சனி, 8 டிசம்பர், 2018

துரைமுருகன் -ஆ.ராசா: சாதிச் சிமிழுக்குள் அடைப்பதா?

துரைமுருகன் -ஆ.ராசா: சாதிச் சிமிழுக்குள் அடைப்பதா?மின்னம்பலம் :திமுகவில் என்னதான் நடக்கிறது? மினி தொடர் 8-ஆரா வேலூர் மாவட்ட திமுகவின் கடை நிலை நிர்வாகிகள் இடையே பேசும்போது நாம் ஏற்கனவே குறிப்பிட்டது மாதிரி அவர்கள் துரைமுருகன் ஆதரவு நிலையிலும் தலைமை எதிர்ப்பு நிலையிலும் இருப்பது தெரிகிறது.
கலைஞர் தலைவராக இருக்கும்போது திமுகவைத் தாக்கி ராமதாஸ் அறிக்கை விட்டால், பெரும்பாலும் பதில் அறிக்கையை அதே வன்னியர் இனத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆறுமுகத்திடம் இருந்து வெளியிட வைப்பார். அதே சாதி என்பது மட்டும் காரணம் அல்ல.... உமக்கு பதில் அளிக்க எங்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் அளவிலான நபரே போதுமானவர் என்பதைக் காட்டுவதற்கான ஒரு சமிக்ஞைதான்.
இதுபற்றிக் குறிப்பிட்டு வேலூரின் சில திமுக நிர்வாகிகள் நம்மிடம் மனம் திறந்தனர். இவர்கள் துரைமுருகனின் தீவிர ஆதரவாளர்கள் என்பது நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

“கூட்டணி பற்றி பொருளாளர் துரைமுருகன் அளித்த பேட்டிக்கு பதில் சொல்வதாகவும், விளக்கம் சொல்வதாகவும், தலைமையின் பொழிப்புரை சொல்வதாகவும் இருக்கட்டும் என நினைத்து கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசாவைப் பேட்டி அளிக்க வைத்திருக்கிறார் தலைவர்.

ஆனால், இது எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதை அறியாமல் இருக்கிறாரா அல்லது அப்படி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே இதை நடத்தியிருக்கிறாரா என்பதும் புரியவில்லை” என்ற துரைமுருகன் ஆதரவாளர்கள் சில சம்பவங்களையும் பட்டியலிட்டனர்.
“ஆம்... துரைமுருகன் உயர் நிலை செயல் திட்டக்குழுவில் பேசும்போதே பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவரலாம் என்று கருத்து தெரிவித்தார். துரைமுருகன் முழுக்க முழுக்க அரசியல் ரீதியாகப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகளின் வாக்கு வங்கியை விட பாமகவின் வாக்கு வங்கி அதிகம். இந்த இரு கட்சிகளில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக அளவு தனது ஓட்டுகளை டிரான்ஸ்ஃபர் செய்வது அதாவது மடைமாற்றுவதில் விடுதலை சிறுத்தைகளைவிட பாமகவே முன்னணியில் இருக்கும் என்பதும் துரைமுருகனின் அபிப்ராயம். அந்த அடிப்படையில் அவர் பாமகவை உள்ளே கொண்டுவரலாம் என்று பேசினார்.
ஆனால், உயர் நிலைக் குழுக் கூட்டம் முடிந்தபிறகு, ‘அண்ணன் அவங்க இனத்துக்காக பேசுறாரு’ என்று சில தலைமைக் கழக நிர்வாகிகள் வெளியே விவாதித்திருக்கிறார்கள். திராவிடக் கட்சியின் மூத்த தலைவரான துரைமுருகனையே அவர்களால் வன்னியர் என்ற சிமிழுக்குள் அடைத்துவிட முடிகிறது. பாமகவைக் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று சொன்னால், அது வன்னிய பாசம் என்று ஒரு கற்பிதத்தை சில திமுக தலைமை நிர்வாகிகள் எங்கோ சென்று பாடம் படித்திருக்கிறார்கள்.
தலைவர் கலைஞர் தேர்தல் அரசியலில் சாதியை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற நுட்பம் அறிந்தவர். ராமதாஸ் திமுகவுக்கு எதிரான நிலை எடுத்தபோது அவரால் திமுகவுக்கு வன்னியர் சமூக ஓட்டுகள் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக அப்போது துரைமுருகனிடம் ஆலோசித்தார். அப்போது துரைமுருகன் ராமதாஸுக்கு எதிரான வன்னிய அமைப்புகளிடம் பேசி அவற்றை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்படி துரைமுருன் பல வன்னிய இயக்கங்களை ஒருங்கிணைத்து அப்போதைய வீரவன்னியர் பேரவையின் தலைவராக இருந்த ஜெகத்ரட்சகனை திமுகவுக்குக் கொண்டுவந்தார். அதன் பின் அவர் மத்திய இணை அமைச்சராக சென்றது வரை அனைவருக்கும் தெரியும். இந்த செயல்பாடு வன்னியர்களுக்கு ஆதரவானதா? திமுகவுக்கு ஆதரவானதா?” என்று கேள்வி கேட்கிறார்கள் துரைமுருகனின் ஆதரவாளர்கள்.

அந்த வகையில்தான் துரைமுருகன் இப்போதும் பாமகவை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார். இதன் மூலம் திமுகவுக்கு ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்தபட்சம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் மடைமாற்றம் ஆகும் என்றும், சிறுத்தைகளிடம் இருந்து அவ்வளவு வாக்குகள் மடைமாற்றம் ஆகாது என்றும் கணக்குப் போடுகிறார். இது அரசியல் கணக்குதானே தவிர சாதியக் கணக்கு அல்ல என்பது துரைமுருகன் தரப்பினரின் வாதம்.
அவர்கள் அதோடு விடவில்லை.
“துரைமுருகனின் கருத்துக்கு பதில் அளிப்பதாக இருந்தால் தலைவர் தளபதி ஒரு சில கருத்துகளைச் சொல்லி இந்த விவாதத்தை முடித்திருக்கலாம். ஆனால் துரைமுருகனுக்கு எதிரணியாகப் பட்டிமன்றம் நடத்துவது என்பது போலத்தான் அண்ணன் ஆ.ராசா அவர்களை தொலைக்காட்சிகள் மூலம் பேட்டிகள் அளிக்க வைத்திருக்கிறார்.
துரைமுருகனும், ஆ.ராசாவும் திமுகவின் சொத்துகள். ஆ.ராசாவின் மாநாட்டு உரைகளைக் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறார் துரைமுருகன். ஆனால் சாதிய சமூகமான தமிழ்நாட்டில் இந்த இரண்டு ஆளுமைகளின் பெருமைகளை உணரத் தெரியாத கடை நிலை நிர்வாகிகள் என்ன தெரியுமா பேசுகிறார்கள்?
துரைமுருகன் பேட்டிக்கு கவுன்ட்டர் கொடுக்க தலைவர் ராசாவை செலக்ட் பண்ணியிருக்காரே, அதற்குச் சாதிதான் காரணமா என்று கேட்கிறார்கள். இந்தப் பேச்சு திமுகவிலேயே வருகிறது என்றால் பாமகவில் கேட்க வேண்டுமா என்ன? அவர்கள் திமுகவுக்குள்ளேயே வன்னியர் -தலித் பிளவு இருப்பதாக இதை ஊதிப் பெரிதாக்குகிறார்கள். இந்த நிலையை திமுக தலைவர் தவிர்த்திருக்க வேண்டும்” என்று நம்மிடம் பெயர் குறிப்பிடாமல் பேசி முடித்தார்கள் திமுக வேலூர் நிர்வாகிகள்.
அரசியலில் சாதிக் கண்ணாடியும், சாதியில் அரசியல் கண்ணாடியும் தமிழகத்துக்குப் புதிதல்ல. அதுதான் இப்போது திமுகவுக்குள் நடந்துகொண்டிருக்கிறது. இதைக் கையாள்வது தளபதியின் சமர்த்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக