ஞாயிறு, 2 டிசம்பர், 2018

பாஜக பி.டி.அரசகுமாருக்கும், பொன்.மாணிக்கவேலுக்கும் நெருக்கமான தொடர்பு


டிஜிட்டல் திண்ணை:  சிலை கடத்தலில் அமைச்சர்கள்... பாயும் பொன் மாணிக்கவேல்
மின்னம்பலம் :
“ஐஜி பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றது, அவருக்கு பதவி நீடிப்பு வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது எல்லாம் தொடர்ந்து மின்னம்பலத்தில் படித்து வருகிறேன். இதில் வெளிவராத பல தகவல்களும் உண்டு.
“ ஜெயலலிதா இருந்த வரை, திடீரென பொன் மாணிக்கவேலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதும், திடீரென அவரை டம்மியாக்குவதும் மாறி மாறி நடக்கும். அதற்கு அத்தனைக்கும் காரணம் சசிகலாதான். காரணம், சசிகலாவுக்கு ஒருவகையில் தூரத்து உறவினர் பொன்.மாணிக்கவேல். சசிகலா மீது ஜெயலலிதாவுக்கு கோபம் வரும் போதெல்லாம் பொன்.மாணிக்கவேல் பந்தாடப்படுவார். எடப்பாடி பழனிசாமி முதல்வரான பிறகு பொன்.மாணிக்கவேல் மீது அதிக நம்பிக்கை வைக்கவில்லை. அதற்கு காரணமும், அவர் சசிகலா உறவினர் என்பதால்தான். பொன்.மாணிக்கவேலும் சில சமயங்களில் ரகசியமாக தினகரனை சந்தித்த சம்பவங்களும் நடந்தது. அது அத்தனையும் உளவுத் துறை மூலமாக எடப்பாடி கவனத்துக்குப் போனது. அதனால் தான் சிலை கடத்தல் வழக்கை பொன்.மாணிக்கவேல் விசாரிக்க தமிழக அரசே முட்டுக்கட்டையும் போட்டது.

இது ஒருபக்கம் இருக்க... பிஜேபியில் மாநில துணைத் தலைவராக இருக்கும் பி.டி.அரசகுமாருக்கும், பொன்.மாணிக்கவேலுக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. பொன்.மாணிக்கவேல் தொடர்பாக டெல்லிக்கு தொடர்ந்து பரிந்துரை செய்து வந்தவரும் அரசகுமார்தான். தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை என்ற ஒன்றே தேவை இல்லை என்பது பிஜேபியில் உள்ள சிலரது கருத்து. அவ்வாறு இல்லாமல், கோயில்கள் அத்தனையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் , தமிழ்நாட்டில் தாங்கள் நினைத்ததை செயல்படுத்த முடியும் என பிஜேபி கணக்குப் போட்டதாக சொல்கிறார்கள்.
அதற்காகத்தான், சிலைகடத்தல் என்ற விவகாரத்தை கையில் எடுத்து, தமிழக கோயில்களில் உள்ள சிலைகள் கடத்தப்படுவதற்கும், காணாமல் போவதற்கும் இந்து அறநிலையத் துறையும் அதில் பணி புரியும் அதிகாரிகளுமே காரணம் என்ற தோற்றத்தை உருவாக்க நினைத்தது மத்திய அரசு. இந்து அறநிலையத் துறையில் பணிபுரிந்த அதிகாரிகள் சிலரை இந்த வழக்குக்குள் கொண்டு வந்தார் பொன்.மாணிக்கவேல். அப்படி கொண்டு வந்தால், தமிழகத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை மீதான மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக குறையும். அதன் பிறகு இந்து அறநிலையத் துறை வேண்டாம் என பலரையும் பேச வைக்கலாம் என முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
அதற்காகத்தான் பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றாலும் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்ற பிரச்னையை கிளப்பி அவருக்கு தற்போது பணி நீடிப்பும் வழங்க வைத்திருப்பதில் மத்திய அரசுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. பொன்.மாணிக்கவேலை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பி விட வேண்டும் என தமிழக அரசும் எவ்வளவோ முயற்சிகளை செய்தது. கடைசியில் மத்திய அரசின் எண்ணமே பலித்திருக்கிறது. பொன்.மாணிக்கவேல் இனி பணிபுரியப் போகும் நாட்களில் எல்லாம், தமிழக அரசுக்கும், இந்து அறநிலையத் துறைக்கும் எதிரான செயல்களையே அதிகம் செய்யப் போகிறார். அதை அடுத்தடுத்து கவனித்தாலே எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்’ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
ஆனால், பொன்.மாணிக்கவேலுவுக்கு நெருக்கமானவர்களோ, ‘மத்திய அரசு, மாநில அரசு என்றெல்லாம் அவரு பார்க்க மாட்டாரு. சிலை கடத்தல் வழக்கில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவங்க முகத்திரையை நிச்சயமாக இனி பொன்.மாணிக்கவேல் கிழிப்பார். தமிழக அமைச்சர்களின் உறவினர்கள் சிலரும் சிலை கடத்தல் விவகாரத்தில் அடுத்தடுத்து சிக்கப் போகிறார்கள். அதற்கான ஆதாரங்களை எல்லாம் பொன்.மாணிக்கவேல் திரட்டிவிட்டார். அதையெல்லாம் மீடியா முன்பு விரைவில் வெளியிடுவார். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து கொண்டு வந்து சட்டத்தின் முன்பாக நிறுத்துவார். அவரைப் பொறுத்தவரை தப்பு செய்தது யாராக இருந்தாலும் தப்புதான்’ என்று சொல்கிறார்கள்” என முடிந்தது அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டு ஷேரும் செய்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக