வியாழன், 29 நவம்பர், 2018

பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு விடை கொடுப்பது சாத்தியமா ? மருத்துவர் BRJ கண்ணன்

இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக முன்வைக்கப்படும் கீலேசன் தெரபி ( chelation therapy ) மருத்துவ முறைகளின் பிரச்சினைகளை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.
செங்கல்பட்டை சேர்ந்த திரு ரவி ஒரு பலத்த மாரடைப்போடு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். முந்தின நாள் இரவிலிருந்தே அவருக்கு நெஞ்சு கனத்திருந்தது. எல்லா முயற்சியும் தோல்வியுற்று மரணத்தைத் தழுவினார். அவருக்கு இரு வருடங்கள் முன்பே இதயத் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்தது தெரியும். இருந்தும் கடந்த ஆறு மாதங்களாக எல்லா மருந்து மாத்திரைகளை நிறுத்தியிருந்தார். ஏன்?
கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோயுடன் புகைப்பதுமாக இருந்த அவருக்கு இரு வருடங்கள் முன்பு நடக்கும் போது நெஞ்சு வலி வரவே சென்னையில் காண்பித்துக் கொண்டார். அவருக்குகொரனரி ஆர்டரிஎனப்படும் இதயத் தமனிகளில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புகையை நிறுத்தவும், சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும்
அறிவுறுத்தப்பட்டது. மேலும் பலூன் ஸ்டன்ட் அல்லது பைபாஸ் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்டது. அதிலிருந்து தப்ப வேறு வழிகள் உண்டா என்று பார்க்கத் தொடங்கினார். சென்னையில் ஓரிடத்தில்கீலேசன் தெரபிஎன்ற பெயரில் ஊசி மருந்து செலுத்தி அடைப்பை நீக்குவதாகக் கேள்விப்பட்டார். ‘பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பை பைஎன்ற விளம்பரத்தையும் கண்டார்.
அங்கு சென்று முப்பது ஊசிகளை மூன்று மாதங்களில் போட்டுக் கொண்டார். பைபாஸ் சிகிச்சையில் ஆகும் செலவில் முக்கால்வாசி இதில் ஆயிற்று. அடைப்புகள் நீங்கியதாக தெரிவிக்கப் பட்டது. சில மாதங்கள் கழித்து, அவர் மருந்துகளை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி தன்னைத் தானே பரிசோதித்துக் கொண்டார். பெரிதாக ஒன்றும் தனக்கு வித்தியாசம் இல்லாததால் ஆறு மாதங்கள் முன்பு எல்லாவற்றையும் முழுவதுமாக நிறுத்தினார்; மீண்டும் புகைப் பிடிப்பதைத் தொடங்கினார். மதுரைக்கு ஒரு கல்யாணத்திற்கு வந்தவருக்கு மாலையில் நெஞ்சு கனத்தது. விருந்து உண்டதால் ஏற்பட்ட நெஞ்சு எரிச்சல் என நினைத்தார். அடுத்த நாள் காலை அவரை அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை வந்தது. அவசரமாக ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில் நான்கிற்கும் மேற்பட்ட இடங்களில் அடைப்பு இருந்தது. எதுவும் செய்ய அவகாசம் கொடுக்கவில்லை அவர், இறந்தே போனார்.
♥ டாக்டர், நெஞ்சு வலியோ மாரடைப்போ வந்தால் எல்லோரும் இந்த ஆஞ்சியோபிலாஸ்டி இல்லையென்றால் பைபாஸ் சிகிச்சை செய்தே ஆக வேண்டுமா?
இல்லை. வாழும் முறையை மாற்றி, (புகையும் மதுவையும் நிறுத்தி, எடையைக் குறைத்து, மனதை இலேசாக வைத்துக்கொண்டு, உடற் பயிற்சிகள் செய்து), சர்க்கரையையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துகொண்டு, மற்ற மருந்துகளையும் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். நாங்கள் பைபாஸ் சிகிச்சை பரிந்துரைக்கிறோம் என்றால், அவர்களை இரு பிரிவுகளில் அடக்கலாம். 1. உயிருக்கு ஆபத்தான அடைப்புகள். அடுத்த சில மாதங்களில் இறக்கும் அபாயம் அதிகம். ஆகையால் பைபாஸ் சிகிச்சை உயிரைக் காக்கும் 2. பலத்த அடைப்புகள் இருந்தாலும், உயிருக்கு ஆபத்தானவை இல்லை. அனால் அவை நோயாளிக்கு மிகுந்த நெஞ்சு வலியைத் தரும், சராசரி வாழ்க்கை சிரமமாக இருக்கும். இவர்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள விருப்பம் இல்லை என்றால், தங்கள் வாழும் முறையில் தகுந்த மாற்றங்களை செய்து கொண்டு, முறையாக மருந்துகளை உட்கொண்டால் ஓரளவு நன்றாக இருக்க முடியும். வலி இல்லாமல் போய்விட்டதென்றால் அடைப்பு நீங்கி விட்டது என்றில்லை, ரத்தம் குறைவாகப் பாய்ந்தாலும் இதய தசைகள் அதற்கு ஈடாக மாற்றங்கள் செய்து கொண்டு மாத்திரை மருந்துகள் மூலம் நன்கு தேறி விட்டன என்பது தான் அர்த்தம்.
♥ இந்த கீலேசன் தெரபி என்றால் என்ன?
இந்நோயாளிகளின் இதயத் தமனிகளின் அடைப்புகளில் கொழுப்பும் சுண்ணாம்பும் படிந்திருக்கும். இவை எதோ சுவற்றில் ஒட்டி உள்ளது போலவும் அதை நாம் சுரண்டி எடுத்துவிடலாம் போலவும் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியல்ல. இவை தமனிகளின் செல்களுக்குள் படிந்துள்ளன. இந்த கீலேசன் முறையில் சுண்ணாம்பை உடலிருந்து நீக்குவதற்கு .டி.டி.ஏ. என்ற மருந்தை செலுத்துவார்கள். அது ரத்தத்தில் உள்ள சுண்ணாம்பு (கால்சியம்) அளவைக் குறைக்குமே ஒழிய, தமனிகளில் உள்ள சுண்ணாம்பைத் தொடவே செய்யாது. ஆகையால், ஒரு பலனும் இல்லை.
♥ ஆனால், இது செய்து கொண்டு நிறைய பேர் நன்றாக இருப்பதாக கேள்விப்படுகிறோமே?
அவர்கள் எல்லோரும் நான் மேலே கூறிய பிரிவு 2- சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களை முறையாக மாற்றிக்கொண்டதாலும் மருந்துகள் உட்கொள்வதாலும் நன்றாக இருக்கிறார்கள். ஆனால் தவறாக இந்த பயனற்ற கீலேசன் தெரபி மேல் அபிமானம் கொண்டு விடுகிறார்கள், எல்லோரிடமும் சந்தோசமாக இதைப் பாராட்டியும் சொல்கிறார்கள்.
♥ இந்த சிகிச்சையை முயற்சி செய்து பார்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று தானே தோன்றுகிறது?
இல்லை. இதில் நிறைய ஆபத்தும் உள்ளது. இது ரத்தத்தில் நீரின் அளவைக் கூட்டும். இதயம் வீங்கி உள்ளவர்கள் மூச்சிரைப்புடன் அவசரமாக எங்கள் மருத்துவமனைக்கு வந்தவர்கள் பலருண்டு. சிலர் வீட்டிற்கு சென்று இறக்கவும் செய்திருக்கிறார்கள். மேலும், கால்சியம் மட்டுமல்லாது வேறு பல உடலுக்கு வேண்டிய தாதுப் பொருட்களையும் இந்த மருந்து நீக்கி விடும்.
♥ அப்படியென்றால் இந்த கீலேசன் செய்து கொண்டவர்களின் கதி?
பிரிவு 1 சேர்ந்தவர்கள் சில வாரங்களிலேயே திரும்பி எங்களிடம் வந்து பலூன் அல்லது பைபாஸ் சிகிச்சை செய்துகொள்வார்கள், இல்லையென்றால் இறந்து விடுவார்கள். அவர்களின் உறவினர்கள் யாரும்தெரியாமல் கீலேசனை நம்பி மோசம் போனோம்என்று யாரிடமும் சொல்வதில்லை.
பிரிவு 2- சேர்ந்தவர்கள் நான் மேற்கூறிய காரணங்களினால் நன்றாகத் தான் இருப்பார்கள். தவறாக தங்கள் அடைப்புகள் நீங்கி விட்டதாக நம்பிக் கொண்டிருப்பார்கள். அவர்களில் சிலர், இந்த ரவி போன்று மருந்துகளையும் நிறுத்துவார்கள். அவர்களுக்கு புதிய அடைப்புகள் உண்டாகி, முன்பு அவ்வளவு ஆபத்தில்லை என்றிருந்த நிலை மாறி, பெரிய மாரடைப்பை உண்டாக்கி ஆளையே கொன்றுவிடும். இங்கு ரவியின் மனைவியும் மற்ற உறவினர்களும் மருந்தை சாப்பிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தவில்லை. ஏனெனில் அவர்களும் அடைப்புகள் நீங்கி விட்டதாகவே கருதினார்கள்.
ஆக, யாரெல்லாம் தப்பிப் பிழைக்கிறார்களோ அவர்களைத் தான் மற்ற பொது மக்கள் பார்க்கின்றனர். அவர்களைக் கண்டுஇது ஒரு நல்ல சிகிச்சைஎன்று முடிவு செய்து விடுகின்றனர். இறப்பவர்களை நாங்கள் மட்டும் தானே பார்க்கிறோம்.
♥ அவர்கள் கார்டோகிராபி என்றொரு பரிசோதனை செய்கிறார்களே, அது என்ன?
இதய கார்டோகிராபி என்றொரு பரிசோதனையே இல்லை. இது அவர்களே அவர்களுக்காக உருவாக்கிய ஒன்று. எங்கள் மருத்துவப் புத்தகங்களில் அது இல்லவே இல்லை. உலகில் எந்த இதய மருத்துவருக்கும் இதைப் பற்றித் தெரியாது. கலர் கலராக படங்களைப் போட்டு இத்தனை இத்தனை அடைப்புகள் உள்ளன என்று காட்டுகிறார்கள். எல்லாம் டுபாக்கூர்.
படிக்க:
சிறப்புக் கட்டுரை : ஹோமியோபதி – அறிவியலா, நம்பிக்கையா ?
நவீன மருத்துவமா ? இலுமினாட்டி பைத்தியமா ? புதிய கலாச்சாரம் மின்னூல்
♥ ஆனால், கீலேசன் சிகிச்சை முடிந்த பின் மறுபடியும் கார்டோகிராபி செய்து அடைப்பு நீங்கியதையும் காண்பிக்கிறார்களே?
கணினியில் ஒரு சில இடங்களில் குறியீடுகளையும் எண்களையும் மாற்ற முடியாதா என்ன? மற்றொரு வண்ணப் படத்தைக் கொடுத்து மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
♥ உங்களுக்கு கார்டோகிராபி புரியவில்லை என்பதால் அதை புறந்தள்ளுகிறீர்கள் என்று நான் சொல்லலாமா?
சரி. எல்லோருக்கும் புரிகிற ஆஞ்சியோகிராமை வைத்து பேசுவோம். அங்கு சென்று திரும்பிவர்களில் யாருக்கும் ஆஞ்சியோகிராமில் அடைப்பு குறைந்து நான் பார்த்ததே இல்லை. அவர்களும் திரும்பவும் ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி விடுவார்கள். யாராவது முதலில் ஆஞ்சியோகிராம் செய்து பல அடைப்புகள் உள்ளதை உறுதி செய்து, பின்னர் அந்த கீலேசன் சிகிச்சையை செய்து கொண்டு, மறுபடியும் ஆஞ்சியோகிராம் செய்து அடைப்புகள் நீங்கிவிட்டதை எனக்குக் காண்பித்தால் ஒரு கோடி ரூபாய் கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன். அங்குள்ள டாக்டர்களை கவனியுங்கள். அவர்களுக்கோ அவர்கள் உறவினர்களுக்கோ இந்த மாரடைப்பு நோய் வந்தால், வழக்கமான நவீன மருத்துவத்திற்கு தான் சென்றிருப்பார்கள், கீலேசன் செய்திருக்க மாட்டார்கள்; ஏனென்றால் அவர்களுக்கு அதெல்லாம் பலன் தாராதென்று நன்றாகவே தெரியும்.
♥ உங்கள் போன்ற மருத்துவர்கள் இந்த முறையை மறுப்பதற்கு காரணம், உங்களுக்கு பலூன் மற்றும் பைபாஸ் சிகிச்சை குறைந்துவிடும் என்பதால் என்று சில பேர் பேசி வருகிறார்களே?
முற்றிலும் தவறு. முதலில், அவர்கள் அளவுக்கு மிக அதிகமாகத் தான் வசூலிக்கிறார்கள். அதனால் நோயாளிக்கு பெரிதாக பணத்தில் மிச்சம் இல்லை. மேலும் இந்த மருந்து ஏதோ ஒரு பரம்பரையாக மிகச் சிலருக்கே தெரிந்த மாயம் எல்லாம் ஒன்றுமில்லை. எந்த அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையும் இதை எளிதாக வாங்கி விட முடியும். எங்கள் மருத்துவமனையை விடுங்கள். இதனால் நல்ல பலன் உண்டெனில், ஏன் மற்ற சிறிய மருத்துவமனைகள் இதை செய்து சம்பாதிக்க முனையவில்லை? எல்லோரும் ஒருகீலேசன் சிகிச்சை நிலையம்என்று ஆரம்பிக்கலாம் தானே, ஏன் செய்யவில்லை?
♥ என் நண்பர் ஒருவர், இது அறிவியல் ரீதியாக அமெரிக்காவில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் இம்முறை IIb என்ற அளவில் கொள்ளலாம் என்றும் பரிந்துரைத்துள்ளர்கள் என்று கூறுகிறாரே?
TACT என்றொரு ஆய்வு நடத்தினார்கள். மாரடைப்பு வந்து போனவர்களுக்கு இந்த கீலேசன் சிகிச்சையை அளித்தனர். அதில் ஒரு சில பேருக்கு மறுபடியும் மாரடைப்பு வருவது குறைவதாகத் தெரிய வந்தது. அது எப்படி என்று விளக்க முடியவில்லை. அது உண்மை தானா என்று கண்டறிய, மற்றுமொரு ஆய்வு TACT2 என்ற பெயரில் நடந்துக்கொண்டிருக்கிறது., அதில் பரிசோதிக்கப்பட்ட நோயாளிகள் இப்பொழுது நாம் பேசிக்கொண்டிருப்பது போல பல அடைப்புகள் கொண்ட, பைபாஸ் சிகிச்சை பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகளே அல்ல. ரத்தக் குழாய் அடைப்பு நீங்கியதாகவோ, இச்சிகிச்சை பைபாசுக்கு மாற்றாகவோ, சொல்லப்படவே இல்லை. அமெரிக்கப் பரிந்துரையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு இதனை முயற்சிக்கலாம், பலனிற்கு உத்திரவாதமில்லை என்ற அளவில் தான் கூறப்பட்டுள்ளது.
முதலில் அவர்கள், இது பைபாஸ் சிகிச்சைக்கு மாற்று என்று கூறுவதை நிறுத்த வேண்டும். இரண்டாவது, இதில் தமனிகளின் அடைப்புகள் நீங்காது என்று வெளிப்படையாக ஒத்துக்கொள்ள வேண்டும். மூன்றாவது, இதில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதென்று விளக்கவேண்டும். இதையெல்லாம் கேட்டுவிட்டு யாரேனும் இந்த சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டால் இந்த மருந்தை ஏற்றிக்கொள்ளட்டும். ஆனால், நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்த கீலேசன் மருந்தால் பாதிக்கப்பட்ட பலரை நான் பார்த்திருக்கிறேன்.
யாரெல்லாம் தப்பிப் பிழைக்கிறார்களோ அவர்களைத் தான் மற்ற பொது மக்கள் பார்க்கின்றனர். அவர்களைக் கண்டு ‘இது ஒரு நல்ல சிகிச்சை’ என்று முடிவு செய்து விடுகின்றனர். இறப்பவர்களை நாங்கள் மட்டும் தானே பார்க்கிறோம்.
♥ நீங்கள் சொன்ன எல்லாவற்றையும் கேட்ட பின்னரும் ஒருவர் இந்த சிகிச்சையை முயற்சித்துப் பார்க்க விரும்புவதாக இருந்தால், அவருக்கு உங்கள் அறிவுரை என்ன?
அந்தப் பணத்தை ஏதேனும் ஒரு அநாதை ஆசிரமத்திற்கோ முதியோர் இல்லத்திற்கோ கொடுத்துவிட்டு, வாழும் முறையை நன்கு மாற்றிக் கொண்டு சரியான மருந்துகளை உட்கொள்வாரானால் பல்லாண்டு நலமாக இருப்பார். (TACT2 முடிவு வரும் வரையில் இது தான் என் நிலை).
முகநூலில்: Dr. B.R.J. Kannan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக