ஞாயிறு, 9 டிசம்பர், 2018

கனிமொழி சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது.. ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தி.. லோக்மத்


tamilthehindu : 2018-ம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற
உறுப்பினருக்கான விருது கனிமொழிக்கு வழங்கப்படுகிறது. பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் இந்த விருது வழங்கப்படுகிறது.
''கனிமொழி நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக  மகத்தான பங்காற்றியுள்ளார். ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழிக்கு  2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது'' என்று பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் தெரிவித்துள்ளது.
லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், ‘நாடாளுமன்ற விருதுகள்’ இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. வரும் 13 ஆம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி,  அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார்.

கனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கும் ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தியாகவும் திகழ்வதாக லோக்மட் குறிப்பிட்டுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் திமுக மகளிரணிச் செயலாளர் என பொறுப்புகள் வகித்து வரும் கனிமொழிக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக