சனி, 8 டிசம்பர், 2018

திருமாவளவன் : பிற ஜாதி பெண்களை கட்டி அணைப்போம் கோஷமிட்ட இளைஞன் சிறுத்தைகள் அல்ல ? விடியோ


tamil.thehindu.com : அம்பேத்கர் நினைவு நாளில் மாற்று சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம் என கோஷமிட்டவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, தேர்தல் நேரத்தில் விடுதலை சிறுத்தைகள் மீது அபாண்டத்தை எச்.ராஜா புகுத்துகிறார் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் நினைவு நாளில் அவரது படத்துக்கு மாலையிட்டு மாற்று சமூகப் பெண்களைக் காதலிப்போம், கட்டிப்பிடிப்போம், திருமணம் செய்வோம் என கொள்கை முழக்கம்போல் இளைஞர் ஒருவர் கோஷமிட்ட காணொலி வாட்ஸ் அப் வலைதளங்களில் பரவலானது. இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் சரக்கு, மிடுக்கு பேச்சுதான் காரணம் என ராஜா ட்விட்டரில் கண்டித்திருந்தார். பலரும் இதைக் கண்டித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் காரணம் என முடிவு செய்து வேலூர் குடியாத்தத்தில் புகார் அளிக்கப்பட்டு சி.எஸ்.ஆர் பெறப்பட்டது.

தற்போது இந்த விவகாரத்தில் பேட்டி அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இளைஞர் கோஷமிட்டதைக் கண்டிப்பதாகவும், அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவரே அல்ல என்றும், எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எச்.ராஜா அவ்வாறு பதிவிட்டார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் சென்னையில் இன்று அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
“சமூக வலைதளங்களில் அம்பேத்கர் உருவப்படத்துக்கு முன் நின்றுகொண்டு ஒரு இளைஞர் தலித் அல்லாத சமூகத்துப் பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் தன்னுடைய விருப்பம்போல் சில முழக்கங்களை எழுப்பியுள்ளார். இது அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
அந்த இளைஞர் தலித் சமூகத்தைச் சார்ந்தவரா அல்லது வேறு சமூகத்தைச் சார்ந்தவர்தானா? என்கிற சந்தேகம் உள்ளது. அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என சிலரும் சொல்கின்றனர். யாராக இருந்தாலும் அந்த முழக்கம் மிகவும் கண்டனத்துக்குரியது. அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால் எந்த ஆதாரமும் இல்லாமல்,  எடுத்த எடுப்பிலேயே அந்த இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என பாமக சார்பில் புகார் கொடுத்து அதற்கு சி.எஸ்.ஆரும் வாங்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்க யாருக்கும் உரிமை உண்டு.
ஆனால் விசாரிக்காமலேயே, ஆதாரமம் இல்லாமலேயே அந்த இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர் என்று புகார் கொடுத்து அதை சமூக வலைதளங்களில் ஏற்றுவது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. பாமகவைச் சேர்ந்தவர்கள், சாதியவாத சக்திகள் திட்டமிட்டுச் செய்து வருகின்றன.
அந்த இளைஞர் சொன்னதை நியாயப்படுத்தவில்லை, ஆனால் அந்த இளைஞருக்கும் விடுதலை சிறுத்தைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவரும் இல்லை. ஆனால் உலகம் முழுவதும் இதைப் பரப்புவது எவ்வளவு பெரிய அனாவசிய அரசியல் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இதை எதிர்த்து திட்டமிட்டு வதந்தி பரப்பி, சாதிய மோதலைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் வளர்ந்து வருவதைப் பிடிக்காமல். திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள்,இடதுசாரிகள், காங்கிரஸ், மதிமுக, முஸ்லீம் லீக் போன்ற மிகப்பெரும் கூட்டணி அமைவதை பொறுத்துக்கொள்ள முடியாத சனாதன கட்சிகள் இம்முயற்சியில் ஈடுபடுகின்றன.
காவல்துறை முறையாக விசாரித்து அவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் என்பதை வெளியிட வேண்டும். தலித் இளைஞர்கள் இவ்வாறு ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.
 பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதைப் போல என்றைக்கோ பாமகவுக்கு எதிராக நான் பேசியதை திரித்து இன்று வேண்டுமென்றே, இணைத்து, பிணைத்து பொதுமைப்படுத்தி வெளியிடுகிறார்.
நான் திட்டமிட்டு அநாகரிகத்தைப் பரப்புவதுபோன்று ஒரு வதந்தியை இந்த சந்தர்ப்பத்தில் பரப்புகிறார். சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கிறார். சமூகப் பதற்றத்தை உருவாக்க முயல்கிறார். விடுதலை சிறுத்தைகளை தனிமைப்படுத்துவதை மட்டுமல்லாமல் கூட்டணிக்கு எதிராகவும் காய் நகர்த்துகிறார் ராஜா.
அந்த இளைஞர் விடுதலை சிறுத்தைகள் கட்சி என எந்த ஆதாரத்தை வைத்து எச்.ராஜா முடிவு செய்தார். என்ன ஆதாரத்தை வைத்துள்ளார். அவரிடம் கட்சிக்கொடி இருந்ததா? உடை எதுவும் போட்டிருந்தாரா? எந்த ஆதாரத்தில் பதிவிட்டார்.
பொதுமக்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள். திட்டமிட்டு பழியைப் போட்டு அவதூறு பரப்புகிறார். அதைத் தாங்கலாம். ஆனால், சமூகப் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார். தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் சமூக வலைதளம் மூலம் அவதூறு பரப்பும் அரசியல் உள்நோக்கோடு காய் நகர்த்தும்முயற்சி இது. பொதுமக்கள் இதை நம்பிவிட வேண்டாம்''.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக