சனி, 8 டிசம்பர், 2018

பொன் மாணிக்கவேலின் கோரிக்கைக்கு நீதி மன்றம் மறுப்பு .. அறநிலைய துறை விசாரணைக்கு தடை கிடையாது

பொன்மாணிக்கவேல் கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு!மின்னம்பலம் :மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டது தொடர்பான புகார் குறித்த இந்து சமய அறநிலையத் துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற பொன்மாணிக்கவேல் கோரிக்கையை ஏற்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன்பு நேற்று (டிசம்பர் 7) விசாரணைக்கு வந்தன. அப்போது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் மயில் சிலை மாற்றப்பட்டது குறித்து அறநிலையத் துறை விசாரணைக் குழுவால் தங்கள் விசாரணைக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இந்து சமய அறநிலையத் துறை குழு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்தார்.

இதற்கு, துறைக்குள் நடத்தப்படும் விசாரணையால் மற்ற விசாரணை அமைப்பின் விசாரணை எந்த வகையிலும் தடைபடாது என்று தெரிவித்தது அறநிலையத் துறை தரப்பு.
இதையடுத்து, துறை ரீதியான விசாரணையும் குற்ற வழக்கு விசாரணையும் ஒரே நேரத்தில் நடைபெறலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், பொன்மாணிக்கவேலின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டனர். சிலைகளுக்கான பாதுகாப்பு மையங்கள் அமைப்பது தொடர்பான வழக்கில், மையங்களில் உள்ள சிலைகளுக்கு உரிய முறையில் பூஜைகள் செய்யப்பட்டு வருவதாக அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பிட்ட சிலை பாதுகாப்பு மையத்தில் 42 சிலைகள் போலியானவை எனவும், அச்சிலைகளை ஆய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன். தற்போது தமிழகத்தில் உள்ள 19 சிலை பாதுகாப்பு மையங்களில் உள்ள அனைத்து சிலைகளையும் தொல்லியல் துறை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், படிப்படியாக இந்த சிலைகளை ஆய்வு செய்ய முடியும் எனவும் தெரிவித்தனர் நீதிபதிகள். இந்த வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்குத் தள்ளிவைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக