வியாழன், 29 நவம்பர், 2018

சென்டினெல் தீவு . காலத்தால் அழியாத பழங்குடியினர்!

சிறப்புக் கட்டுரை: காலத்தால் அழியாத சென்டினெல் பழங்குடியினர்!
மின்னம்பலம் - ஷிவ் சகாய் சிங்: அந்தமானின் சென்டினெல் தீவைச் சேர்ந்தவர்கள் சென்டினெல் பழங்குடியினர். உடல், உருவம், நிறம் ஆகியவற்றில் ஜாரவா பழங்குடியினரைப் போலவே இருக்கும் சென்டினெல்கள், வெளியாட்களைத் தங்களது நிலத்துக்குள் அனுமதித்ததேயில்லை. அத்துமீறி உள்ளே நுழைவோரைக் கொன்றுவிடுவதில் அவர்கள் பெயர் பெற்றவர்கள். 1970ஆம் ஆண்டுக்குப் பிறகு மானுடவியலாளர்கள் 26 பயணங்களின் வாயிலாக சென்டினெல்களை தொடர்புகொண்டுள்ளனர். அத்தீவுக்கு வெளியாட்கள் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சென்டினெல் தீவையும், பழங்குடி மக்களையும் தொந்தரவு செய்யாமலிருக்க இந்திய அரசும் அந்தமான் அரசும் உறுதிபூண்டுள்ளன.

ஜான் ஆலன் சவு என்ற அமெரிக்கர் சென்டினெல் தீவில் பழங்குடியினரால் அம்புகளால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாக 28ஆம் தேதியன்று காவல் துறையினர் தெரிவித்தனர். ஜான் ஆலனின் உடலை பழங்குடியினர் புதைப்பதை மீனவர்கள் பார்த்துள்ளனர். அவர் சென்டினெல் தீவுக்கு சாகச சுற்றுலா மேற்கொள்வதற்கு உதவி செய்த ஏழு மீனவர்களைக் காவல் துறை கைது செய்துள்ளது. அவரின் உடலை மீட்க அந்தமான் அரசுக்கு உதவி புரிவதற்காக மானுடவியலாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இவர்களில் சிலர் இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள்.
சென்டினெல் பழங்குடியினரைத் தொடர்புகொள்வதற்கு அந்தமான் காவல் துறையினர் மானுடவியலாளர்களைத் தொடர்புகொண்டுள்ளனர். எனினும், ஜான் ஆலனின் உடலை மீட்பதற்கான அனைத்து முயற்சிகளும் இதுவரை தோல்வியுற்றுள்ளன. டி.என்.பண்டிட் என்ற மானுடவியலாளர் 1970ஆம் ஆண்டில் முதன்முறையாக வடக்கு சென்டினெல் தீவுக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு மானுடவியலாளர்கள் 26 பயணங்களை மேற்கொண்டு 24 முறை சென்டினெல்களைத் தொடர்புகொண்டுள்ளனர்.

அந்தமான் நிகோபார் தீவுகளின் விளிம்பு நிலை பழங்குடியினக் குழுக்களாகிய அந்தமானீஸ், ஒங்கே, ஜாரவாக்கள், சென்டினெல்கள், நிகோபாரீஸ், ஷோம்பென்ஸ் ஆகிய பழங்குடியினரிலேயே, சென்டினெல்கள்தான் மிகவும் தனித்துள்ளதாக இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனம் வெளியிட்ட Particularly Vulnerable Tribal Groups of India, Privileges and Predicament புத்தகத்தில், அதன் ஆசிரியர் அன்ஸ்டிஸ் ஜஸ்டின் கூறுகிறார்.
1970ஆம் ஆண்டில் பண்டிட் ஒங்கே பழங்குடியினரின் துணையோடு வடக்கு சென்டினெலுக்குச் சென்றபோது அவர்களுடன் எந்தவோர் உறவையும் ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை. சுனாமிக்கு முன்பு 22 பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுனாமிக்குப் பிறகான ஏழு பயணங்களில் சென்டினெல்கள் மிகவும் பகைமையுடன் நடந்துகொள்வதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அம்புகள் விடுவது போன்ற பயமுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பயணங்களின்போது தேங்காய்கள், வாழைப்பழங்கள், இரும்புக் கம்பிகள் போன்ற பரிசுகள் சென்டினெல்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
காலப்போக்கில் பழங்குடியினரின் மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர்கள் எளிதில் அணுகக்கூடியவர்களாகவும், அம்பு விடுவது குறைந்துள்ளதாகவும் தெரிகிறது. காட்டிலிருந்து அவ்வப்போது புகை வருவதாகவும், தனிநபர்கள் கடற்கரையில் வந்து நின்று சைகை காட்டுவதாகவும், பரிசுகளை எதிர்பார்ப்பதாகவும் பயணங்களை மேற்கொண்ட மானுடவியலாளர்கள் கூறுகின்றனர். பரிசுப் பொருட்கள் கடற்கரையிலும், ஆழமற்ற நீர்ப்பரப்புகளில் வைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர்.
இறுதியாக 2005ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதியன்று சென்டினெல் தீவின் வடக்குக் கடற்கரையில் பழங்குடியினரைச் சந்தித்ததாக அன்ஸ்டிஸ் ஜஸ்டின் கூறுகிறார். அப்பயணத்தின்போது, பரிசுகளைப் பெறுவதற்காகப் பழங்குடியினர் மகிழ்ச்சியுடன் கழுத்தளவு நீரில் இறங்கி வந்ததாக அவர் கூறுகிறார். 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு பயணங்கள் அதிகம் மேற்கொள்ளப்படவில்லை. சென்டினெல் தீவில் சிவில் ஆணையம் ஏதும் இல்லாத காரணத்தாலேயே அங்கு வெளியாட்கள் அத்துமீறி நுழைவதாகவும் கொல்லப்படுவதாகவும் ஜஸ்டின் கருதுகிறார். 2012ஆம் ஆண்டில் மட்டும் 11 நபர்கள் சென்டினெல் தீவில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
சென்டினெல்களுக்குத் தனி மொழி உள்ளது. ஜாரவாஸ், ஒங்கே போன்ற பழங்குடியினரைவிட சென்டினெல்கள் கடலையே சார்ந்துள்ளனர். சென்டினெல் தீவின் நிலப்பரப்பு 59.67 சதுர கிலோமீட்டர். கடற்கரையில் வில் அம்பு, ஈட்டிகள் போன்றவற்றால் சென்டினெல்கள் மீன் பிடிக்கின்றனர்.

காட்டுப் பன்றி, கடல் ஆமை, மீன் போன்றவற்றை வேட்டையாடியும், வேர், கிழங்கு, தேன் போன்றவற்றைச் சேகரித்தும் அவர்கள் தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்கின்றனர். இப்பழங்குடியினருக்குத் துடுப்பைப் பயன்படுத்தி படகை நகர்த்தத் தெரியாது என்று ஜஸ்டின் உள்ளிட்ட ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்திய மானுடவியல் ஆய்வு நிறுவனத்தின் பொது இயக்குநரான பண்டிட் (84 வயது) 1970ஆம் ஆண்டில் மூன்று ஒங்கே பழங்குடியினருடன் சென்டினெல் தீவுக்குச் சென்றுள்ளார். அவர் பேசுகையில், “ஒங்கே பழங்குடியினரைப் படகில் இருந்துகொண்டே அவர்களது மொழியிலேயே சென்டினெல்களுடன் பேசும்படி கேட்டோம். சென்டினெல்கள் கடும் கோபமடைந்துவிட்டனர். அதனால் ஒங்கே பழங்குடியினர் படகிலேயே மறைந்துகொண்டனர். நாங்கள் அங்கு சென்று நிலத்திலேயே பொருட்களை வைத்துவிட்டு உடனடியாக வெளியேறிவிடுவோம். நாங்கள் அங்கு தங்குவதற்காக வரவில்லை என்பதை உணர்ந்தவுடன் அவர்கள் அம்பு விடுவதை நிறுத்திவிடுவார்கள். அவர்களின் நிலத்தை யாரேனும் ஆக்கிரமிக்க முயன்றால் சென்டினெல்கள் மிகவும் உக்கிரமாக மாறிவிடுவார்கள். நாட்டின் ஒரு பகுதியில் இப்படி ஒரு சிறு குழுவினர் தனித்து கற்காலத்திலேயே வாழ்ந்து இன்னும் பிழைத்துக்கொண்டு இருப்பது நமது அதிர்ஷ்டம்” என்று கூறுகிறார்.
நன்றி: தி இந்து
தமிழில்: அ.விக்னேஷ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக