வியாழன், 27 டிசம்பர், 2018

5000 கோடியை தானமாக எழுதிவைத்த ஹாங்காங் திரை நட்சத்திரம் சவ் யுன் ஃபேட்

THE HINDU TAMIL : உலகைவிட்டுப் போகும்போது எதையும் கொண்டு போகப் போவதில்லை என்ற வாழ்க்கையின் தத்துவத்தை உணர்ந்தாரோ என்னவோ ஹாங்காங் திரை நட்சத்திரம் சவ் யுன் ஃபேட் தனது சொத்துக்களை தானமாக வழங்க உறுதியேற்றிருக்கிறார். "The Giving Pledge" என்ற உறுதியேற்பு ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டிருக்கிறார்.
"The Giving Pledge" என்ற ஒப்பந்தம் உலகப் பணக்காரர்கள் பில் கேட்ஸ், வாரன் பஃப்ஃபட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. பணக்காரர்கள் ஏழை எளியவர்களுக்கு தானம் வழங்குவதை ஊக்குவிக்க இது தொடங்கப்பட்டது.தற்போது லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார் நடிகர் சவ் யுன் ஃபேட்.
Crouching Tiger, Hidden Dragon தமிழில் பாயும் புலி பதுங்கும் நாகம் என்ற பெயரில் வெளியான படம் இது. உலகளவில் பிரம்மாண்ட ஹிட் அடித்த படம் இது.
பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன், ஏ பெட்டர் டுமாரோ ஆகிய படங்கள் இவருக்கு பெயர் பெற்றுத் தந்தன.

சவ் யுன் ஃபேட்டுக்கு தற்போது வயது 62. 2015-ம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட அதிக சம்பளம் வாங்கும் ஹாலிவுட் நடிகர்கள் பட்டியலில் இவர் இடம்பெற்றார்.
இந்நிலையில், தென் கொரியாவில் முன்வா ப்ராட்காஸ்டிங் நிறுவனத்துக்கு (MBC)கடந்த வாரம் வழங்கிய நேர்காணலில் தன்னுடைய மறைவுக்குப் பின்னர் தனது சொத்துக்களை மக்களுக்குச் சேரும் வகையில் எழுதிவைக்கப்போவதாகக் கூறியிருக்கிறார்.
அந்தப் பேட்டியில் "பணம் எப்போதும் நம்முடன் இருக்கப்போவதில்லை. ஒருநாள் இந்த உலகைவிட்டுப் போகும்போது நீங்கள் உங்கள் உடைமைகளை விட்டுச் செல்ல வேண்டும். உங்கள் பொருட்கள் உங்களுக்குப் பின் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடியதாக இருக்க வேண்டும். மரணத்துக்குப் பின்னர் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை உங்களுடன் எடுத்துச் செல்லவா முடியும்? அதனால் என் இறப்புக்குப் பின்னர் எனது சொத்திலிருந்து ரூ,5000 கோடி பணத்தை மக்களுக்கு தானமாக வழங்க உறுதியேற்றுள்ளேன். என்னுடைய முடிவை எனது மனைவி ஜாஸ்மின் டானும் முழுமையாக ஆதரிக்கிறார்" என அவர் கூறிய கருத்து பரவலாக பாராட்டப்பட்டு வருகிறது.
சவ்வின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது அவருக்கே உறுதியாகத் தெரியவில்லை. இதனால், பல்வேறு ஊடகங்களும் சவ்வின் சொத்து விவரமென பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய ரூபாய் மதிப்பில் அவர் ரூ.5012 கோடியே 54 லட்சத்து 33 ஆயிரத்து ஐநூறு அளவிலான சொத்துக்களை தானமாக வழங்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.
சவ்வை ஹாங்காங் மக்கள் பாசமாக "Brother Fat" என்று அழைக்கின்றனர். சவ்வின் பழக்கவழக்கங்கள் பற்றி அவரது மனைவி டான் கூறும்போது, "அவருக்கு எளிமையான உணவே பிடிக்கும். சாலையோரக் கடைகள் சாப்பாட்டை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார். பல ஆண்டுகளாக நோக்கியா ஃப்ளிப் ஃபோனையே பயன்படுத்தி வந்தார். இப்போது அந்த ஃபோன் செயலிழந்துவிட்டது" என்றார்.
எளிமையாக சாப்பிடவே விருப்பம்..
எம்பிசி செய்தி நிறுவனத்தின் பேட்டியில் சவ் தனது உணவுப் பழக்கம் பற்றி பேசும்போது, "சாப்பிடுவதற்கு உணவு கிடைத்தால்போதும். ஏனெனில் நாங்கள் ஒருகாலத்தில் பரம ஏழைகள். அப்போதெல்லாம் உருளையும் கொஞ்சம் காய்கறியும் சாப்பிடக் கிடைத்தாலே மகிழ்ச்சியடைந்துவிடுவேன். புத்தாண்டு பிறப்பன்று கறியோ கோழியோ கிடைத்துவிட்டால் பேரானந்தம் வந்துவிடும்" என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக