சனி, 1 டிசம்பர், 2018

டில்லி சுல்தானிய ஆட்சிக்கு திராவிடம் சவால் .. திமுக மீதான வரலாற்று தாக்குதல்கள் .

LR Jagadheesan : டில்லியில் கொஞ்சகாலமேனும்
வாழ்ந்த அல்லது வாழ
நேர்ந்தவர்களுக்கு ஒரு விஷயம் நன்கு தெரியவரும். டில்லிவாசிகளுக்கு தமிழர்கள் மீது ஒருபக்கம் அசூயையும் மறுபக்கம் வெறுப்பும்/அலட்சியமும் இயல்பாகவே இருக்கும். தமிழர்கள் மிரட்டலுக்கு அடிபணியும் சரியான பயந்தாங்கொள்ளிகள், அடிமைகள் என்பது டில்லியின் பொதுசமூகத்தின் புரிதல். அதனால் தான் டில்லியில் தமிழர்களுக்கு மிக எளிதில் வீடு வாடகைக்கு தருவார்கள். தமிழர்கள் தகறாறு செய்யமாட்டார்கள், தேவைப்படும்போது மிரட்டினால் காலிசெய்வார்கள் என்பதால்.
அந்த டில்லி சுல்தானிய ஆணவத்துக்கு அரசியலில் உண்மையான சவால் விடுத்ததால் தான் பொதுவாக திராவிட இயக்கம் மீதும் குறிப்பாக திமுக மீதும் அதன் நீட்சியாக பெரியார், அண்ணா, கலைஞர் மீதும் இன்றுவரை ஆழ்மன
வன்மத்தோடே டில்லி இருந்தது; இருக்கிறது; இருக்கும். வாய்ப்புகிடைத்த போதெல்லாம் தன் வஞ்சம் தீர்க்க டில்லி சுல்தானியம் தயங்கியதே இல்லை. கலைஞரின் ஆட்சி இருமுறை அநியாயமாக கலைக்கப்பட்டது முதல் அவர் மகளையும் அவரது கட்சி அமைச்சரானதால் ஆ ராசாவையும் ஜாமீனில் கூட வெளியில் விடாமல் சிறையில் அடைத்து மகிழ்ந்ததும் அந்த வரலாற்று வன்மத்தின் வெளிப்பாடுகள்.

அப்படிப்பட்ட டில்லியில் இப்படியான கோமாளித்தனங்களை தொடர்ந்து அரங்கேற்றிக்கொண்டிருக்கும் இந்த அய்யாக்கண்ணு கோஷ்டிகளின் உண்மையான நோக்கம் என்ன? என்கிற கேள்வி எழுகிறது.
ஏனென்றால் இவர் தன்னையும் சிறுமைப்படுத்திக்கொண்டு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு விவசாயகளின் உண்மையான பிரச்சனைகளையும் கேலிக்குரிய காட்சிப்பொருளாக திரும்பத்திரும்ப செய்துகொண்டே இருக்கிறார். கற்பனை வறட்சியில் சிக்கி சீரழிந்துகிடக்கும் இந்திய/தமிழக காட்சி ஊடகங்களுக்கு இந்த கோமாளிக்கூத்துகள் தேவைப்படலாம். அதனால் அவை இவற்றை ஊக்குவிக்கவும் செய்யலாம்.
ஆனால் இவரது இந்த கேலிக்கூத்துகள் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கவேண்டும்? ஏன் நீடிக்கவேண்டும்? என்கிற கேள்விகள் எழுப்பப்படவேண்டியது அவசியம்.
இவரது போராட்ட வழிமுறைகள் மட்டுமல்ல, போராட்ட இலக்கே கூட இல்லாத ஊருக்குப்போகாத வழியோ என்கிற சந்தேகமும் எழுகிறது. தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு உடனடி பொறுப்பு தமிழ்நாட்டு அரசு. அந்த அரசை எதிர்த்து இவர்களால் ஏன் ஒன்றுமே செய்ய முடியவில்லை? சேலம் எட்டுவழிச்சாலையில் ஏழை விவசாயிகளின் நிலம் பலவந்தமாக அடித்துப்பிடுங்கப்பட்ட அநியாயத்தில் இருந்து வரலாறுகாணாத கஜாபுயல் சேதாரங்கள் வரை தமிழ்நாட்டில் இருக்கும் அரசாங்கத்தின் விவசாய விரோதபோக்கை கண்டித்து இந்த அய்யாக்கண்ணுகள் ஏன் தமிழக அரசை நடுங்கவைக்கும் அல்லது பணியவைக்கும் போராட்டங்களை நடத்த மறுக்கிறார்கள்?
கூரை ஏறி கோழிபிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன் என்கிற குரளிவித்தை என்று இவற்றை எடுத்துக்கொண்டாலும் இவரது போராட்ட வடிவங்கள் தொடர்ச்சியாக தமிழக விவசாயிகளையும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் டில்லியில் கேவலப்படுத்தும் விதமாக அமைவது கண்டிக்கத்தக்கது.
இந்திய நாடாளுமன்றத்தில் சினிமாபாட்டு பாடி தமிழக அரசியலின் நிரந்தர கோமாளிகள் தாங்களே என்று தொடர்ந்து நிரூபித்துக்கொண்டிருக்கும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேவலத்துக்கு ஈடானது அய்யாக்கண்ணுகளின் இந்த அரைநிர்வாண, முழுநிர்வாண போராட்டங்கள். இவை அசிங்கமானவை; அரைவேக்காட்டுத்தனமானவை மட்டுமல்ல அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களைப்போலவே இவையும் காரியக்கோமாளித்தனங்களோ என்கிற சந்தேகத்தையே உருவாக்குகின்றன.
பிகு: விவசாயம் புனிதம்; விவசாயிகள் புனிதர்கள்; விவசாயிகளின் பிரச்சனைகள் உண்மையானவை என்று தயவுசெய்து யாரும் உபதேசம் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக