செவ்வாய், 4 டிசம்பர், 2018

30 திமுக கொடிக்கு ஒரு கூட்டணிக் கொடி: திருச்சியில் கூட்டணி செய்தி ?

30 திமுக கொடிக்கு ஒரு  கூட்டணிக் கொடி: திருச்சி மெசேஜ்!மின்னம்பலம் : “காப்போம் காப்போம் காவிரி அன்னையை காப்போம்... காவிரியைத் தடுத்தால் மோடியை வரவிடாமல் தடுப்போம்”, “கர்நாடக அரசே கர்நாடக அரசே கட்டாதே கட்டாதே... காவிரியில் அணை கட்டாதே. பறிக்காதே... பறிக்காதே.... தமிழர் உரிமையைப் பறிக்காதே...”, “மோடியே மோடியே... நீங்கள் இந்தியாவுக்குப் பிரதமரா?, கர்நாடகாவுக்கு முதல்வரா?”
இப்படிப்பட்ட முழக்கங்களை இன்று (டிசம்பர் 4) திருச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னெழுப்ப தோழமைக் கட்சித் தலைவர்கள் எல்லாம் வலிமையாக வழிமொழிந்து குரல் எழுப்பிட, ஆர்ப்பாட்டம் நடந்திருக்கிறது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாட்டு அணை கட்டுவதற்காக மத்திய அரசு கர்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்ததைக் கண்டித்துதான் திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், முஸ்லிம் லீக் காதர் மொய்தீன், முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

திமுக முன்னெடுத்த இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தும் பொறுப்பை திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என். நேருவிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின். இதையடுத்து டிசம்பர் 1 ஆம் தேதி திருச்சி திமுக தலைமை அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்தினார் நேரு.
அப்போது பேசிய அவர், “கூட்டத்தைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நாம் கூட்டணியாக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு கம்யூனிஸ்டு தோழர்கள், விவசாய சங்கங்கள், காங்கிரஸ் தொழிற்சங்கத்தினர் எல்லாம் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். நீங்கள் உங்கள் கட்சிக் கொடிகள்கூட எடுத்து வர வேண்டாம். நாங்களே அதை ஏற்பாடு செய்துவிடுகிறோம். இது என் தலைவர் உத்தரவிட்டுள்ள ஆர்ப்பாட்டம். உங்கள் கட்சித் தலைவர்களும் எனக்குத் தலைவர்கள்தான். எனவே கொடிகளைக்கூட நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம்” என்று பேசிய கே.என்.நேரு, அனைவருக்கும் விருந்து வைத்து அனுப்பினார்.

நேரு ஏன் இவ்வாறு சொன்னார் என்றால் அவருக்கு மேலிருந்து வழங்கப்பட்ட அறிவுரைதான் காரணம். அது என்னவென்றால், “30 திமுக கொடிகளுக்கு ஒரு கூட்டணிக் கட்சி கொடி இருந்தால் போதும். திமுக கொடிகள்தான் அதிகம் பறக்க வேண்டும். இது நாம் ஏற்பாடு செய்யும் போராட்டம். எனவே திமுக கொடிகள் எங்கும் பட்டொளி வீசிப் பறக்க வேண்டும்” என்பதுதான். அதனால்தான் திருச்சி முழுதும் நடப்பட்ட கொடிகளில் சரியாக முப்பது திமுக கொடிகளுக்கு ஒரு கூட்டணிக் கட்சிக் கொடி என்று கணக்குப் போட்டு நட்டிருக்கிறார்கள் திமுகவினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த தோழமைக் கட்சியினருக்கும் அவரவர் கொடிகள் திமுக சார்பாக வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் கம்யூனிஸ்ட், சிறுத்தைகள் தாங்களாகவே பல கொடிகளைக் கொண்டுவந்துவிட்டனர்.
நம்மிடம் பேசிய திருச்சி மாவட்ட திமுக பிரமுகர் ஒருவர், “இந்த திருச்சி ஆர்ப்பாட்டம் ஒரு மெசேஜ் சொல்கிறது. அதாவது 30 திமுக கொடிகளுக்கு ஒரு கூட்டணிக் கட்சிக் கொடி என்பது வெறும் கொடிக் கணக்கு மட்டுமல்ல. வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 30 தொகுதியில் திமுக நிற்க, மீதி பத்து தொகுதிகளில்தான் கூட்டணிக் கட்சிகள் நிற்கும் என்ற மெசேஜை சொல்லாமல் சொல்கிறது இந்த கொடிக் கணக்கு” என்கிறார்.
திமுக கூட்டணி இப்போது இருக்கும் நிலையை வைத்து கூட்டிக் கழித்துப் பார்த்தால் திமுகவின் கொடிக் கணக்கு சரியாதான் வருது!
- ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக