புதன், 12 டிசம்பர், 2018

பொருளாதாரம் தான் மிகப்பெரிய மதம். . ஒரு செங்கலை அகற்றினால் அகற்றியவன் தலையிலேயே இன்னொரு செங்கல்..

Karthikeyan Fastura : இங்கே எல்லாமே Corporate Game தான். அது தான் 2014ல் மோடி
அலையை ஏற்படுத்தி வாய்ப்பும் பிஜேபிக்கு கொடுத்தது.
ஆனால் அவர்கள் அளவுக்கு மீறி ஆடியதன் விளைவு கார்பொரேட்டுகளுக்கே ஆப்பாக முடிந்தது.
டிமானிட்டைசேசன் நேரடியாக கார்போரெட்டை பாதிக்காவிட்டாலும், வங்கிகளை வெகுவாக பாதித்தது. அது முதல் தவறு.
ஜிஎஸ்டியின் அவசரகோல Implementation மத்திய மற்றும் சிறு குறு வணிகர்களை வெகுவாக பாதித்தது. அதன் எதிரொலி ஆறுமாதங்களுக்கு பிறகு இந்திய சந்தையிலும் எதிரொலித்தது. Nifty Midcap 50 பங்குகள் 2018 ஜனவரியில் இருந்து விழுக தொடங்கியது இன்றும் விழுந்துகொண்டே இருக்கிறது.
ஒரு நாட்டின் பொருளாதாரம் ஸ்திரதன்மை இருக்க அந்த நாட்டின் உற்பத்தி திறன், நுகர்வோர் வாங்கும் திறன், சட்டம் ஒழுங்கு, நீதி மன்ற பரிபாலனை, எரிபொருள் விலை குறைவு, போக்குவரத்து துறை, உள்நாட்டு கட்டுமானம், பணம் மதிப்பு எல்லாம் சீராக இருக்க வேண்டும். இது எல்லாவற்றிலும் மோடி அரசு சொதப்பி வைத்தது. பொருளாதார சரிவை நோக்கி இந்தியாவை செலுத்திக் கொண்டிருக்கிறது. இதை மீட்க தவறான முடிவுகளாக தொடர்ந்து எடுத்து வருகிறார்கள். அதன் உச்சமாக மத்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பிலும் கை வைக்கிறது. இது வெளிநாட்டு முதலீட்டாளர்களை அச்சமடைய வைத்திருக்கிறது. அவர்கள் மோடி அரசை முற்றிலுமாக வெறுக்க தொடங்கியது இந்த புள்ளியில் தான்.

தேர்தல் ஆணையம், நீதி மன்றங்கள் போன்ற சுயாட்சி அரசு மையங்களை எல்லாம் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்க முயற்சிக்கிறது. நாட்டை சீர்குலைக்க போதுமான அம்சம் இது.
உச்சமாக அரசுப்பணம் பெரும் சிலைகளில் வீணடிக்கப்படுவதை எல்லாத்தரப்பும் கண்டிக்கின்றன. பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டிக்கும் அளவுக்கு மோசமானது. ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காமல் ராமர் சிலை 200 அடியில் கட்டப்படும் என்று யோகி அதித்யநாத் அறிவித்திருப்பது இன்னும் வெறுப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. உள்நாட்டு கட்டுமானங்களில் செலவழிக்க வேண்டிய முதலீட்டை சிலைகளில் செலவழிப்பதை சந்தை முதலீட்டாளர்கள் உள்ளிட்ட யாரும் ரசிக்கவில்லை.
இதே அரசின் முன்னாள் நிதி அமைச்சர், ஆர்பிஐ கவர்னர் மட்டுமல்லாமல், அரசின் பொருளாதார ஆலோசகர் முதற்கொண்டு இவர்களின் சொந்த ஆதரவு பொருளாதார வல்லுனர்கள் அனைவரும் விலகியது சந்தையின் முதலீட்டாளர்களை அச்சுறுத்தியிருக்கிறது.
ஆகவே தான் இதுவரை ஆளும்கட்சிக்கு ஆதரவாக ஒவ்வொருமுறையும் அவர்கள் வெற்றி அடையும்போது உற்சாகம் அடைந்து உயர்ந்த சந்தை, அவர்கள் வீழும்போதெல்லாம் விழுந்த சந்தை இப்போது வழக்கத்திற்கு மாறாக ஆளும் அரசு வீழும் போது எழுந்திருக்கிறது அதுவும் ஆர்பிஐ கவர்னர் பதவி விலகியும் இந்த ஏற்றம் உண்மையில் சந்தையின் மனநிலையை துல்லியமாக எடுத்துக்கூறியிருக்கிறது.
இந்திய சந்தையானது அரசியலில் புதிய மாற்றத்தை எதிர்பார்க்கிறது என்பது ஆளும் கட்சிக்கு ஆப்புதான். இதன் எதிரொலியாக இனி மீடியாக்கள் கட்சி மாறும். காங்கிரஸ் பக்கம் சாய்வார்கள். ஏற்கனவே சிலர் அந்தப்பக்கம் சென்றும் விட்டனர்.
எப்போதும் இல்லாத அளவிற்கு எதிர்கட்சிகளும் ஒன்று கூடியிருக்கிறது. என்னதான் மதத்தை வைத்து அரசியல் செய்தாலும் இந்த நூற்றாண்டில் பொருளாதாரம் தான் உண்மையில் மிகப்பெரிய மதம். அதை புரிந்துகொள்ளாமல் செயல்படும் எந்த அரசும் வீழவே செய்யும்.
ஆகவே தான் ஆளும் அரசின் இந்த தோல்வியை மார்கெட் கொண்டாடுகிறது. உண்மையில் இந்தியாவின் தொழில், பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை கட்டமைத்த சிற்பிகள் நேருவையும், அம்பேத்காரையும் இந்த நேரத்தில் நன்றி கூறியே ஆகவேண்டும்.
அவர்கள் கட்டுமானத்தில் ஒரு செங்கலை அகற்றினால் அகற்றியவன் தலையிலேயே இன்னொரு செங்கல் விழுகும் வண்ணம் இருக்கிறது என்பது தான் இதன் சிறப்பம்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக