சனி, 15 டிசம்பர், 2018

ஹெலிகாப்டர் பேரம்: மோடியின் பொய்களும் மறைமுகத் தாக்குதல்களும்

savukkuonline.com : பாஜகவைப் பொறுத்தவரை வாக்கு சேகரிக்கும் நம்பர் ஒன் தலைவர் பிரதமர் நரேந்திர மோடிதான்; களைப்பே தெரியாமல் தேர்தல் பிரசாரம் செய்வதும் அவர் மட்டுமே. ஆனால் இப்பங்குகளைச் சரியாகச் செய்ய வேண்டுமென்ற ஆர்வக்கோளாறில் தான் நாட்டின் பிரதமரும் கூட என்பதை மோடி சில சமயங்களில் மறந்துவிடுகிறார்.
இந்த நினைவிழப்பின் ஒரு மோசமான உதாரணம் போன வாரம் கண்கூடாகத் தெரிந்தது. ராஜஸ்தானில் சுமேர்பூரில் தேர்தல் கூட்டமொன்றில் டிசம்பர் 05இல் பேசிய மோடி, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் VVIP ஹெலிகாப்டர் பேரத்தில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் கிறிஸ்டியன் மிச்செல்லை துபாயிலிருந்து நாடு கடத்துவது பற்றிப் பேசினார்.

தனக்கே உரிய நாடக பாணியில் பேசிய பிரதமர், “சகோதர, சகோதரிகளே. பல ஆயிரம் கோடி VVIP ஹெலிகாப்டர் ஊழல் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்… திருமதி சோனியா காந்தியின் கடிதம் பற்றியும் தெரிந்திருக்கும்… நாங்கள் ஆட்சிக்கு வந்த பின் கடிதத்தைக் கோப்புகளில் தேடினோம், இறுதியாக, அதிகாரம் உள்ளவர்களுக்கு உதவிபுரியும் ஒரு ரகசியக் காப்பாளரைக் கண்டுபிடித்தோம். அவர் ஒரு தரகர்… இங்கிலாந்தைச் சேர்ந்த அவர், குடும்பப் பெயரைச் சுமந்துகொண்டிருபவரின் (ராகுல் காந்தியை அப்படித்தான் குறிப்பிடுகிறார்) நண்பர்களுக்கு துபாயில் உதவிக்கொண்டிருந்தார்…”
இந்திய அரசு துபாயிலிருந்து அவரை அழைத்து வந்ததாகக் கூறிய மோடி, இளகாரமான சிரிப்புடன் “ரகசியக் காப்பாளர் இப்போது ரகசியத்தை வெளியிட்டால் அது எவ்வளவு தூரம் போகுமென்று யாருக்கும் தெரியாது,” என்றார்.
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் ஒன்றின் மீது மற்றொன்று மண்ணை வாரி இறைப்பது சகஜம். ஆனால் அரசின் தலைவராக இருக்கும் ஒருவர் சர்வதேச விளைவுகளை ஏற்படுத்தும், விசாரணை நிலையில் இருக்கும் ஒரு பிரச்சினை பற்றிய கலவையான பொய்கள், அரை-உண்மைகள், மறைமுகச் சாடல்களை இதுவரை சொன்னதில்லை. ராஜஸ்தான், தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் முடியும் இறுதிநாளன்று அவர் இவ்வாறு கூறியதால் மிச்செலின் நாடுகடத்தல் ஆளுங்கட்சிக்கு ஏற்ற தினத்தில் செய்யப்படுகிறதோ என்று பலர் ஐயம் தெரிவித்தனர். மேலும், இதனால் விசாரணையிலும் ஐயப்பாடு தோன்றியதுடன் அமலாக்கப் பிரிவு (ED), மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) போன்ற ஏற்கனவே நம்பகத்தன்மை குறைந்த ஏஜென்சிகள் மீது மேலும் களங்கம் சுமத்துவதாகவும் இருந்தது.
ஊழலுக்கெதிரான ஒரே வீரன் தானென்றும் பெரிய ஊழலைக் கண்டுபிடித்த பெருமை தனக்கே என்றும் ராஜஸ்தான் கிராமவாசிகளையும் (பேச்சை டிவியிலும் மொபைலிலும் பார்த்த லட்சக்கணக்கானோரையும்) நம்ப வைத்துவிட்டதாக மோடி நினைக்கலாம். ஆனால் ஹெலிகாப்டர் ஊழலை உற்றுக் கவனித்து வருபவர்களுக்கு மோடி பதவிக்கு வருவதற்கு முன்பே இது வெளிவந்துவிட்டது என்பது நன்றாகவே தெரியும்.
குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் பிற VVIPக்களின் பயன்பாட்டிற்காக 12 உயர்ரக ஹெலிகாப்டர்களை வாங்கலாம் என்ற திட்டத்தை 1999இல் வாஜ்பேயி ஆட்சியில் இந்திய விமானப் படை முன்வைத்தது. இத்தாலிய நிறுவனம் ஃபின்மெக்கானிக்காவின் இங்கிலாந்துக் கிளையான அகஸ்டா வெஸ்ட்லேண்டுக்கு 3600 கோடி மதிப்பிலான ஆர்டர் 2010இல் கிடைத்தது. பின்னர் இத்தாலியில் நடைபெற்ற விசாரணையில் ஃபின்மெக்கானிக்காவின் சேர்மன் கிய்சிப்பி ஓர்சி, அகஸ்டா வெஸ்ட்லேண்டின் முதன்மை அலுவலர் ப்ரூனோ ஸ்பாக்னோலினி ஆகியோர் தரகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கைது செய்யப்பட்டனர்.
ஒப்பந்தத்தை 2013 பிப்ரவரியில் நிறுத்தி வைத்த மன்மோகன் சிங் அரசு நெறிமுறைகளை மீறிய காரணத்திற்காக 2014இல் ஒப்பந்தத்தை முழுவதும் ரத்து செய்தது. ஹெலிகாப்டர்களுக்காகச் செலுத்தப்பட்ட பணத்தையும் அரசு திரும்பப்பெற்றது. 2013 பிப்ரவரியில் துவங்கிய சிபிஐ விசாரணை காரணமாக முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகி, அவரது மருமகளும் தொழிலதிபருமான ஜூலி தியாகி, தில்லி வழக்கறிஞர் கௌதம் கெய்தான் போன்றோர் லஞ்சம் பெற்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். தியாகி குடும்ப உறுப்பினர்கள் தவிர, 2013 மார்ச்சில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் (FIR) கார்லோ கெரோசா, கிடோ ஹாஷ்கே மற்றும் கிறிஸ்டியன் மிச்செல் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. தரகர்கள் நடத்திய நிறுவனங்கள் வாயிலாகத் தரப்பட்ட லஞ்சங்களைக் கண்டுபிடிக்க அமலாக்கப்பிரிவும் விசாரணை நடத்தியது. இந்திய ஏஜென்சிகள் கூற்றின்படி கெரோசாவும் ஹாஷ்கேவும் தியாகி குடும்பத்தை ‘கவனிக்க’, இந்தியாவிற்கு ஏற்கனவே வந்திருந்த மிச்செல் அதிகாரிகளையும் அரசியல்வாதிகளையும் ‘கவனித்துக்கொண்டார்’. இத்தாலிய நீதிமன்றங்களில் வழக்கு நடந்தபோது ஹாஷ்கே அப்ரூவராகி விட்டார். மிச்செலின் உதவியோடு ஹாஷ்கே எழுதிய டயரிகளும் குறிப்புகளும் காங்கிரஸ் தலைமைக்கெதிராக நரேந்திரமோடி சுமத்தும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையாகும். ஹாஷ்கேவின் குறிப்புகளில் இருந்த ‘பட்ஜெட் தாளில்’ AP மற்றும் FAM போன்ற எழுத்துக்கள் அகமது படேல், (ராஜீவ்) காந்தி குடும்பத்தைக் குறிப்பதாக பாஜக குற்றம் சாட்டியது.
தன் துபாய் வீட்டிலிருந்து இந்திய ஊடகங்களுக்குப் பேட்டியளித்த மிச்செல் இக்குறிப்புகள், தாள்கள் போலியானவை என்றார். ஹாஷ்கேவுக்கும் தனக்கும் எப்போதும் ஒத்துப்போகாது என்றும் அதனால்தான் அவர் வேண்டுமென்றே தன்னை மாட்டிவிட்டதாகவும் மிச்செல் கூறினார். தியாகி குடும்பத்தார் மூலம் லஞ்சப்பணத்தை இத்தாலிக்கு எடுத்துச்செல்ல ஹாஷ்கே திட்டமிட்டதாக மிச்செல் குற்றம் சுமத்தினார். “பிரச்சினையின் ஆணிவேரே இத்தாலியில்தான் உள்ளது,” என்று மே, 2016ல் அளித்த பேட்டியில் அவர் கூறியிருந்தார். மோடி அரசு வெறுத்தது இத்தாலியை அல்ல, இத்தாலியில் பிறந்து இந்தியக் குடிமகளாக ஆகிவிட்ட சோனியா காந்தியைத்தான். இந்திய அரசின் கோரிக்கையின் பேரில் கிறிஸ்டியன் மிச்செல் ஜூலையில் துபாய் நகரத்தில் கைதானவுடன் அவரது வழக்கறிஞர் ரோஸ்மேரி பாட்ரிஜி, தங்கை சாஷா ஓஸ்மேன் ஆகியோர் ‘இந்தியா டுடே’வுக்கு அளித்த பேட்டியில் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குத் தொடர்பு உண்டு எனச் சொல்லுமாறு இந்திய விசாரணை அதிகாரிகள் மிச்செலை மிரட்டியதாக கூறினர்.
சோனியா காந்தியைத் தெரியுமென்று தவறான வாக்குமூலம் தருமாறு மிச்செல் மிரட்டப்பட்டதாக பாட்ரிஜி கூறினார். “மிச்செலிடம் விசாரணை செய்ய இந்த வருடம் சென்ற இந்திய அதிகாரிகள் அவரிடம் கையெழுத்து போடச் சொன்னார்கள். உண்மையற்றவற்றைச் சொல்லுமாறி மிரட்டினார்கள். மிச்செல் கையெழுத்துப் போட மறுத்தபின் அவர்கள் இந்தியா திரும்பினர்; பின்னர் மிச்செல் கைது செய்யப்பட்டார்,” என்றார் பாட்ரிஜி.
சாஷாவும் இதையேதான் சொன்னார். “சோனியா காந்தியைத் தெரியுமென்று அவர்கள் கூறச் சொன்னார்கள்; ஆனால் மிச்செல் அவ்வாறு சொல்லவில்லை. அரசியல்வாதிகளுக்கு உதவி செய்ததாகத் தவறாக வாக்குமூலம் தருமாறு சொன்னார்கள்; அதையும் அவர் செய்யவில்லை. தன் பெயரைக் காப்பாற்ற மட்டும் அவர் விரும்புகிறார்,” என்கிறார் சாஷா.
ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா காந்தியைத் தொடர்புபடுத்தும் சான்று தந்தால் அதற்குப் பதிலாக இந்தியச் சிறைகளில் இருக்கும் இரண்டு இத்தாலி கடற்படையினரை விடுதலை செய்து விடுவதாக மோடி அரசு தெரிவித்ததாக 2016இல் மிச்செல் குற்றம் சாட்டியிருந்தார். ஹாம்பர்க் சர்வதேச கடல்விதிகள் தீர்ப்பாயத்திலும் ஹேக் நகரின் நிரந்தர நீதிமன்றத்திலும் கடற்படையினர் வழக்கு நடந்தபோது மேற்சொன்ன குற்றச்சாட்டை மிச்செல் முன்வைத்தார். 2015 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மோடி இத்தாலிய பிரதமருடனான பேச்சுவார்த்தையின்போது இவ்வாறு சொன்னதாக மிச்செல் கூறியதை இந்திய வெளியுறவுத்துறை ‘பொய்’ என்று நிராகரித்தது. ஆனால் கடற்படையினர் வழக்கின் முன்னேற்றம் மற்றும் இத்தாலியில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு ஆகியவற்றின் மந்த கதியைப் பார்த்தால் மிச்செல் சொல்வது உண்மையாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது.
ஜனவரியில் ஓர்சியையும் ப்ரூனோவையும் ஒரு இத்தாலிய நீதிமன்றம் குற்றமற்றவர்கள் என விடுவித்தது. இத்தரகர்களுக்கு இந்தியாவுடன் எவ்வித தொடர்பும் இல்லை. மிச்செல் மீதுதான் குவிமையமே. முதலில் இத்தாலிய அரசுடனும் பின்னர் அமீரகத்துடனும் இவ்வழக்கை மோடி அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது. ஒரு ஐ.நா. அமைப்பின் தகவலின்படி அமீரக அரசை மகிழ்விக்கும் அமீரக இளவரசி ஷீகா லத்தீஃபாவை கோவா கரையிலிருந்து முதலில் கடத்தி பின்னர் அவளைத் திரும்ப துபாயிடம் ஒப்படைக்க இந்திய அரசு உதவியதாம். துபாய் அரசரும் அமீரகப் பிரதமருமான தன் தந்தையின் அடக்குமுறையிலிருந்து லத்தீஃபா தப்பிக்கும்போது இவ்வாறு நடந்ததாம்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் G-20 உச்சி மாநாட்டுக்குச் செல்லாமல் துபாய் சென்று மிச்செலை வெற்றிகரமாக இந்தியாவிற்கு அழைத்து வந்ததிலிருந்தே (மோடியின் பிரசாரத்தின்போது இது நடந்தது) இதன் முக்கியத்துவம் புரியும். ஆனால் மோடியின் பேச்சால் குட்டு தானாக வெளிப்பட்டது. இந்திய அதிகாரிகளால் மறுக்கப்பட்ட மிச்செல்லும் அவரது வழக்கறிஞரும் சுமத்திய குற்றங்கள் மோடியின் பேச்சால் நிரூபணமாகின. சிபிஐ (அ) அமலாக்கப்பிரிவினரின் குற்றப்பத்திரிகையை ‘தாண்டிச் சென்ற’ மோடி ‘திருமதி சோனியாவின் கடிதம்’ பற்றியும் ராகுலின் நண்பர்களுக்கு மிச்செல் உதவியது பற்றியும் தன் பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மிச்செல்லிடம் முறையான விசாரணையை சிபிஐ துவக்குவதற்கு முன்னரே ரகசியங்கள் பலவற்றை மோடியே ‘வெளியிட்டு விட்டார்’.
இந்திய விசாரணை அதிகாரிகள், ராஜதந்திரிகளின் நம்பகத்தன்மையை இப்பேச்சு பாதித்திருந்தலும், பிரதமர் தன் பேச்சை மறுக்கப்போவதில்லை. சட்டசபை தேர்தல்கள் – பாரளுமன்றத் தேர்தலுக்கான ‘அரையிறுதிப் போட்டி’ போன்றவை – எப்படி இருந்தாலும், 2019இல் இன்னும் போர்க்குணத்துடன் பிரசாரம் செய்ய மோடி தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். மிச்செல் தரப்போகும் ‘வாக்குமூலங்கள்’ காங்கிரசைக் கிழிகிழியென்று கிழிக்கத் தேவையான ‘வெடிமருந்தை’ தனக்குத் தருமென்றும் இதனால் மக்கள் தானளித்த பொய் சத்தியங்களை மறந்து விடுவார்களென்றும் நினைக்கிறார். ஆனால் அந்த நம்பிக்கையில் ஒரு வெறுப்பும் தென்படாமலில்லை…
மானினி சாட்டர்ஜி
கட்டுரையாளரின் மின்னஞ்சல் முகவரி: manini.chatterjee@abp.in
நன்றி: https://www.telegraphindia.com/opinion/the-michel-gambit-lies-and-innuendoes-mark-modi-s-agustawestland-drive/cid/1678204

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக