வியாழன், 27 டிசம்பர், 2018

ஆண்டுக்கு 2,000 பேருக்கு எச்.ஐ.வி. ரத்தம்! தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு!

ஆண்டுக்கு 2,000 பேருக்கு எச்.ஐ.வி. ரத்தம்!மின்னம்பலம் : ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2,000 பேருக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்படுவதாகத் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 8 மாதக் கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசியைச் சேர்ந்த எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவரின் ரத்தம் ஏற்றப்பட்டதால் அக்கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், பணியின்போது மெத்தனப் போக்காகச் செயல்பட்டதாகக் கூறி ரத்த வங்கி ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் பெரும் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ள இதுபோன்ற சம்பவத்தை தமிழக மக்கள் அறிவது இதுவே முதல்முறையாக இருக்கக்கூடும்.

ஆனால் இது முதல்முறையல்ல. கவனக்குறைவாகவும், மெத்தனப்போக்குடனும் செயல்படும் ரத்த வங்கி ஊழியர்களால் எவ்வளவு பேர் அவசியமற்று எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் இன்னும் நமக்குப் பேரதிர்ச்சியை அளிக்கிறது. ஆண்டுக்கு சுமார் 2,000 பேர் இவ்வாறு பாதிக்கப்படுவதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், ‘2007ஆம் ஆண்டிலிருந்து இப்போது வரையில் 20,592 பேருக்கு எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிகளவில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்ற மாநிலமாக குஜராத் உள்ளது. மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் அதிகளவில் மற்றவருக்கு ஏற்றப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
ரத்த தானம் செய்யும் ஒவ்வொருவரின் ரத்தத்திலிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு எச்.ஐ.வி. பரிசோதனைக்கான ஹெபடைட்டீஸ் பி, ஹெபடைட்டீஸ் சி, சைபில்ஸ் மற்றும் மலேரியா சோதனைகள் செய்ய வேண்டுமென்பது கட்டாயமாக்கப்பட்ட விதி. ஆனால் ரத்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்களின் கவனக் குறைவாலேயே இதுபோன்ற சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்துள்ளன. 2017ஆம் ஆண்டுக் கணக்கின்படி நாட்டில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21.40 லட்சம். அதில் 87,000 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள். எச்.ஐ.வி. தொடர்பான நோயால் 2017ஆம் ஆண்டில் மட்டும் 69,000 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக