ஞாயிறு, 9 டிசம்பர், 2018

விஜய் மல்லையாவை ரிசர்வ் வங்கி காப்பாற்ற வேண்டுமா?

சவுக்கு :வாங்கிய கடனை ஒரு பணக்காரர் திருப்பி செலுத்தாதபோது அதுபற்றிய விவரத்தை ரகசியமாக வைக்க வேண்டிய அவசியமில்லை நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவர் முரளி மனோகர் ஜோஷியிடம் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் “பல உயர்மட்ட மோசடி கேஸ்கள் பற்றிய பட்டியலை”த் தந்து அவற்றை பிரதமர் அலுவலகத்துடன் இணைந்து விசாரணை புரியக் கோரியிருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்படி இக்குறிப்பு 04.02.2015 அன்று பிரதமருக்குத் தரப்பட்டதாகவும் நிதிஅமைச்சருக்கும் நகல் சென்றுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இறக்குமதியை அதிகமாக காட்டி சிலர் கேபிடல் கருவிகளின் விலையைக் குறைக்கும் சிலரையும் ராஜன் குறிப்பிட்டுள்ளாராம். அக்குறிப்பில் இருந்தவை என்ன, நடவடிக்கை ஏதாவது எடுக்கப்பட்டதா, இல்லையெனில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

 இது மிகப் பெரிய குற்றம், பெரும் ஊழலாகவும் இருக்கலாம். குற்றம் பற்றிய விவரங்கள், விசாரணை நிலவரம் போன்றவை மக்களுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அரசே இதை முன்வந்து செய்தாக வேண்டும்.
2016 மே மாதம் முதல் இந்தியன் பாங்க்ரப்ட்சி கோட் அமலானது; முதல் ஆண்டிலேயே கோடிக்கணக்கான கடன் விஷயங்கள் கவனிக்கப்பட்டன. கடன் செலுத்த முடியாதவர்கள் (நிறுவன முதலாளிகள், தகுதியற்ற இயக்குநர்கள் உட்பட) தீர்வுக்கான திட்டத்தைத் தருவது என்ற தேர்வானது ஒரு சிறப்பு சட்டத்திருத்தம் மூலம் தடைசெய்யப்பட்டது. தொழில் நடக்காத கடன் தராதவரின் சொத்தை விற்பதும் தடைசெய்யப்பட்டது.
இவை மூடிய கதவுகளுக்குப் பின்னால் நடக்கக் கூடாது. பெயர்களும் ஊழல் விவரங்களும் வெளிவந்தாக வேண்டும்; எக்காரணத்துக்காகவும் மறைக்கப் படக்கூடாது. கடன் வசூலிக்கும் தீர்ப்பாயங்களும் (Debt Recovery Tribunals) பெயர்களை வெளிவிட்டு கடன் வசூலிக்கும் செய்முறையை மக்களுக்கு சொல்ல வேண்டும். பிரச்சினை நீதிமன்றம் அல்லது வேறு தீர்ப்பாயத்துக்கு சென்றால் அவ்விவரங்களும் வெளிவந்தாக வேண்டும்.
பேச்சுவார்த்தை / மத்தியஸ்தம் நடந்தாலொழிய, வாராக்கடன் பற்றிய விவரம் மறைக்கப்படக் கூடாது. பெயர்களை வெளியிடுவது தவறு என்று ரிசர்வ வங்கி (அ) வேறு வங்கியோ சொல்லக்கூடாது. ஒவ்வொரு வாராக்கடனும் ஒப்பந்த முறிவு என்பதால் வெளிவரவேண்டிய விவரங்கள்தாம்.
சிறு, குறு / நடுத்தர நிறுவங்கள் கடனைத் திருப்பிச் செலுத்தாவிடில், அவைகள் மீது வழக்கு தொடுத்து, செலுத்தாதவரின் விவரங்களை செய்தித்தாள்களில் வண்ணப் புகைப்படங்களோடு வங்கிகள் வெளியிட வேண்டும். முடக்கப்பட்ட அவர்களது சொத்துக்களை ஏலம் விட வேண்டும்.
கூட்டுறவு சங்கக் கடனை திருப்பி செலுத்தாதவர்களின் சொத்துக்களை மாவட்ட கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிக்களின் கிராமப்புறக் கிளைகள் மிகச் சுலபமாக முடக்கிவிடுகின்றன; உடமைகளைத் தெருவில் எறிகின்றன. வருவாய் வசூலிக்கும் சட்டத்தின் (Revenue Recovery Act) கீழ் இதைச் செய்து வங்கிக் கடனைத் திரும்பப் பெற மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கு அதிகாரம் உண்டு.
மக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன. அண்டை வீட்டார் மத்தியில் குடும்ப அவமானமாக விவசாயிகள் இதை எடுத்துக்கொள்கின்றனர்; இதனால் தற்கொலையும் செய்துகொள்கின்றனர்.
எல்லாமே ஒளிவுமறைவின்றி நடக்கிறது; நாட்டுக்கு உணவு தரும் விவசாயி பற்றி வங்கிகளுக்குக் கவலை இல்லை. விவசாயிக்காக நாட்டின் முன்னணி வழக்கறிஞர் எவரும் வாதாட மாட்டார். பெரும்பாலும் இவை நீதிமன்றத்துக்கே வராது. ரிசர்வ் வங்கியோ பிற நீதிபதிகளோ இது பற்றி அறியாமலே இருப்பார்கள். இந்தப் பரிதாபக் கதைகள் செய்தித்தாள்களில் வரும்போதுதான், தற்கொலை பற்றிய படங்களைப் பார்க்கும்போதுதான் இது தெரியவந்து இது பற்றிய விவாதமும் தொடங்கும்.
இவையனைத்தும் குற்றங்கள், வெளியில் விவாதிக்கப்பட மாட்டாது. ரகசியத் தன்மையும் இராது, எவ்வித மனித உரிமைச் சட்டமும் / ஆர்வலரும் இங்கு உதவிக்கு இருக்காது.
பெருங்கடனை திருப்பித் தராதவர்களுக்கு பல அற்புதமான சலுகைகள் சட்டரீதியாகக் கிட்டுகின்றன. முதலில், அரசியல்வாதிகள் / வங்கி மேலாளர்கள் இவர்களுடன் நடத்திய உரையாடல்கள் வெளியே வரவே வராது. ஒருமுறை செலுத்தித் தப்பிக்கும் தேர்வும் இவர்களுக்குத் தரப்படும். வட்டியும் தள்ளுபடி ஆகிவிடும். கடன்கள் ‘மறுசீரமைப்பு’ செய்யப்படும். கடன்காரர்கள் பட்டியலை கேட்டால், ‘தேசிய பொருளாதார’ அம்சங்கள் பற்றி ரிசர்வ் வங்கி பேசும்!
14 சமத்துவம் பற்றிப் பேசும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு அனைத்து வாய்ப்புக்களும் அனைவருக்கும் சம அளவில் தரப்பட வேண்டுமென்கிறது. ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் தமக்குள் சண்டையிடா விட்டாலும், இந்த மகாமோசடிகளின் பெயர்களை வெளியிடுவார்களா? தகவல் ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தாம் கட்டுப்பட்டவை என்பதை மக்களுக்குத் தெரிவித்தாக வேண்டிய கட்டாயம் இரு தரப்புக்கும் உண்டு.
கடன் செலுத்தாதவர் விவரம் வணிகரீதியாக ரகசியமாக வைக்கப்பட வேண்டுமென என வங்கி சொல்கிறது; இல்லையேல் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமாம். ரகசிய வாடிக்கையாளர் தகவல் யாருக்கு வேண்டும்? கடனை ஒழுங்காகச் செலுத்துபவர் விவரங்கள் நமக்குத் தேவையில்லையே.
நூற்றுக்கணக்கான கோடிப்பணம் அடங்கியுள்ள இக்கடன் விவரங்கள் எப்படி ‘ரகசியத் தகவல்’ என ஆகும்? வாடிக்கையாளர் என்பதிலிருந்து கடன் திருப்பி செலுத்தாதவர் என்று ஆகிவிட்ட பின்னர் ரகசியத்தன்மை எப்படி நீடிக்கலாம்?
முகவரி போன்ற தகவல்களைத் தராமல் அவர்கள் செலுத்த வேண்டிய தொகை, எடுக்கப்பட்ட நடவடிக்கை, கால நேரம் பற்றித் தெரிவிக்கலாமே? கடன் செலுத்தாத செயல் பொதுப்பணத்தை முறைகேடாக கையாள்வதற்குச் சமம் என்பதால் மக்களுக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.
நிதி நிர்வாகம், அரசுப் பணம் கையாள்தல் தொடர்புடையது போன்றவற்றால் மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படக்கூடும் என்பதால் கடன் தரப்படும் நிகழ்முறை பற்றி ஆராய நேர்மையான குடிமக்களுக்கு உரிமை உண்டு.
கடன் செலுத்தத் தவறுபவர்களைக் காப்பாற்றும் சட்டரீதியான கடமை ரிசர்வ் வங்கிக்கு உண்டா என்ன? தகவல் கேட்கும் குடிமக்களுடன் அரசும் வங்கிகளும் மோதுவது கொடுமையன ஒன்று. மோசடி மன்னர்களைக் காக்க வேண்டிய அவசியம் என்ன? கொள்ளையடிப்பவர்களும் மோசடி மன்னர்களும் குற்றவாளிகள்; இந்தியக் குற்றவியல் சட்டப்படி அவர்கள் தூக்கிலிடப்பட வேண்டியவர்கள். ஆனால், ‘இந்துஸ்தானின் ரவுடிகள்’ நாட்டின் பொருளாதார சிக்கலை விடுவிப்பவர்களாக ஆகிவிட்டார்களே!
எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு
(எம். ஸ்ரீதர் ஆச்சார்யுலு மத்திய தகவல் ஆணையத்தில் தகவல் ஆணையராக இருந்து 2018, நவம்பர் 21 அன்று பணிஓய்வு பெற்றவர்.)
நன்றி: தி டெலிகிராஃப்
https://www.telegraphindia.com/india/why-should-the-rbi-shield-a-willful-defaulter-under-the-guise-of-customer-confidentiality/cid/1677714

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக