சனி, 8 டிசம்பர், 2018

நேர்மையான அதிகாரி சுபோத்குமார் சிங்- கை திட்டமிட்டு ஏமாற்றி படுகொலை செய்த ஆர்எஸ்எஸ் கும்பல் – அதிர்ச்சி தகவல்


தீக்கதிர்.com : உத்திரபிரதேச மாநிலத்தில் மதவெறி கும்பல்களின் சூழ்ச்சிகளுக்கு எதிரான நேர்மையாக நடவடிக்கை எடுத்து வந்த காவல்துறை அதிகாரி சுபோத்குமார் சிங்கை ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் கும்பல் திட்டமிட்டு படுகொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
உத்தரப் பிரதேசம் தாத்ரியை அடுத்துள்ள பிசோதா கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி இரவு பசுவை பலி கொடுத்து அதன் இறைச்சியை முகமது இக்லாக் (58) குடும்பத்தினர் சாப்பிட்டதாக கூறி ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தள் கும்பல் முதலில் வதந்தியை பரப்பியது. அதனை தொடர்ந்து 200 பேர் கொண்ட கும்பல் இக்லாக் வீட்டுக்குள் புகுந்து அவரை அடித்தே கொன்றது. இந்த வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி சுபோத் குமார் சிங் அங்கிருந்த இறைச்சியை பரிசோதனைக்கு அனுப்பினார்.
அதில் இக்லாக் வைத்திருந்தது ஆட்டு கறி என்றும், பஜ்ரங்தள் கும்பல் திட்டமிட்டு ஒரு ராணுவவீரரின் தந்தை முகமதுஇக்லாக்கை படுகொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் வெளிஉலகிற்கு தெரிய வந்தவுடன் சுபோத் குமார் சிங்கை யோகி அதித்யாநாத் அரசு இடமாற்றம் செய்தது. இந்நிலையில் புல்சந்தார் பகுதியில் சுபோத்குமார் சிங் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இவரை எப்படியாவது காலி செய்து விட வேண்டும் என்று திட்டமிட்ட கும்பல் ஒரு திட்டத்தை தீட்டியிருக்கிறது. இந்த கலவரமே இந்துத்துவா அமைப்புகளால் திட்டமிட்டு நடத்தப்பட்டதுதான் என்பதும் தற்போது தெரிய வந்திருக்கிறது. புல்சந்தார் வட்டாட்சியர் ராஜ்குமார் பாஸ்கர் இதுகுறித்து திடுக்கிடும் விவரங்களை தெரிவித்துள்ளார்.
பசுவை கொன்று அதன் தோலை மரத்தில் தொங்கவிட்டிருக்கின்றனர். இது மாட்டுக்கறியை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்யும் செயல் அல்ல. காரணம் அப்படி சாப்பிடுபவர்கள் ஒருசிறு பாகத்தை கூட விடாமல் மறைத்து விடுவார்கள். ஆனால் இங்கு எல்லோரும் பார்க்கும் படியாக தொங்கவிடப்பட்டிருக்கிறது.
மேலும் இதுகுறித்து முதல் தகவல் தெரிந்தே ஐந்தே நிமிடத்தில் ஆர்எஸ்எஸ் , ஹிந்து யுவா வாஹினி, சிவசேனா, பஜ்ரங்தள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் பசுபாதுகாவலர்கள் என்ற பெயரில் உடனே வந்துள்ளனர். அதுவும் ஏற்கனவே டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் தகவல் தெரிவிப்பதற்கு முன்பே எப்படி தயார் நிலையில் இருந்திருக்க முடியும். தகவல் தெரிந்த ஐந்தே நிமிடங்களில் பல்வேறு பகுதிகளில் உடனே எப்படி 400 க்கும் மேற்பட்டோர் கூட முடியும். அதுவும் வந்து சேர்ந்தவுடன் உடனே எப்படி கலவரத்தில் ஈடுபட முடியும்.. இது முன்திட்ட மிட்ட படுகொலையே ஆகும் என வருவாய் வட்டாச்சியர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இவரின் கூற்றை உறுதி படுத்தும் காவல்துறை அதிகாரிகள், அதற்கான காரணத்தையும் முன் வைக்கின்றனர். முதலில் மறியல் செய்வது போல்கூடியவர்கள், காவல்துறையினர் சென்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போது திடீரென் அனைவரும் தாக்குதல் தொடுத்தனர். அதில் குறிப்பாக இக்லாக் வழக்கை விசாரித்து ஆதரங்களை சேகரித்து வந்த சுபோத் குமார் சிங்கை குறிவைத்து தாக்கினர். அதோடு மட்டுமல்லாமல் அவரது கண்ணை குறிவைத்து சுட்டனர்.
சுபோத்குமார் சிங் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது, அவரை மீட்டு நாங்கள் ( காவல்துறையினர்) மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். ஆனால் அதை அறிந்த அந்த கும்பல் சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் தடுத்து மீண்டும் சுபோத்குமார் சிங் மீது தாக்குதல் நடத்தியதோடு, எங்கள் மீது தாக்குதலை தொடுத்தனர். அதன் பின்னர் நாங்கள் அவரை விட்டு விட்டு தப்பி ஓடி வந்தோம். இந்த கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. குறிப்பாக சுபோத்குமார் சிங்கை கொல்வதற்காக நடத்தப்பட்ட கலவரமாகவே தெரிகிறது என தெரிவித்துள்ளனர்.
இந்த கலவரம் மற்றும் சுபோத்குமார் சிங் கொலை குறித்து ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், ஹிந்து யுவா வாஹினி அமைப்புகளை சேர்ந்த 27 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் முதன் முதலில் மாட்டு தோல் இருப்பதாக சுபோத்குமாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்த பஜரங்தளை சேர்ந்தவரை முதல் குற்றவாளியாக சேர்த்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக