வியாழன், 22 நவம்பர், 2018

கஜா புயல் பாதிப்பு: தமிழக அரசின் நிவாரணப் பணிகள் என்ன?- அறிக்கை கேட்கிறது உயர் நீதிமன்றம்

tamilthehindu : கஜா புயல் பாதித்த பகுதிகளில் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்த விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசு நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு குறுக்கிட்டு அரசு மேற்கொள்ளும் பணிகளின் பலன் மக்களைச் சென்றடையவில்லை எனத் தெரிவித்தார்.
இரு தரப்பு விளக்கத்தையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையை நவம்பர் 29-ம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
முன்னதாக, நவம்பர் 16-ம் தேதி நாகை வேதாரண்யம் அருகே கஜா புயல் கரையைக் கடந்தது. இதனால் நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் 30 ஆண்டுகளில் இல்லாத பேரழிவைச் சந்தித்தன.

கஜா புயலுக்கு இதுவரை 63 பேர் பலியாகியுள்ளதாகவும், லட்சக்கணக்கான தென்னை மரங்கள், விலங்குகள் அழிந்துள்ளதாகவும்,  2.5 லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புயலால் பாதித்த நாகை, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தேசியப் பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரஜினிகாந்த் உயர் நீதிமன்றத்தில் கடந்த 20-ம் தேதி மனுத்தாக்கல் செய்தார்.
தஞ்சை, நாகை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் கடந்த ஐந்து நாட்களாக உணவு, குடிநீர், மின்சார வசதி இல்லாமல் இயல்பு வாழ்க்கையை இழந்துள்ளதாகவும்,  பலியான விலங்குகளின் உடல்கள் அப்புறப்படுத்தாததால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் மனுவில் கூறியுள்ளார்.
மேலும், அரசு நிவாரண நடவடிக்கைகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும், மத்திய அரசு எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்... உயிரிழந்த கால்நடைகள், சேதமடைந்த பயிர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்குப் பதில் புது வீடுகள் கட்டித்தர வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
புயல் நிவாரணப் பணிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் அரசு ஒதுக்கியுள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருதாகவும், அந்த நிவாரணப் பணிகளை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த மனு, நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு எடுத்துவரும் நிவாரணப்பணிகள் குறித்த விரிவான அறிக்கையை வரும் நவம்பர் 29-ம் தேதி அன்று முழு அறிக்கையாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக