செவ்வாய், 18 டிசம்பர், 2018

மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் மசோதா: மக்களவையில் அமளி!
மின்னம்பலம்: இரண்டாண்டுகளுக்கு முன்பு மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மாற்றுப் பாலினத்தவருக்கான உரிமைகள் பாதுகாப்பு மசோதா, நேற்று (டிசம்பர் 17) உறுப்பினர்களின் கடும் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
2015ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று, மாநிலங்களவையில் மாற்றுப் பாலின உரிமைகள் பாதுகாப்பு மசோதா 2014ஐ தாக்கல் செய்தார் திமுகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா. தனிநபர் மசோதாவின் கீழ் இது தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுப் பாலினத்தவருக்குத் தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க இது வழி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா ஏகமனதாக மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பாராட்டு தெரிவித்தார் அப்போதைய மாநிலங்களவைத் துணைத்தலைவர் பி.ஜே.குரியன்.

2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், மாற்றுப் பாலின உரிமைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர், இந்த மசோதா சமூக நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு மீண்டும் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, மீண்டும் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
நேற்று மதியம் மாற்றுப் பாலின உரிமைகள் மசோதாவை மக்களவையில் மீண்டும் கொண்டுவந்தார் மத்திய சமூக நீதித் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட். இதில் 27 பரிந்துரைகளை வலியுறுத்தியது நாடாளுமன்ற நிலைக்குழு என்றும், அவை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரஃபேல் ஒப்பந்தம் குறித்துக் குரல் எழுப்பினர் எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.
சசிதரூர் அதிருப்தி
மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவில் 41 திருத்தங்கள் வரை மேற்கொள்ள வேண்டுமென்று தெரிவித்தார் காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர். “இந்த மசோதா முழுமையற்று உள்ளது. மாற்றுப் பாலினத்தவர் யார் என்பது குறித்து மசோதாவில் இடம்பெற்ற விளக்கம் குறைபாடுடையதாக உள்ளது. ஒருவர் மாற்றுப் பாலினத்தவரா என்பதை அறிய பரிசோதனைக் குழு அமைக்கும் முடிவு கேலிக்குரியதாக உள்ளது. அதேபோல, மாற்றுப் பாலினத்தவரைத் துன்புறுத்துவதற்கான தண்டனைகள் பெண்களிடம் பாலியல் குற்றங்களை ஏற்படுத்துபவருக்குத் தருவது போன்றே இருக்க வேண்டும். மாற்றுப் பாலினத்தவரின் திருமணம், விவாகரத்து, உரிமைகள் தொடர்பாகப் பெரிதாக இம்மசோதாவில் ஏதும் இல்லை. எனவே, இதைத் திரும்பப் பெற்றுக்கொண்டு, மாற்றுப் பாலின சமுதாயத்திடம் ஆலோசனைகள் கேட்ட பின்பு புதிதாக மசோதாவைக் கொண்டுவர வேண்டும்” என்று கூறினார்.
பெருகியது எதிர்ப்பு
பிஜு ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த பர்த்ருஹரி மஹ்தாப் பேசுகையில், மாற்றுப் பாலினத்தவருக்கான விளக்கம் தெளிவற்று இருப்பதாகத் தெரிவித்தார். “ஒருவர் தன்னை மாற்றுப் பாலினத்தவராக உணர்ந்து, பரிசோதனைக் குழு அவரை நிராகரித்தால் என்ன செய்வது? அவர் மீண்டும் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்த யாரை அணுகுவது? மாற்றுப் பாலினம் என்பதைத் தீர்மானிப்பது உடலமைப்பியலா, மனநலவியலா? பாலினம் தொடர்பான சட்டங்களில் எவையெல்லாம் மாற்றுப் பாலினத்தவருக்குப் பொருந்தும்? மத்திய அமைச்சரே 27 திருத்தங்களை முன்மொழிகிறார் என்றால், மற்ற உறுப்பினர்களும் அதில் திருத்தம் வேண்டுமென்று விரும்பும்போது புதிய மசோதாவைக் கொண்டுவர முடியாதா?” என்று கேள்வியெழுப்பினார் பர்த்ருஹரி.
தனி ஹெல்ப்லைன்
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா சுலே, விண்ணப்பங்களில் இதர பாலினம் என்பதற்குப் பதிலாக மாற்றுப் பாலினம் என்ற வார்த்தை இடம்பெற வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார். குழந்தைகள், பெண்களுக்கு இருப்பதைப் போன்ற ஹெல்ப்லைன் மாற்றுப் பாலினத்தவருக்கு அமைக்கப்பட வேண்டுமென்றும், அவர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்றும் தெரிவித்தார்.
வாபஸ் கோரிக்கை
இதேபோல, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த காகோலி கோஷும் இந்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டுமென்று வற்புறுத்தினார். தான் ஒரு மருத்துவர் என்றும், இந்த மசோதா உச்ச நீதிமன்ற நடைமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படவில்லை என்றும் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கெலாட், பல முறை இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாற்றுப் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்பு மசோதாவில் உள்ள பிரிவுகள் அனைத்தும், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளிக்கிடையே வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மாற்றுப் பாலினத்தவருக்கான இட ஒதுக்கீடு மற்றும் விளையாட்டில் பங்கேற்பு குறித்து மசோதாவில் திருத்தம் வேண்டுமென்று வலியுறுத்தினார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பதருத்தோஸா கான்.
முடிவில், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டு மக்களவை நேற்று ஒத்திவைக்கப்பட்டது.
மாற்றுப் பாலினத்தவரைப் பிச்சை எடுக்கும் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துவது, பொது இடங்களில் அனுமதி மறுப்பது, உடல்ரீதியாகத் துன்புறுத்துவது உள்ளிட்ட குற்றங்களுக்காக இரண்டாண்டு சிறைத் தண்டனை விதிப்பது குறித்த விவரங்கள் இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக