ஞாயிறு, 18 நவம்பர், 2018

ஓசூர் சாதி ஆணவப் படுகொலை : என்ன செய்யப் போகிறோம் ?

vinavu.com :
மீண்டுமொரு  சாதி ஆணவப் படுகொலை தமிழகத்தில் நடந்தேறியிருக்கிறது. ஓசூர் அருகே உள்ள சூடு்கொண்டபள்ளி கிராமத்தைச் சார்ந்த வன்னியர் சாதியைச் சேர்ந்த சுவாதியும், பறையர் சாதி இளைஞர் நந்தீஸ் என்பவரும் காதலித்து, மூன்று மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருப்பூர் சென்று தங்கி வாழ்க்கை நடத்தியர்கள், மீண்டும் ஒசூருக்கு திரும்பி வந்துள்ளனர்.
ஒசூரில் உள்ள மரக்கடை ஒன்றில் நந்தீஸ் வேலைப் பார்த்துவந்த நிலையில், சென்ற வாரம் இருவரும் காணாமல் போயிருக்கின்றனர். 13.11.2018 அன்று,  நந்தீஸும் சுவாதியும் கர்நாடகா மாண்டியா பகுதியில் காவேரி ஆற்றின் கரையில் பிணமாக கரை ஒதுங்கியுள்ளனர்.

இருவரும் அடித்துக் கொல்லப்பட்டிருப்பதும், முகங்கள் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக எரிக்கப்பட்டிருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட சுவாதி மூன்றுமாத கர்ப்பமாக இருந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.  அவமானத்தின் அடையாளமாக சுவாதி மொட்டையடிக்கப்பட்டும் அவர் அணிந்திருந்த தாலியால் கழுத்து இறுக்கப்பட்டும் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். ஒரு ரவுடி கும்பல் மூலம் சுவாதியின் பெற்றோர் இக்கொலையை நடத்தியிருப்பதும் தெரிய வந்துள்ளது.
தங்களுக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு தன் குடும்பமே காரணம் என காவல் நிலையத்தில் சுவாதி புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் சுவாதியின் அப்பா ஸ்ரீனிவாசன், சகோதரர்கள் வெங்கடேஷ், அஸ்வதப்பா, உறவினர்கள் கிருஷ்ணன், வெங்கட்ராஜ், ஓட்டுநர் சாமிநாதன் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஸ்ரீனிவாசன் ஆவணப்படுகொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்தக் கொடூர கொலைகளைக் கண்டித்தும், காரணமான சாதி வெறியர்களைக் கண்டித்தும், ஆணவப் படுகொலைகளைக் கண்டுகொள்ளாத தமிழக அரசு குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகள் இங்கே…
சிவபாலன் இளங்கோவன்:
“Caste is the state of mind” என்கிறார் அம்பேத்கர். எவ்வளவு கூர்மையான விவரிப்பு!
மற்றவர்களை போல அவர் ‘சாதி ஒரு மனநோய்’ என சொல்லவில்லை, மாறாக மிக மிக நுணுக்கமாக அது ஒரு ‘மனநிலை’ என்கிறார். நோய்கள் குணமடையக்கூடியன ஆனால் மனநிலை மாறாதது. நோய் என்பது நமது விருப்பத்தை தாண்டி, நமது கட்டுபாட்டை தாண்டி நம்மில் நிகழ்வது. ஒரு நோயில் இருந்து விடுபடவே ஒவ்வொரு மனிதனும் நினைக்கிறான். ஆனால் மனநிலை அப்படியல்ல அது விரும்பி ஏற்றுக்கொள்வது அல்லது விரும்பி உள்வாங்கிக்கொள்வது. ஏதோ சில சாதகங்களுக்காக ஒரு மனநிலையை ஒரு மனிதன் தனக்குள் விரும்பி வரித்துக்கொள்கிறான். சாதி அது போன்ற ஒரு மனநிலை தான். அதன் வழியே கிடைக்கும் ஆதாயத்திற்காக ஒருவன் விரும்பி அதை தரித்துக்கொள்கிறான். இங்கு ஆதாயம் என்பது வேறொன்றுமல்ல இன்னொரு மனிதனை அதன்பொருட்டு பிரித்துப்பார்ப்பதே, அவன் மீது சாதி ரீதியாக தனக்கு கிடைத்த ஆதாயத்தை பிரயோகிப்பதே.
இன்னும் நுணுக்கமாக பார்த்தால் அம்பேத்கர் இதை ‘trait’ என சொல்லவில்லை. ‘state’ என்று தான் விழிக்கிறார். ‘trait’ என்பது மரபணுவில் (Genes) பதிந்தது, மரபு ரீதியாக வருவது அதாவது ஒருவனுடைய ‘trait’ என்பது அவன் பிறப்பதற்கு முன்பே தீர்மானிக்கப்படுகிறது. ‘state’ என்பது கற்றுக்கொள்வது. ஒருவன் பிறந்ததற்கு பிறகு இந்த சமூகத்திடம் இருந்து கற்று கொண்டதில் தனக்கு தேவையானதை, சாதகமானதை உள்வாங்கிக்கொண்டு அதை எப்போதும் வெளிப்படுத்தி கொண்டிருப்பது தான் ‘state’. அம்பேத்கர் சாதிய மனநிலை என்பது மரபணுவில் கடத்தப்படும் பண்பல்ல மேலும் ஒருவன் பிறக்கும் போது அத்தகைய மனநிலை ஏதுமற்றவனாக தான் பிறக்கிறான் ஆனால் அவன் வளரும்போது இந்த சமூகம் இந்த மனநிலையை அவனுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்திவிடுகிறது என்கிறார்.
படிக்க:
கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!
தெலுங்கானா பிரணய் : இந்தியாவை உலுக்கிய சாதிவெறிப் படுகொலை !
சாதிய மனநிலை ஒருவனுக்கு வந்ததுக்கு சாதிய சமூகம் மட்டுமே காரணம். ஒருவன் இத்தகைய மனநிலையை தனக்குள் கொள்ளும்போது அவன் அதை மட்டுமே பிரதானமாக கொண்டு சக மனிதன் மீதுள்ள கரிசனத்தை நிராகரிக்கிறான். சகமனிதன் மீதான கரிசனம் மற்றும் சகமனிதர்களுடன் இணைந்திருத்தல் தான் “Socialization”ல் பிரதானமானது. “Human are social animal” என்ற கூற்றுப்படி பார்த்தால் இந்த “Socialization” அவ்வளவு முக்கியமானது. சாதி என்பது இந்த “Socialization”க்கு நேர் எதிரானது. சாதிய மனநிலையை கொண்டிருக்கும் ஒருவன் “Human are social animal” என்ற பண்புகளற்று போகிறான், அதன் படி அவன் வெறும் மிருகம் என்ற பதத்திற்கு உள்ளே தான் வருகிறான். அப்போது அவன் வெளிப்படுத்தும் பண்புகளும் மிருகத்தை ஒத்தவையாகவே இருக்கின்றன.
இந்த மிருகங்களிடம் இருந்து மனிதர்களை காப்பது இன்றைய காலகட்டத்தில் மனிதனுக்கு முன் உள்ள மிகப்பெரிய சவால். அதற்கான வேலையை இந்த சமூகத்தில் படிந்துள்ள சாதிய விழுமியங்களை தகர்ப்பதில் இருந்தே தொடங்க வேண்டும். அதை நோக்கி முற்போக்கு இயக்கங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக பெரியாரிய இயக்கங்கள் வெறும் ‘கடவுள் மறுப்பு’ பிரச்சாரங்களில் இருந்து வெளியே வந்து நேரடியாக சாதிய பண்பாடுகளை, பெருமிதங்களை, புனிதங்களை இளைய தலைமுறைகளிடம் அம்பலப்படுத்த வேண்டும். அதற்கான பிரச்சாரங்களை ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வீதிகளிலும் செய்திட வேண்டும். அதில் ஒருங்கிணைந்து செயல்பட நாம் எல்லாரும் தயாராக வேண்டும்.
சாதியை அழிக்கும் புயல் எந்த வங்கக்கடலில் இருந்து தொடங்காது, அதை நம் மனதில் இருந்தே கொள்ள வேண்டும். ஏனென்றால் “Caste is the state of mind”.
ஜாதி-மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் ஜாதியை விட்டொழித்துவிட்டார்கள் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், பருகும் தண்ணீரிலிருந்து, கடைசியாய் போய்சேரும் சுடுகாடு வரையிலும் ஜாதி இருக்கிறதே அதை என்ன செய்ய?
கிருபா முனுசாமி:
தொடர்ந்து நிகழ்ந்தேறும் ஜாதிய ஆணவ படுகொலைகள் குறித்தோ, ஒடுக்கப்பட்ட பெண்கள் – சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வுகள் குறித்தோ எதுவுமே எழுத முடியாத ஒரு கையாலாகாத மனநிலையில் இருந்தேன். ஆனால், நேற்று வெளிவந்த ஓசூர் ஜாதி மறுப்பு தம்பதிகளின் சிதைந்த உடல்களை கண்டபிறகு அமைதியாக இருக்க முடியவில்லை. நான், ஒரு தனிநபராகவே, கிட்டத்தட்ட 8 ஆண்டுகாலமாக ஜாதியையும், அதன் அடிப்படையிலான வன்முறைகளையும் எழுதிய வண்ணமே இருக்கிறேன். எனக்கு முன்பிருந்தே பல ஆண்டுக்காலங்களாக எழுதிவரும் முன்னோடிகளையும் பார்க்கின்றேன். ஜாதி ஒழிப்பிற்காக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்த பெருந்தலைவர்களும், அவர்தம் தொண்டர்களும் நம் சமூகத்தில் இருந்துவந்து தான் இருக்கிறார்கள். வடஇந்தியாவையும், மற்ற பிற இனங்களையும் ஒப்பிடும் பொழுது, தமிழ்நாடு மிகவும் முன்னேறிய மாநிலமாகவும், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரீகமடைந்தது தமிழ்க்குடி என்றும் பெருமை பேசி வந்தாலும், ஜாதிய வன்கொடுமையில் தமிழகம் சளைத்ததாக தெரியவில்லை.
கல்வி-பொருளாதார முன்னேற்றம் அடைந்தவர்கள் இவ்வித ஜாதிவெறிக்கு விதிவிலக்கா என்றால், அதுவும் இல்லை! அவரவர் அளவில், அவரவர் எல்லைகளில் ஜாதியை மிகவும் இறுக்கமாக பற்றிக்கொள்பவர்களாக அவர்களும் இருக்கிறார்கள். இதற்கு என்னதான் தீர்வு? ஜாதி-மறுப்பு திருமணங்கள் என்று மட்டும் நாம் எண்ணுகிறோம் என்றால், சிக்கல் நம்மிடமும் இருக்கிறது. நம் சிந்தனையை விரிவுப்படுத்த வேண்டிய தேவை மேலோங்கி இருக்கிறது.
சுசீலா ஆனந்த்:
சேரிகளை,குடிசைப் பகுதிகளை கைவிட்ட இடது, பெரியாரிய சிந்தனையாளர்கள் தான் கேட்பாரற்று நடக்கும் ஆணவ கொலைகளுக்குக் காரணம். அந்த பலவீனத்தை மறைக்கவே சாதி ஓட்டுகளால் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தை நெருக்கும் வேஷங்கட்டி முகநூலில் இறங்கி இருக்கிறோம். ஒவ்வொரு படுகொலையின் போதும் அவர்கள் வீடுகள் போய் கேதம் விசாரித்து விட்டு வருவதை அரசியல் செயல்பாடாக கருதி திருப்தி கொள்கிறோம்.
சமூகநீதிக்கான அரசியல் செயல்பாடென்பது சேரியென்றும் / குடிசைப் பகுதியென்றும் ஊர்களின் / நகரங்களின் ஒடுக்கப்பட்டோர் குடியிருப்பு பகுதிகளில் இயக்கம் கட்டுவது!! அதற்கான திட்டம் வகுப்பது!! ஆங்கிலத்தில் இதைத் தான் strategy என்பார்கள். இருக்கிறதா நம்மிடம்?
தொலைத்த இடத்தில் தேடாமல் தேடும் இடத்தில் கிடைக்குமா சமநீதி? 😡 ஒன்பதோடு பத்தாக கடக்கவிருக்கும் ஒசூர் சாதி ஆணவப்படுகொலை நினைவாக…
படிக்க:
காதலர்கள் அடித்துக் கொலை ! இரத்தம் குடிக்கும் பார்ப்பனியம் !!
சாதிவெறி கதிரவன், முருகன்ஜியைக் கைது செய் – ஆர்ப்பாட்டம்
ஜமாலன்:
மற்றொரு ஆணவக்கொலை. திருமணம் முடிந்த மகளையும், அவளது கணவனையும் வெட்டி ஆற்றில் போடும் மனம் எப்படி தாய், தந்தை பாசம் கொண்டதாக இருக்க முடியும். உண்மையில் இத்தகைய மேல்தள மனதிற்குள் இருப்பது சாதி என்கிற ஆணவம் மட்டுமே. பாசம் என்பதெல்லாம் உள்ளுர சொத்துடமை, சாதிய ஆணவம் சார்ந்த உறவுகளை மறைக்கும் பொதுச்சொல். இ்ங்கு சொத்து என்பது தனது மகள், தனது சாதி, அதன் பெருமிதம் என்கிற பண்பாட்டுப் பெருமதிகள். இந்திய சாதியத்தில் உயர்சாதி-தாழந்தசாதி என்கிற பண்பாட்டு ஆதிக்கம் அதிகம். அது ஒரு பண்பாட்டு மூலதனமாகவே மாறி, ஒவ்வொரு உடலிலும் சாதியாக முதலீடாகியுள்ளது. வெட்கமறுவதற்க்குகூட லாயக்கற்ற ஒரு சமூகமாக மாறிக்கொண்டுள்ளது.
அடிப்படையான பிரச்சனை 1948-ல் உருவான ஃபோர்ட் பவுண்டேஷனும், அதன் பல வடிவங்களில் உலக அளவில் உருவான என்ஜிவோ இயக்கங்களுமே. அவற்றின் நோக்கம் புரட்சிகர சிந்தனைக்கு மாற்றாக சீர்திருத்த வாதத்தை முன்வைப்பதும், புரட்சிகர அமைப்புகளுக்கு மாற்றாக சீர்திருத்த அமைப்புகள், சட்டவாத அமைப்புகள், தீண்டாமை ஒழிப்பு இயக்கங்கள் இப்படி பல வடிவங்களில் செயல்படுவது. அறிவுஜீவிகள் தளத்தில் அறிவை அடகுவாங்கி அவர்கள் வழியாக என்ஜிவோ தனது கருத்தியல் தளத்தை ஒரு அரசியல் ஆழ்மனதாக உருவாக்கி உள்ளது. அதுதான இடதுகளின் தோல்வி.
விநாயக முருகன்:
தமிழ்நாட்டில் ஒருகாலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகம் இருந்தன. அதற்கான சிறப்புச்சட்டம் இயற்றி இப்போது அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று சொன்னாலே அந்த ஸ்கேனிங் செண்டரை இழுத்து மூடி மருத்துவரையும் உள்ளே தூக்கி வைத்து விடுவார்கள். மெடிக்கல் கவுன்சில் அவர்களது டாக்டர் பட்டத்தை பத்தாண்டுகளுக்கு (என்று நினைக்கிறேன்) ரத்து செய்துவிடுவார்கள். இதற்கு பயந்துக்கொண்டே யாரும் இப்போது அதை செய்வதில்லை. ஜாதிய படுகொலைகளுக்கும் இதுபோன்றதொரு சிறப்புச்சட்டம் கொண்டுவர படவேண்டும். அதை மற்ற கொலைகேஸ் போல விசாரிக்கக்கூடாது. சிறப்பு சட்டம் மூலம் இரண்டு மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கபட வேண்டும். குறிப்பாக பெண்ணின் அல்லது ஆணின் பெற்றோரை (தேவைப்பட்டால் இரண்டு பேர்களையும் சேர்த்தே) முதன்மை குற்றவாளியாக்கி தண்டனை கொடுக்கப்படும்வரை ஜாமீனில் வெளிவரமுடியாத அளவுக்கு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். இதுபோன்ற சிறப்புச்சட்டம் பற்றி உச்சநீதிமன்றமே ஏற்கனவே சொல்லியுள்ளது.
படிக்க:
கொளத்தூர்: வன்னிய சாதி வெறி ! நேரடி ரிப்போர்ட்
விழுப்புரம்: வன்னிய மக்கள் ஆதரவுடன் வன்னிய சாதிவெறிக்கு கண்டனம்!
‘வயதுவந்த இருவர் மனம் ஒப்பித் திருமணம் செய்துகொள்ள முடிவுசெய்தால் அதற்கு குடும்பத்தின் அனுமதியோ, சாதி, சமூகம் ஆகியவற்றின் அனுமதியோ தேவை இல்லை’ எனத் தெளிவாகக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், ஆணவக் கொலையைத் தடுப்பதற்காகவும், அதனால் பாதிக்கப்படுகிறவர்களுக்கு நிவாரணம் அளிப்பதற்காகவும் , அந்தக் குற்றத்தில் ஈடுபடுகிறவர்களைத் தண்டிப்பதற்காகவும் சிறப்பு சட்டம் ஒன்றை நாடாளுமன்றம் இயற்றவேண்டும் என பரிந்துரை செய்திருக்கிறது. அப்படியான சட்டம் இயற்றப்படும் வரை மத்திய, மாநில அரசுகள் கடைபிடிக்கவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள், நிவாரண நடவடிக்கைகள், தண்டிக்கும் நடவடிக்கைகள் என மூன்று தலைப்புகளில் வழிகாட்டு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் அளித்திருக்கிறது.
சாதி பஞ்சாயத்துகளைத் தடுப்பதற்கு சிஆர்பிசி 144 பிரிவின்கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கலாம், பிரிவு 151ன் கீழ் கைதும் செய்யலாம் எனக் கூறியிருக்கும் உச்சநீதிமன்றம், சாதி மறுப்பு திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை உள்ளடக்கிய சிறப்புப் பிரிவையும் பாதுகாப்பு இல்லங்களையும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஆணவக் குற்றங்களைத் தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுத்துத் தண்டிக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. இந்த உத்தரவு இனிமேல் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமின்றி ஏற்கனவே கிடப்பில் இருக்கும் வழக்குகளுக்கும் பொருந்தும் என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட தேதியிலிருந்து ஆறு வாரங்களுக்குள் அனைத்து மாநில அரசுகளும் இதை நடைமுறைப் படுத்தவேண்டும் எனவும் கண்டிப்போடு உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனாலும் இன்னமும் எதுவும் விடிந்தபாடில்லை. சிறப்புச்சட்டம் வந்து சிலர் உள்ளே போகும் வரை இங்கு கொலைகள் விழுந்தபடிதான் இருக்கும்.
படிக்க:
அடையாள அரசியல் சாதியையும் தீண்டாமையையும் ஒழிக்குமா?
தமிழகம்: ஆதிக்க சாதிவெறித்தனத்தின் புதிய பரிமாணங்கள்!
பிரதாபன் ஜெயராமன்:
ஒசூரில் இரண்டு இந்துக்கள் திருமணம் செய்ததால், கொலை செய்து ஆற்றில் வீசியிருக்கிறார்கள். இந்துக்கள் கட்சி என தம்பட்டம் அடிக்கும் பாஜக எங்கே? இந்துக்களுக்காக போராடுவதாக சொல்லும் ஆர்.எஸ்.எஸ் சங்கீ அடிமைகள் எங்கே?
கோபாலகிருஷ்ணன் சங்கரநாராயணன்:
டிவிட்டர் ஐடி இருந்தால், இயக்குநர் பா. ரஞ்சித் ஓசூர் ஆணவக் கொலையால் வெகுண்டெழுந்து போட்டிருக்கும் ட்வீட்களுக்கு வரும் கமெண்டுகளைப் பாருங்கள்.
மிகப் பெரும்பாலானவை, ‘நீ சாதிய வெச்சுப் படம் எடுக்கறத நிறுத்து’, ‘நீதான் சாதியப் பிடிச்சுக்கிட்டுத் தொங்கற’ வகையிலானவைதான். இப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலானோர் அஜித், விஜய், விக்ரம், யுவன் சங்கர் ராஜா படங்களை ப்ரொஃபைல் பிக்காக வைத்திருக்கும் இளைஞர்கள். சிலர் வெளிப்படையாகவே சுயசாதிப் பெருமை பேசும் கயவர்கள். அவர்களும் இளைஞர்களாகவே இருக்கக்கூடும். அடுத்தத் தலைமுறையையும் சாதி வெறித் தின்றுகொண்டிருக்கிறது. அதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?
தலித் என்பது சாதி அல்ல. அது சாதிரீதியாக ஒடுக்கப்பட்டவர்களைக் குறிப்பிடுவதற்கான சொல் என்ற மிக எளிய விஷயத்தைக்கூட இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் அறியமாட்டார்கள். இந்தியா முழுவதும் இதே நிலைதான். ‘Dalit girl commits suicide’ என்று செய்தித்தாள்கள், இணையதளங்கள் செய்திவெளியிட்டால், அதற்கு வரும் 95% எதிர்வினைகள், ‘இதில் எங்கிருந்து சாதி வந்தது?’ என்று கேட்பதாகத்தான் இருக்கும்.
படிக்க:
கொங்கு பயங்கரவாதி யுவராஜை என்கவுண்டர் செய்யலாமா ?
திருவண்ணாமலை வெங்கடேசைக் கொன்ற வன்னிய சாதி வெறியர்கள் !
சம்பந்தப்பட்ட செய்தியாளரை, செய்தித் தளத்தைச் சாதியவாதி, சாதி வெறிபிடித்தவர் என்று வசைபாடுவதாகவும் இருக்கும். ஒவ்வொரு முறை அவற்றைப் பார்க்கும்போதும் அது குறித்த ஆற்றாமைப் பொங்கிவரும். ஆனால் எதுவும் செய்ய முடியாது. என்னதான் செய்யப் போகிறோம்?
ஃபேஸ்புக் பார்வை தலித் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பிரத்யேகமானவை, சாதிய சமூகத்தில் அவர்களில் பலருக்கு நிம்மதியாக வாழ்வதே அன்றாடப் போராட்டம், இதைப் பேசுவது அந்தச் சாதிகளுக்குப் பரிந்து பேசுவதாகாது, அந்த மக்களும் மற்றவர்களைப் போல் வாழ வேண்டும் என்றும், நாம் நாகரீகமானவர்கள் என்று நமக்கு நாமே உறுதி செய்துகொள்வதற்கான உணர்வென்றும், சாதிமய இந்தியாவின் பெரும்பான்மையான இளைஞர்களுக்கு எப்படிப் புரியவைக்கப் போகிறோம்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக