ஞாயிறு, 25 நவம்பர், 2018

தீவிரவாதிகளுடன் போராடிய பாகிஸ்தான் பெண் எஸ்பி- Suhai Aziz Talpur கராச்சி சீன தூதரக சண்டை


சுஹாய் அஜிஸ்விகடன் : சுஹாய் அஜிஸ் தல்பூர் என்னும் பெண் ஏஎஸ்பி-யான இவர், தீவிரவாதிகளுடன் துணிச்சலாக சண்டையிட்டு, சீனத் தூதரக அதிகாரிகளைக் காப்பாற்றியுள்ளார். சுஹாய் அஜிஸ் வழக்கம் போல பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீனத் தூதரகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு நுழைந்த தீவிரவாதிகள் 3 பேர், துப்பாக்கி, குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கினர். பதிலுக்கு, சுஹாய் அஜிஸ் தலைமையில் இருந்த போலீஸும் எதிர்த்தாக்குதல் நடத்தினர். இதில், தீவிரவாதிகள் 3 பேரும் கொல்லப்பட்டனர்.  அதன்பிறகே சுஹாய் அஜிஸ் வைரலானார்.

தீவிரவாதிகளைத் தைரியமாக எதிர்கொண்டு வெற்றிகண்ட அவரை பாகிஸ்தானியர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். அவர் பெண் என்பதற்காகவும், தீவிரவாதிகளை வீழ்த்தினார் என்பதற்காகவும் மட்டும் அவரை நெட்டிசன்கள் கொண்டாடவில்லை. அவர் வளர்ந்த விதமும், கடின உழைப்பால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்றதாகவும் அவரைப் பாராட்டி வருகின்றனர். 2013-ம் ஆண்டு போலீஸ் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட இவர், தொடர்ந்து நேர்மையாகப் பணிபுரிந்து பாராட்டுகளைக் குவித்தவர்.
``நான் சிறுவயதில் பள்ளியில் சேரும்போது பெண்களுக்கு எதற்கு படிப்பு எனப் பல பேர் கிண்டல் செய்தனர். அதனால், நாங்கள் பெற்றோருடன் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்தோம். எனக்கு மத ரீதியான கல்வியைத்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என உறவினர்கள் வற்புறுத்தினர். ஆனால், எனது தந்தை மறுத்துவிட்டார். என் தந்தையால் வெளி இடங்களுக்குச் சென்று என்னால் படிக்க முடிந்தது. என்னைப் பொருளாதார நிபுனராக ஆக்க வேண்டும் என தந்தை பி.காம் படிக்கவைத்தார். ஆனால், சமூகத்துக்கு சேவைசெய்யும் மதிப்புள்ள பணியைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன். கடும் சிரமத்துக்கு மத்தியில் தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் பணியைத் தேர்ந்தெடுத்தேன்" என்று கூறும் இவருக்கு சிறு வயதில் கல்விக்காக நிறைய இடங்களுக்கு புலம்பெயர்த்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக