங்கிய இயக்குநர் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து உர்ஜித் பட்டேல் இந்த முடிவை எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் பகுதி நேர உறுப்பினராக இருந்த உர்ஜித் பல்லாவும் பதவியில் இருந்து விலகியுள்ளார். அடுத்தடுத்த இரு ராஜினாமாக்கள் வட மாநிலத் தேர்தல் தோல்விகள் எனத் தொடர்ச்சியாகக் கிடைத்த அடிகளால் பாரதிய ஜனதா கட்சி வட்டாரங்கள் அதிர்ந்துபோய் கிடக்கின்றன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிதும் விமர்சனத்துக்குள்ளான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவது போல இந்த ராஜினாமாக்கள் அமைந்துள்ளன. நாட்டின் மதிப்புமிகு அமைப்புகளில் சி.பி.ஐ, ரிசர்வ் வங்கிகள் முக்கியமானவை. இந்த அமைப்புகளில் மத்திய அரசு தலையிடுவதாகக் குற்றச்சாட்டுகள் ஏற்கெனவே உண்டு. அண்மையில் சி.பி.ஐ அமைப்பின் உச்சந்தலைகள் இருவர் மோதிக்கொண்ட சம்பவமே இதற்கு எடுத்துக்காட்டு. ரிசர்வ் வங்கியின் உள்விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாகச் சொல்லப்படுகிறது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, ரிசர்வ் வங்கியிடம் உள்ள 3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் கூடுதல் கையிருப்பில் பங்கு கேட்டதால் உர்ஜித் ராஜினாமா செய்துள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ``பொருளாதாரக் கொள்கைகளைக் கட்டமைப்பதில் உர்ஜித் பட்டேல் திறமை மிகுந்தவர். நாட்டின் பொருளாதாரம் சீரழிந்துகொண்டிருக்கும் நிலையில் உர்ஜித்தின் ராஜினாமா எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட பாரம்பர்யம் கொண்ட அமைப்புகளை உருவாக்க பல ஆண்டுகள் பிடிக்கும். குறுகிய அரசியல் நோக்கத்துக்காக அந்த அமைப்புகளை அழிக்க நினைப்பது முட்டாள்தனம். நான் எந்த விஷயம் நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது'' என்று மன்மோகன் சிங் தன் வருத்தத்தை வெளியிட்டுள்ளார்.
அண்மையில் ரிசர்வ் வங்கியின் independent director இயக்குநராக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைச் சேர்ந்த குருமூர்த்தி நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னர் மதவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர்கள் ரிசர்வ் வங்கியின் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப்பட்டதில்லை. நிறுவனங்களின் தலைவர்கள், தொழிலதிபர்களே இந்தப் பதவியில் நியமிக்கப்படுவார்கள். குருமூர்த்தி நியமனமும் உர்ஜித் ராஜினாமாவுக்கு முக்கிய காரணமென்று கூறப்படுகிறது. எனினும் குருமூர்த்தியுடன் சுமுக உறவையே உர்ஜித் பட்டேல் பேணி வந்துள்ளார். உர்ஜித்தின் ராஜினாமா தனக்கு வியப்பை அளிப்பதாகக் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கியின் இடைக்காலத் தலைவராக மூத்த துணைத் தலைவர் என்.எஸ்.விஸ்வநாதன் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி போன்ற முக்கிய அமைப்புகள் நீண்ட காலத்துக்குத் தலைவர் இல்லாமல் செயல்படக் கூடாது. எனவே உடனடியாக உர்ஜித் பட்டேலுக்கு மாற்று கண்டுபிடித்தாக வேண்டிய நிலையில் மத்திய அரசு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக