வெள்ளி, 21 டிசம்பர், 2018

ஒரு யானை நாடு கடத்தப்பட்டது.. அகதியாக்கப்பட்டது.!

ஒரு காட்டு யானை நாடு கடத்தப்பட்டது...! - ஓசை காளிதாசன்
மின்னம்பலம் ஓசை காளிதாசன் : யானைகளால் பிரச்சினை வரக் காரணம் என்ன? கோவை தடாகம் பகுதியில் பல ஆண்டுகளாக சுற்றித் திரிந்த ஆண் யானை அங்கிருந்து பிடிக்கப்பட்டு முதுமலை காட்டில் விடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக வாழ்ந்துவந்த கானகத்திலிருந்து வெகு தொலைவிலுள்ள, தான் அறிந்திராத இன்னொரு காட்டுப்பகுதியில் யானையை விடுவது நாடு கடத்தல்தானே. உள்ளூர் மக்களால் விநாயகன் என்று பெயர் சூட்டப்பட்ட அந்த யானை என்ன தவறு செய்ததால் இப்படி நாடு கடத்தப்பட்டிருக்கிறது?
யானை என்ன செய்தது?
கோவை மாவட்டத்தில் வேளாண்மை மிச்சமிருப்பது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில்தான். அங்குதான் ஓரளவு தண்ணீர் வசதி உள்ளது. இங்குள்ள தடாகம் பகுதி மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட அழகிய பகுதி. ஒரு காலத்தில் முழுவதும் விவசாயம் நடந்த இடம் இது. ஆனால் செங்கல் சூளைகள், கல்வி நிறுவனங்கள், புதிய குடியிருப்புப் பகுதிகள் ஆகியவை இப்பகுதியில் பெருகியதால் விவசாயம் நலிந்தது. ஆனாலும் தாங்கள் காலம் காலமாய் செய்துவந்த தொழிலை விட முடியாமல் இன்னும் கொஞ்சம் பேர் விவசாயம் செய்துவருகின்றனர். அவர்கள்தான் இந்த யானையைப் பிடிக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தவர்கள். காரணம் அவர்கள் பாடுபட்டு விளைவிக்கும் பயிர்களைக் கடந்த சில ஆண்டுகளாக யானைகள் சேதப்படுத்திவிடுகின்றன.

ஏற்கனவே பல்வேறு சிரமங்களோடு விவசாயம் செய்யும் அவர்களுக்குக் காட்டு விலங்குகளால் ஏற்படும் பாதிப்பும் சேர்ந்துவிட, பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, தொடர்ந்து பயிர்ச்சேதம் ஏற்படுத்தும் குறிப்பிட்ட சில யானைகளை இப்பகுதியிலிருந்து அகற்றக் குரல் கொடுத்துவந்தனர். கோவை மாவட்ட ஆட்சியரிடம் ஒவ்வொரு குறை தீர்க்கும் நாளிலும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். கோவையிலுள்ள வனத்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தினர். எதுவும் நடக்காததால் சென்னையிலுள்ள வனத்துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன் விளைவாக இப்போது இந்த யானை பிடிக்கப்பட்டது.
இதுதான் இப்பிரச்சினைக்கு தீர்வா? இப்பகுதி நிலவரத்தை முழுமையாக அறிந்தால்தான் இக்கேள்விக்கு பதில் கிடைக்கும்.
யானைகள் ஏன் வருகின்றன?
யானைகள் பெரிய வாழ்விடத்தைப் பயன்படுத்தும் இயல்புடையவை என்பதை அறிவோம். தடைகளற்ற தொடர்ச்சியான வனப்பகுதி அவற்றிற்கு அவசியம் தேவை. உணவு, குடிநீர் தேவைக்காக மட்டுமன்றி மாறுபட்ட மரபணுப் பரவலுக்கு வெவ்வேறு குழுக்களோடு இனச் சேர்க்கைக்காகவும் பரந்த வாழ்விடத்தைப் பயன்படுத்துகின்றன. ஒரு காட்டுப் பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஆண்டுதோறும் அவை செல்லும் வலசைப் பாதைகள் மிக முக்கியமானவை. காலங்காலமாய் தமது முன்னோர்கள் போய் வந்த பாதைகளையே பெரும்பாலும் யானைகள் பயன்படுத்துகின்றன. அவற்றில் குறுகிய பாதைகளையே நாம் இணைப்புப் பாதைகள் (Elephant corridor) என்கிறோம். அந்தப் பாதைகள் காடுகளில் மட்டுமன்றி தனியார் நிலத்திலும் உள்ளன. ஏனெனில் நாம் நிலப் பாகுபாடு செய்த போது யானைகளை பற்றிக் கருத்தில் கொள்ளவில்லை. நமக்குத்தான் தனியார் நிலம், வனநிலம் என்பதெல்லாம். யானைகளுக்கோ அவை அவற்றின் வாழ்விடம்.

இந்தியாவில் மொத்த நிலப்பரப்பில் 3 %க்கும் குறைவான இடங்களே யானைகளின் வாழ்விடமாக உள்ளன. தென்னிந்தியாவில் 0.7%க்கும் குறைவான நிலப்பரப்பிலேயே யானைகள் வாழ்கின்றன. கோவை வனக்கோட்டம் 7 வனச் சரகங்களை உள்ளடக்கிய 695 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. சிறுமுகையில் ஆரம்பித்து வாளையார் வரை தொடரும் இக்கோட்டம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா பகுதிகளை உள்ளடக்கிய நீலகிரி உயிர்கோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும். உலகில் ஒரே வனப்பரப்பில் அதிக எண்ணிக்கையில் ஆசிய யானைகள் வாழ்வது இங்குதான். முதுமலை, சத்தியமங்கலம் பகுதிகளிலிருந்து அமைதிப் பள்ளதாக்கு, மன்னார்காடு போன்ற யானைகளின் வாழ்விடங்களை இணைக்கும் பகுதியாக கோவை வனக்கோட்டம் உள்ளது.
ஆனால், கோவை வனக்கோட்டத்தில் சமவெளிக் காடுகள் மிகக் குறைவு. பெரும்பாலும் சரிவான மலைப் பகுதியே இங்கு உள்ளது. சிறுமுகையின் சிறுபகுதி, பில்லு}ர், ஆனைகட்டி, சிறுவாணி ஆகிய பகுதிகளில் தான் யானைகள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. மற்ற பகுதிகள் அவை கடந்துபோகும் பாதைகளாகவே இருந்துள்ளன. யானைகள் அங்கு தங்குவதில்லை. சில இடங்களில் தனியார் நிலங்களும் யானைகள் கடந்து போகும் பாதைகளாக இருக்கின்றன. இங்குள்ள விவசாயிகள் மற்றும் பழங்குடிகளிடம் அந்த நிலம் இருக்கும்வரை யானைகள் தங்கு தடையின்றிப் போய்வந்தன. விவசாயமும் இடையூறின்றி நடைபெற்றது. ஆனால் பல்வேறு காரணங்களால் யானைகள் கடந்து போகும் பாதைகள் தடைபடத் தொடங்கிய பின்பே அவை விளைநிலங்களுக்குள் வரத் தொடங்கின. வேளாண் பயிர்களைத் தமது உணவாகக் கருதித் திரும்ப திரும்ப வரும்போது பிரச்சினை தொடங்குகிறது.
விளைநிலங்களுக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கும் யானைகள் வராமல் தடுக்க மின்வேலி அமைத்தல், அகழி வெட்டுதல், தண்ணீர்த் தொட்டிகள் அமைத்தல், தீவனத் தோட்டங்கள் உருவாக்குதல், யானை விரட்டும் படை அமைத்தல், கும்கி யானைகளைப் பயன்படுத்துதல் என வனத்துறை பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. எனினும் பிரச்சினை தீராமல் உள்ளது.
முத்தரப்பினரின் அவல நிலை
இரவு பகலாக வனத்துறையின் களப்பணியாளர்கள் யானை விரட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். ஓரிடத்திலிருந்து விரட்டிய பிறகு மற்றொரு இடத்திலிருந்து அழைப்பு வந்தால் உடனே அங்கும் ஓட வேண்டும். அவர்களில் பலர் தற்காலிக ஊழியர்கள். சொற்ப ஊதியமே அவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. பல இடங்களில் அவர்களிடம் டார்ச் லைட்கூட இருப்பதில்லை. போதிய வாகன வசதி இல்லை. அவர்களின் எண்ணிக்கையும் தேவைக்கேற்ப இருப்பதில்லை. ஊன் உறக்கமின்றி பணியாற்றும் அவர்கள் ஊர் மக்களின் வசவுகளுக்கும் உள்ளாகின்றனர். சில நேரங்களில் யானைகளின் தாக்குதலுக்கு உள்ளாகி அவர்களுக்கு உயிரிழப்பும் ஏற்பட்டுவிடுகிறது.
விவசாயிகளும் இரவு பகலாகத் தோட்டத்தைக் காவல் காக்கின்றனர். அவர்களும் உயிரை பணயம் வைத்தே இப்பணியை செய்கின்றனர். தூங்கி பல நாட்கள் ஆனதாக பலர் கதறுகின்றனர். தொடர்ந்து காட்டு விலங்குகளால் பயிர் சேதம் ஏற்படுவதால் பலர் வேளாண்மை செய்வதையே விட்டுவிட்ட பரிதாபமும் ஏற்பட்டுள்ளது.
யானைகளும் தொடர்ந்து விரட்டப்படுகிறன. காதருகே பட்டாசு வெடித்துச் சிதறும்போது தமது குட்டிகளோடு பரிதாபமாகக் கதறி ஓடும் யானைகளைப் பார்த்தால் நெஞ்சம் படபடக்கும். அந்தப் பேருயிரின் கதறல் நம்மை கண் கலங்க வைக்கும்.
யானைகள், விவசாயிகள், வனத்துறை களப் பணியாளர்கள் என மூன்று பிரிவினரும் பரிதாபத்திற்கு உரியவர்கள்.
எப்படி உருவானது இந்தச் சூழல்?
காலங்காலமாய் யானைகளும் மக்களும் பிரச்சினை இன்றி வாழ்ந்த பகுதிகளில் இப்போது இரவு நேரம் போர்க்களம்போல் ஆகிறது. ஆனால் அதற்குக் காரணமானவர்கள் சுகமாக உள்ளனர். மலைப்பகுதி பாதுகாப்பு விதிகளை நுட்பமாக மீறி யானைகளின் வலசைப் பாதைகளை மறித்துக் கல்வி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், ஆசிரமங்கள் என கட்டிடம் கட்டியவர்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உள்ளனர். தடாகம் பகுதியில் விதிகளை மீறி ஆழமாக குழிதோண்டி காட்டின் ஓரமுள்ள யானைகளின் பாதைகளை மறித்த செங்கல் சூளைக்காரர்களும் நலமுடன் உள்ளனர். இறுதியில் இப்போது யானைதான் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது. இதனால் பிரச்சினை தீர்ந்துவிடுமா எனில் நிச்சயம் இல்லை. அங்கு வேறு யானை வரும். பின்னர் என்னதான் தீர்வு?
(கட்டுரையின் தொடர்ச்சி இன்று மாலை 7 மணிப் பதிப்பில்…)

(கட்டுரையாளர் : ஓசை காளிதாசன் - ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் சேர்ந்து `ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை 2000 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தின் தேசிய ஒருங்கினைப்பாளர்களில் ஒருவர். கனரா வங்கியில் பணிபுரிந்த காளிதாசன் சுற்றுச்சூழல் கருத்தியலைப் பரப்புவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழ்நாடு வன உயிரின வாரியம், தமிழகக் கடலோர மேலாண்மைக் குழுமம், ஆனைமலை புலிகள் காப்பக ஆளுமைக்குழு உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார். இவரைத் தொடர்புகொள்ள : 9443022655, pasumaiosai@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக