வெள்ளி, 28 டிசம்பர், 2018

நாடளுமன்ற தேர்தல் : தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார்? 32 தொகுதிகளில் திமுக?

பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார் மாலைமலர் : பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளதால் தமிழகத்தில் 32 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அட்டவணை பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மத்தியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருப்பதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்கவும், தொகுதிகளை அடையாளம் காணவும், வேட்பாளர்களை தேர்வு செய்யவும் இப்போதே பணிகளை தொடங்கிவிட்டன.
மத்தியில் ஆளும் கட்சியான பா.ஜனதா பாராளுமன்ற தேர்தலை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி, கட்சி தலைவர் அமித்ஷா ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். பிரதமர் மோடி தொகுதி வாரியாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொண்டர்களிடம் பேசி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை இணைத்து தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது.
இதற்கு பிறகு காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதில் அதிக உற்சாகம் காட்டி வருகின்றன.
தமிழ்நாட்டில் பாராளு மன்ற தேர்தலை சந்திப்பதற்கு தயார் என்று ஆளும் அ.தி.மு.க. கூறியுள்ளது. இந்த நிலையில், பிரதான எதிர்கட்சியான தி.மு.க.வும், அதன் தோழமை கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன.
தி.மு.க.வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் அறிவிப்பு வந்ததும் முடிவு செய்யப்படும் என்று கூறி உள்ளனர்.
என்றாலும் கூட்டணி கட்சிகளுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கும், குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிடுவதற்கும் தி.மு.க. தயார் நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் சேர்த்து மொத்தம் 40 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளிலும் தேர்தலுக்கான முதற்கட்ட பணிகளை தி.மு.க. ஏற்கனவே தொடங்கி விட்டது.
இதில் தி.மு.க.வுக்கு சாதகமான தொகுதிகள் எவை என்பது குறித்து அறிவதற்காக தனி குழு மூலம் ஆய்வு செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்பாடு செய்து இருந்தார். இந்த குழுவினர் தொகுதி வாரியாக ஆய்வு செய்து தி.மு.க. போட்டியிட தகுதியான 32 தொகுதிகளை தேர்வு செய்துள்ளனர்.

இந்த 32 தொகுதிகளின் பட்டியல் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் தி.மு.க. சார்பில் யாரை நிறுத்தலாம். தோழமை கட்சிகளுக்கு எந்த எந்த தொகுதிகளை ஒதுக்கலாம் என்பது குறித்து முடிவு செய்கிறார். இந்த 32 தொகுதிகளில் மத்திய சென்னை, நீலகிரி ஆகியவையும் அடங்கும்.
தி.மு.க. போட்டியிட முடிவு செய்துள்ள 32 தொகுதிகள் தவிர மீதமுள்ள 8 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் என்று கூறப்படுகிறது. தி.மு.க. வுடன் கூட்டணி சேர்த்து போட்டியிடும் பெரும் பாலான கட்சிகளுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதிலும் எந்த தொகுதிகளில் தி.மு.க போட்டியிட வேண்டும் என்ற கருத்து கேட்கப்பட்டதாக தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி முடிவு செய்த பிறகு தொகுதி பங்கீடு நடைபெறும். என்றாலும் 32 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவது உறுதி. இதில் சில தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. போட்டியிட விரும்பும் 32 தொகுதிகளில் தி.மு.க தனியாக 25 தொகுதிகளில் நிற்கும். 7 தொகுதிகள் தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் மற்ற கட்சிகளுக்கு வழங்கப்படும் என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக