திங்கள், 19 நவம்பர், 2018

மக்கள் அரசுமீது கடும் கோபத்தில் உள்ளார்கள் எடப்பாடியை எச்சரித்த உளவுத்துறை.

தரையில் போக பயமோ?
மின்னம்பலம்: “கஜா புயல் டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப் போட்டிருக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், நிவாரணப் பணிகளில் கோட்டை விட்டுவிட்டது என்ற குற்றச்சாட்டுகள் மக்களின் குரலாகக் கேட்டபடித்தான் இருக்கிறது.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர் இதுவரை நேரில் செல்லவில்லை. சேலம், நாமக்கல் பகுதிகளில் தொடர்ந்து கடந்த நான்கு நாட்களாகவே அரசு விழா, எடப்பாடியின் மாமனார் ஊரில் கும்பாபிஷேக விழா எனப் பங்கேற்று வருகிறார் எடப்பாடி பழனிசாமி. நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டிருப்பதாக சேலத்தில் இருந்தபடியே பேட்டியும்
கொடுத்துக் கொண்டிருந்தார். கடந்த சனிக்கிழமை புயல் பாதித்த பகுதிகளுக்கு ஆறுதல் சொல்லப் போவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது முதல்வரின் பயணம். ஆனால் அதைத் திடீரென முதல்வர் கேன்சல் செய்துவிட்டார்.
உளவுத் துறையில் இருக்கும் முக்கிய அதிகாரி ஒருவர் முதல்வரைத் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். ‘டெல்டா மாவட்டங்களில் இப்போது நிலைமை சரியாக இல்லை சார். நீங்க போனால் நிச்சயமாகப் பிரச்சினை வரும். நிவாரணம் எதுவும் மக்களுக்குப் போய் சேரலைன்னு ரொம்பவே கோபமா இருக்காங்க. பல இடங்களில் தொடர் சாலை மறியலும் நடந்துட்டு இருக்கு. நீங்க அங்கே போனால் எப்படியும் மக்கள் மறியலில் இறங்கி, உங்களை முற்றுகை இடுவாங்க. முதல்வர் அங்கே போறாருன்னு ஒட்டுமொத்த மீடியா அட்டென்ஷனும் உங்களைச் சுற்றித்தான் இருக்கும். ‘முதல்வர் முற்றுகை’ என்று செய்திகள் வரும். மக்களையும் காவல் துறையால் தடுக்க முடியாது. அதனால் கொஞ்சம் மக்களோட கோபம் அடங்கும் வரை நீங்க போக வேண்டாம்...’ எனச் சொல்லியிருக்கிறார்.
அதற்கு எடப்பாடியோ, ‘நீங்க சொல்றது சரிதான். ஆனால் நான் நேரில் போய் அவங்களோடு இறங்கிப் பேசினால் சமாதானப்படுத்த முடியாதா ?’ எனக் கேட்டாராம்.

உளவுத் துறை அதிகாரி அதை மறுத்திருக்கிறார். ‘ நீங்க இறங்கிப் பேசுறதைக் கேட்கும் வரை மக்கள் பொறுமையாக இருக்க மாட்டாங்க. நீங்க போற ரூட் தெரிஞ்சாலே வந்து மறிச்சிடுவாங்க. பேசிட்டு இருக்கும்போதே யாராவது கல்லை விட்டு அடிச்சா போலீஸால் என்ன செய்ய முடியும்? ஒரு கலவர சூழ்நிலை வந்து அதுக்கு தடியடி நடத்தினால் அது இன்னும் பெரிய பிரச்சினையாகிடும். அதனால் தயவு செய்து நீங்க போக வேண்டாம்’ என்று சொல்லிவிட்டாராம்.
இந்தத் தகவல்களையெல்லாம் பன்னீரிடமும் சொல்லிக் கலந்து பேசியிருக்கிறார் எடப்பாடி. அவரும் உளவுத் துறை சொன்னதை ஆமோதிக்க... முதல்வர் பயணம் ரத்தாகிவிட்டது. உளவுத் துறை சொன்னது போலவே இன்று புயலால் பாதிக்கப்பட்ட பாதித்த பகுதிகளுக்குப் போன அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்ட நான்கு பேரை ஒரத்தநாடு பகுதியில் மக்கள் சிறைப்பிடித்துவிட்டனர். அவர்களை மக்களிடமிருந்து மீட்டுக் கொண்டுவரக் காவல் துறை படாதபாடு பட்டுவிட்டது. இதெல்லாம் முதல்வர் கவனத்துக்கும் போயிருக்கிறது. நாளை புயல் பாதித்த பகுதிகளுக்குப் போவதாக முதல்வர் சொல்லியிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் அங்கே போவாரா அல்லது பயணம் மறுபடியும் தள்ளிப்போகுமா என்பது இரவு உளவுத் துறை ரிப்போர்ட்டை வைத்துத்தான் ரெடியாகும் என்கிறார்கள்.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது. “ஆளுங்கட்சி சேனலான நியூஸ் ஜெ. ஒளிபரப்பைத் தொடங்கிவிட்டது. ஜெ டிவி, ஜெ மியூசிக் என இரண்டு சேனல்களை அடிஷனலாகத் தொடங்கவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இது தொடர்பாக எடப்பாடியுடன் ஆலோசனையும் நடந்திருக்கிறது. சேனலுக்கான பொறுப்பாளர்களில் புதிதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சேர்ந்திருக்கிறார். பொங்கலுக்குள் அந்த இரண்டு புதிய சேனல்களையும் கொண்டுவர விறுவிறுவென வேலைகள் நடக்கிறது. ஜெ. டிவிக்காகப் புதிய படங்களை வாங்கும் வேலைகளையும் தொடங்கிவிட்டார்கள்”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக