செவ்வாய், 25 டிசம்பர், 2018

கருஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு : சில நெருடல்களும் சில புரிதல்களும்

திராவிடப் புரட்சி : அனைத்து பெரியாரிய இயக்கங்கள் மற்றும் பல இயக்கங்கள் இணைந்து பேரணியும் மாநாடும் நடத்தவிருக்கும் செய்தியை அறிந்து பெரு மகிழ்ச்சி அடைந்த அதே வேளையில் சில அய்யங்களும் உள்ளத்தில் எழத்தான் செய்தன. காரணம் திராவிட ஒவ்வாமை உள்ளவர்களும் உள்ளனரே என்பதால்.
இதற்கிடையே சுபவீ அய்யாவை அழைக்கவில்லை என்றொரு சர்ச்சை. திமுகவை சேர்க்கவில்லை என்று சிலருக்கு ஆதங்கம். அண்ணா, கலைஞர், பேராசிரியர் எல்லாம் பெரியாரியவாதிகள் இல்லையா என்ற கேள்விகள். இப்படியாக இருந்த சூழலில் திராவிடர் கழகமும் ஆசிரியரும் பங்கேற்கிறார்கள் என்ற செய்தி அய்யங்களில் சிலவற்றை போக்கியது.
சுபவீ அய்யா அழைக்கப்பட்டிருகிறார். இது திமுகவிற்கு எதிராக நடத்தப்படும் நிகழ்ச்சி அல்ல. திமுக மட்டுமல்ல தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த கட்சியும் அழைக்கப்படவில்லை என்ற செய்திகள் வந்தன. இருப்பினும் சிறிய சந்தேகத்தோடுதான் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருச்சி சென்றேன்.
திருச்சியில் நான் கண்ட கேட்ட சில எனது அய்யத்தை கூட்டியதாக உணர்கிறேன்.
பேரணி துவங்கும் இடத்தில் பாதுகாப்பு குழு அடையாள அட்டையை அணிந்துகொண்டு சிலர் சூழ்ந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கழுத்தில் சபரிமலைக்கு செல்ல மாலை அணிந்திருந்தார்.
காலில் செருப்பு அணியாதிருந்த அவர் நெற்றியில் பெரிதாக சந்தன குங்கும பொட்டை அணிந்திருந்தார். இதனை கண்ட நான் அவர் யாரென கேள்வியை உரக்க எழுப்பினேன். என்னோடு ஒரு தோழர் சேர்ந்து அவரை அங்கிருத்து போகச் சொன்னார். திராவிடர் கழக தோழர் தளபதிராஜ் என நினைக்கிறேன். ஒருவர் அவரிடம் பொட்டையாவது அழிக்குமாறு கூறினார். நாங்கள் வற்புறுத்தியவுடன் அவர் அங்கிருத்து நகர்வது போல சில நொடிகள் நகர்ந்து மீண்டும் அதே இடத்தில் மற்றவர்களோடு கைகளை கோர்த்துக்கொண்டு நின்றார். எனக்கிருந்த அச்சமெல்லாம் தலைவர்களின் பாதுகாப்பு குறித்தது. எதிரிகள் கலகம் மூட்டுவார்களோ, வன்முறையை தூண்டுவார்களோ, தலைவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை வந்துவிடக்கூடாதே என்று சிந்தித்துகொண்டிருந்த போது இப்படி ஒரு நபர் அங்கிருப்பது எனக்கு சரியாகப்படவில்லை. மீண்டும் பாதுகாப்பு வளையத்தை நெருங்கி ‘இங்கு இந்த பாதுகாப்பு குழுவுக்கு பொறுப்பாளர் யார்?’ என உரத்த குரலில் கேட்டேன். ஒருவர் தான்தான் என சொன்னார். அவரிடம் மீண்டும் அந்த சபரி மலைக்கு மாலை போட்டிருந்த நபரை காட்டி யார் இவரை பெரியாரியவாதிகள் கூட்டத்தில் கருப்புச்சட்டையோடு அனுமதித்தது? பத்திரிக்கையாளர்கள் அருகில் நிற்கும் இவர் ஒருவரின் புகைப்படம் போதுமானது இத்தனை பெரிய கருஞ்சட்டை பேரணியை அவமானப்படுத்த என உரத்த குரலில் கோபமாக சொன்னேன். அவரிடம் சென்று ஏதோ பேசிய அவர் மீண்டும் என் அருகில் வந்து ‘அவரும் உணர்வாளர்தான் விடுங்கள்’ என்றார். நான் மீண்டும் சொன்னேன் ‘அவர் உணர்வாளராக இருந்துவிட்டு போகட்டும் அவர் அவர் சார்ந்த அமைப்பினர் இருக்கும் பகுதிக்கு செல்லட்டும் இங்கு நிற்க வேண்டாம்’ என்று. அந்த நபர் அங்கிருந்து நகரவே இல்லை. நானே அந்த நபரிடம் சென்று ‘தயவுசெய்து இங்கிருந்து சென்று விடுங்கள் உங்களால் இத்தனை பெரிய பெரியாரியர்களின் பேரணி அசிங்கப்படுத்தப்பட்டு விடும்’ என்று கூறினேன். அவர் அங்கிருந்து இறுதிவரை போகவில்லை அவருடைய அந்த பாதுகாப்பு குழு நண்பர்களும் அவரை போகச் சொல்லவில்லை. இதனை அங்கிருந்த பலரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆசிரியர் அய்யா வந்தவுடன் அவரோடு அதற்கு மேல் பேசிக்கொண்டிருக்க முடியவில்லை. ஆசிரியர் தலைவர்கள் பகுதிக்கு வரும் வரை மற்ற தோழர்களோடு நானும் அவருக்கு பாதுகாப்பாக வளையம் அமைத்து கூடவே சென்றேன். ஆசிரியர் உள் பகுதிக்கு சென்ற பிறகு அங்கிருந்து நகர்ந்தேன். நகர்ந்தேன் என்பதை விட அந்த நபரை அகற்ற சொல்லி நான் வாதிட்ட அதன் பொறுப்பாளரால் மூர்க்கத்தனமாக நெட்டித் தள்ளப்பட்டேன். பொதுவாகவே புகைப்படம் எடுக்கும் வாய்ப்புள்ள இடத்தில் நான் இருப்பதில்லை என்பதும் நானே நகர்ந்து சென்றுவிடுவேன் என்பதும் தெரியாத அந்த நபர் என்னை நெட்டி தள்ளியதில் ஒரு உள நிறைவடைந்ததை ரசித்துவிட்டு புறப்பட்டுவிட்டேன் மாநாட்டு திடலுக்கு. இப்போது எனது கேள்வியெல்லாம் தலைவர்கள் இருக்கும் இடத்தில் சபரி மலைக்கு மாலை அணிந்துகொண்டு நெற்றியில் பெரிதாக ஆன்மீக குறியோடு பாதுகாப்பு வளையத்தில் நின்ற நபர் எந்த அமைப்பை சேர்ந்தவர்? அவரை ஏன் அங்கு நிற்க வைத்தார்கள்? இத்தனை எதிர்ப்புக்கு பிறகும் அவரை அங்கிருந்து அகற்றாமல் அடம் பிடித்தது ஏன்? உண்மையான கருஞ்சட்டைகளை விட உயர்ந்த அந்த உணர்வாளர் யார்?
திக, பெதிக, திவிக ஆகிய அமைப்புகளின் பெயர்களில் இருந்த “திராவிடர்” என்ற சொல்லைத் தவிர வேறு எங்கும் திராவிடர் அல்லது திராவிட என்ற சொல் இல்லாதிருந்தது ஏன்?
தேர்தல் அரசியலில் ஈடுபடும் அமைப்பு என்பதால் திமுக அழைக்கப்படவில்லை என்ற விளக்கம் சரியானது என்றால் மேடையில் நின்று பேசி, சால்வை அணிவித்து, பரிசு வழங்கிய குடந்தை அரசன் தேர்தலில் போட்டியிட்டவர்தானே அவர் எந்த அடிப்படையில் அழைக்கப்பட்டார்?
கருஞ்சட்டை பேரணி மாநாடு என்று அறிவித்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியின் மேடை அறிவிப்பாளர் வெள்ளை சட்டையில் இருந்தது ஏன்?
மேடையில் பேசிய திரைப்பட இயக்குநர் கோபி நயினார் ’நீல சட்டை பேரணி நடத்தப்படும் என்று சொல்லியதால்தான் நீலச் சட்டையை கழற்றி வைத்துவிட்டு கருப்பு சட்டையை அணிந்துகொண்டு வந்தேன்’ என சொன்னார். நடந்தது எதிர்ப்பு போராட்டமல்ல சடங்கிற்காக கருப்பு சட்டை அணிந்துகொண்டு செல்வதற்கு. பெரியாரின் நினைவுநாளை ஒட்டி நடத்தப்பட்ட கருஞ்சட்டை பேரணி. உண்மையான பெரியாரியவாதிகள் மற்றும் பெரியார் மீது பற்றுகொண்டவர்கள் உண்மையாக உணர்வுப்பூர்வமாக கருஞ்சட்டையை அணிந்துகொண்டு வருபவர்கள். நீலச்சட்டை பேரணி என்ற பேரத்தால் கருஞ்சட்டை அணிந்துகொண்டு வந்தவர்கள் எதற்காக?
பேசிய சிலர் அடுத்து நீலச்சட்டை பேரணி, செஞ்சட்டை பேரணி என்று சொன்னார்கள். வந்தவர்களில் சிலர் பெரியாருக்காக வந்தார்களா அல்லது அடுத்து நடத்தப்படும் என உறுதி அளித்த பேரணிகளுக்காக இந்த பேரணியில் கலந்துகொண்டார்களா?
திமுக, மதிமுக போன்றவை தேர்தல் அரசியல் கட்சிகள் என்பதால் அழைக்கவில்லை என்ற போது அதுவே அடுத்து நடத்தப்படும் பேரணிகளுக்கும் விதியாக இருக்கும்பட்சத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபடாத நீல மற்றும் சிவப்பு அமைப்புகள் எத்தனை இருக்கின்றன? அதில் உள்ள தொண்டர்களின் எண்ணிக்கை எத்தனை?
கருஞ்சட்டை பேரணியில் திராவிட இயக்க தேர்தல் அரசியல் கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அடுத்து நடத்தப்படும் நீலச்சட்டை அல்லது செஞ்சட்டை பேரணியில் தேர்தல் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு எண்ணிக்கையை கூட்டி காட்டினால் அது என்ன செய்தியை சொல்லும்?
இந்த கேள்விகளோடு மேலும் நேரில் மட்டுமே கேட்கவேண்டிய சில கேள்விகளும் மனதில் இருந்தாலும், அனைத்து பெரியாரிய இயக்கங்களையும் ஒன்றுபடுத்தி நடத்தப்பட்ட பேரணி மற்றும் மாநாடு பெருமைக்கும் பாராட்டுக்கும் உரியதே. அந்த வகையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு உண்மையான பெரியாரியவாதிகளின் நன்றிகள் உரித்தாகும்.
அய்யங்கள் உள்ளத்தில் இருந்தாலும், ஆசிரியர் அய்யாவின் உரை ஓரளவிற்கு தெளிவை தந்தது. கலைஞர் ஒரு சிறந்த ராஜதந்திரி என்பதும் மதிநுட்பம் வாய்ந்தவர் என்பதும் பலரும் பேசும் ஒன்று. அப்படிப்பட்ட கலைஞரே ராஜதந்திரி மதிநுட்பம் மிக்கவர் என கருதிய ஒருவர் அவரால் என் இளவல் என அழைக்கப்பட்ட ஆசிரியர் அய்யா அவர்கள். ஆசிரியரின் வழிகாட்டுதல் இருக்கும்வரை கருச்சட்டையினர் எதிரிகளையும் துரோகிகளையும் பற்றி கவலை கொள்ளமாட்டார்கள்.
பகுத்தறிவுமிக்க பெரியாரியவாதிகள் பலவற்றையும் அலசி ஆராய்ந்தே ஏற்றுக்கொள்வார்கள். அதுவே அவர்களுடைய இயல்பு. பெரியார் கற்றுத்தந்த பாடம். என்னுடைய கேள்விகளும் அலசி ஆராயும் நோக்கத்தை கொண்டதே. மற்றபடி மேடையிலேயே ஆசிரியர் சொல்லியபடி பிரிக்கும் காரணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு இணைக்கும் காரணிகளை வளர்த்து ஒன்றுபட முயல்வோம்.
விடாது கருப்பு!
- திராவிடப் புரட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக