வியாழன், 22 நவம்பர், 2018

பிரசன்னாவை பேசவைத்த ‘மீம்’!

மின்னம்பலம் : மீம் என்றாலே பயப்படும் அளவுக்கு சினிமா துறையை நடுங்க வைத்து வருகின்றனர் மீம் கிரியேட்டர்ஸ். ஓரிரு இடங்களில் சுவாரசியமான மீம்கள் உருவாகினாலும், பல மீம்கள் ஒருவரைப் புகழவும், இன்னொருவரை இகழவுமே உருவாக்கப்படுகின்றன. இந்த கலாச்சாரப் புயலில் இன்று சிக்கியவர் பிரசன்னா.
2011ஆம் ஆண்டு நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் பிரசன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட படத்தையும், 2018ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நிகழ்ச்சியை பிரசன்னா தொகுத்து வழங்கியதையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்டது ஒரு மீம். அதனைப் பகிர்ந்து பல விதங்களிலும் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துவந்தனர் ட்விட்டர்வாசிகள். ஆனால், அவர்களில் ஒருவர் கொஞ்சம் அதிகபட்சமாகச் சென்றார்.

“சிவகார்த்திகேயன் சிறந்த தொகுப்பாளர். பிரசன்னாவுக்கு அவ்வளவு திறமை இல்லை. சொல்லப்போனால், அவர் தொகுத்து வழங்குவதைப் பார்க்க சோர்வாக இருக்கிறது. பிரசன்னா ஒரு சாதாரண நடிகர். ஆனால், சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் சிறந்த எண்டர்டெயினர்” என்று அந்த ட்விட்டர்வாசி குறிப்பிட்டிருந்தார். அதில், அவருக்கு ஆதரவாகவும், அவரது கருத்தை மறுத்தும் பலர் பேசினார்கள். ஆனால், ஆச்சர்யமளிக்கும் விதத்தில் நடிகர் பிரசன்னா தனது பதிலைக் கொடுத்திருந்தார்.

“அன்புள்ள ஸ்ரீனி, நான் சோர்வான தொகுப்பாளராக இருந்தால் இருந்துவிட்டுப் போகிறேன். நான் அதை முழுநேர வேலையாக செய்வதில்லை. நான் சாதாரண நடிகராக இருந்தால், எனக்கு அதை மெருகேற்றிக்கொள்ள இப்போதும் நேரம் இருக்கிறது. இதுவரை வெற்றிபெற்றதில்லை என்றால் அதற்கும் நேரம் இருக்கிறது. வெற்றிபெற ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலம் எடுக்கும். அன்பு அல்லது வெறுப்பு ஆகியவற்றை மட்டும் தான் ஒரு நொடியில் சம்பாதிக்க முடியும். ஒருநாள் நான் உங்களது அன்பையும் சம்பாதிப்பேன்” என்று பிரசன்னா கொடுத்த பதிலைத்தான், அந்த மீம் பகிர்ந்தவர்கள் அனைவரும் இப்போது பகிர்ந்து வருகின்றனர்.
தன்னைக் குறைவாக பேசியவர்களிடையே, முதிர்ச்சியான வார்த்தைகளின் மூலம் அன்பை சம்பாதிக்கும் வகையில் பிரசன்னா பேசியதால் அவர் மீதான மதிப்பு அதிகமாகியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக