செவ்வாய், 18 டிசம்பர், 2018

தாம்பரத்தில் பேருந்துக்குள் தாயைக்கொன்ற தனயன்: சகோதரிக்கும் அரிவாள் வெட்டு

THE HINDU TAMIL : தாம்பரத்தில் சொத்துப் பிரச்சினையில் தாய், சகோதரி இருவரையும் அரிவாளால் வெட்டிய மகன் போலீஸில் சரணடைந்தார். இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த காயரம்பேடு பகுதியை சேர்ந்தவர் முத்தம்மாள் (77). இவருக்கு தேவராஜ் (53) என்கிற மகனும், விஜயலட்சுமி (55) என்கிற மகள் உட்பட 3 மகள்கள் உள்ளனர். முத்தம்மாளுக்கு சொந்தமாக கூடுவாஞ்சேரியில் 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரித்துக் கொடுப்பது சம்பந்தமாக மகன் தேவராஜுக்கும் தாய் முத்தம்மாளுக்குமிடையே தகராறு இருந்து வந்துள்ளது. சொத்தை சரி பாகமாக மூன்று மகள்கள் மற்றும் மகனுக்கு கொடுக்கவேண்டும் என முத்தம்மாள் பிடிவாதமாக இருந்தார்.
சமீபத்தில் சொத்து பிரிக்கப்பட்டது. இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்தார் தேவராஜ். ஆத்திரம் கொலைவெறியாக மாற தாயையும் சகோதரியையும் கொல்ல திட்டமிட்டார். இன்று முத்தம்மாளும், விஜயலட்சுமியும் கூடுவாஞ்சேரியிலிருந்து கோவூரில் வசிக்கும் இன்னொரு மகள் வீட்டுக்கு புறப்பட்டு தாம்பரம் வந்தனர்.

அவர்களை கூடுவாஞ்சேரியில் கொல்ல தேவராஜ் திட்டமிட கும்பல் அதிகமாக இருந்ததால் கொல்ல முடியவில்லை. அவர்கள் பேருந்தில் ஏறி தாம்பரம் பேருந்து நிலையம் வந்து இறங்கியுள்ளனர். அங்கிருந்து கோவூர் செல்வதற்காக அய்யப்பந்தாங்கல் செல்லும் 166 எண் அரசுப்பேருந்தில் இருவரும் ஏறி அமர்ந்துள்ளனர்.
பேருந்தில் கூட்டமில்லை, அப்போது திடீரென பேருந்தின் உள்ளே ஏறிய தேவராஜ் கண்ணிமைக்கும் நேரத்தில் தாய் முத்தம்மாள், சகோதரி விஜயலட்சுமி இருவரையும் வெட்டினார். இதில் இருவரும் ரத்தவெள்ளத்தில் பேருந்தில் விழுந்தனர்.
இருவரும் உயிரிழந்ததாக கருதிய தேவராஜ் ரத்தம் தோய்ந்த அரிவாளுடன் தாம்பரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். பேருந்துக்குள் வெட்டப்பட்ட நிலையில் பெண்கள் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸும் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து சோதித்ததில் முத்தம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது.
உயிருக்கு போராடிய விஜயலட்சுமி குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போலீஸார் முத்தம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை நடந்த தாம்பரம் ஸ்டேஷன் லிமிட்டில் போலீஸார் பற்றாக்குறை உள்ளது எனவும், இருப்பவர்களும் பந்தோபஸ்து டூட்டிக்கு அனுப்பப்படுவதால் வழக்கமான பாதுகாப்புக்கூட இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக