வெள்ளி, 21 டிசம்பர், 2018

பிகார் பாஜக கூட்டணிக் கட்சி ராஷ்ட்ரிய லோக் சமதா காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தது

காங்கிரஸ் அணியில் பாஜக கூட்டணிக் கட்சி!மின்னம்பலம் : பாஜக கூட்டணியிலிருந்து விலகிய உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இன்று இணைந்துள்ளது.
பீகாரைச் சேர்ந்த உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ராஷ்டிரிய லோக் சமதா கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் பீகாரில் 4 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி 3இல் வெற்றிபெற்றது. உபேந்திர குஷ்வாஹா மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராகவும் பதவிவகித்து வந்தார்.

பீகாரில் மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்த நிலையில், பாஜக-ஐஜத கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதற்காக குஷ்வாஹாவின் கட்சிக்கு 2 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும் என்று பாஜக தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியானது. இதனால் அதிருப்தியடைந்த உபேந்திர குஷ்வாஹா, எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்த கடந்த 10ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அத்தோடில்லாமல் பாஜக கூட்டணியிலிருந்தும் வெளியேறினார்.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 20) டெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைவதாக உபேந்திர குஷ்வாஹா அறிவித்தார். அப்போது காங்கிரஸ் பொருளாளர் அகமது படேல், பீகார் மாநிலப் பொறுப்பாளர் சக்ஜித்சிங் கோலி, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் மற்றும் சரத் யாதவ் ஆகியோர் உடனிருந்தனர். பீகாரில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா உள்ளிட்ட கட்சிகள் மகா கூட்டணி அமைத்துள்ள நிலையில், குஷ்வாஹாவின் கட்சியும் இணைந்துள்ள கூட்டணிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாஜகவுக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐக்கு உபேந்திர குஷ்வாஹா தெரிவிக்கையில், “எங்களுக்கு பல வாய்ப்புகள் இருந்தன, அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் ஒன்று. ராகுலும், லாலுவும் எங்களுக்கு கொடுத்த ஆதரவே நாங்கள் இணைவதற்கு காரணம். ஆனாலும், நான் இங்கு அமர்ந்திருப்பதற்கு முக்கிய காரணம் பீகார் மக்கள்தான்” என்றுள்ளார். அவரை வரவேற்றுப் பேசிய அகமது பட்டேல், பீகாரின் மகா கூட்டணியில் குஷ்வாஹா இணைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ள உபேந்திர குஷ்வாஹா, மக்களவைத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் 4 அல்லது 5 தொகுதிகள் கேட்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக