திங்கள், 19 நவம்பர், 2018

அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்! மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய அமைச்சர் ஒ எஸ் மணியன் விடியோ


அமைச்சர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்!மின்னம்பலம்: தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவந்த செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. தென்னை, பலா, வாழை உள்ளிட்ட மரங்கள் அடியோடு விழுந்ததால் மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளாக பல இடங்களில் மின்சாரம் தடை பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில், தங்கள் பகுதியில் நிவாரணப் பணிகள் நடைபெறவில்லை என்றும், அதிகாரிகள் வரவில்லை என்றும் கூறி பொதுமக்கள் பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, துரைக்கண்ணு ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கமும் இருந்தார். வைத்திலிங்கத்தின் சொந்த ஊரான ஒரத்தநாடு அடுத்த தெலுங்கன்குடிகாடு வழியாக அமைச்சர்கள் சென்றபோது, அவர்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டனர். தங்களுக்கு போதிய குடிநீர், உணவு வசதிகள் கிடைக்கவில்லை என்று அவர்கள் அமைச்சர்களிடம் புகார் தெரிவித்தனர். அப்போது பொதுமக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வைத்திலிங்கம், தகாத வார்த்தைகளை கூறித் திட்டியதால் பரபரப்பும் ஏற்பட்டது.
திருத்துரைப்பூண்டியில் ஆர்ப்பாட்டம்
திருத்துறைப் பூண்டி பகுதிகளில் பெரிய அளவில் ஏதுவும் பாதிப்பு ஏற்படவில்லை என்று அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால் வெகுண்டெழுந்த மக்கள், இன்று காலை திருத்துறைப் பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதியம் 1 மணியளவில் அங்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லக் கூறினார். கலைந்து சென்றாலும் மீண்டும் மீண்டும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற அமைச்சர்கள் காமராஜ், ராஜேந்திரபாலாஜி ஆகியோரை பொதுமக்கள் முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வரவில்லை, மின்சார வசதியில்லை, அதனை சீர்செய்யாமல் நிவாரணம் என்ற பெயரில் அரிசியை கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
நிவாரணப் பணிகள் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “புயலால் பாதிக்கப்பட்ட நாகை,திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.பொதுமக்கள் வாய்க்கால், குளங்களில் உள்ள நீரை பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு பாய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என்று முதலமைச்சர் கூறி வருகிறார். ஆனால் மண்ணெண்ணெய் எங்கும் கிடைக்கவில்லை. உள்ளூர் அரசு அதிகாரிகள் முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்ற முயற்சி செய்கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளும், நிர்வாகிகளும் இல்லாததால் நிவாரண நடவடிக்கைகள் சரிவர நடக்க வில்லை.எனவே அனைத்து கிராமங்களிலும் சர்வ கட்சிகள் அடங்கிய குழு அமைத்து நிவாரண நடவடிக்கைகள் பாரபட்சமற்ற முறையில் நடைபெற வேண்டும்.தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக