வெள்ளி, 9 நவம்பர், 2018

கூத்தாடிகளின் கோடிக்கணக்கான வரிஏய்ப்பு .... இலவச கல்வி சான்றிதழை கொழுத்துவீர்களா? நடிகர்களிடம்தான் சான்றிதழே இல்லையே?

தமிழ் மறவன் : சர்க்கார் திரைப்பட சர்ச்சைக்கு பின் இலவசம் என்பதை
குறித்த புதிய கருத்துக்கள் துவங்கி இருக்கிறது.
தற்பொழுது புதிய விவாதம் உருவாகியுள்ளது. அரசு இலவசங்களை தரவும் கூடாது மக்கள் அந்த இலவசங்களை பெறவும் கூடாது என்று சொல்கிறார்கள்.
ஓர் அரசு வாக்குறுதிகளின் அடிப்படையி்லும், திட்டங்களின் அடிப்படையிலும் தருகிற எதுவொன்றும் இலவசம் என்று முடிவு செய்ய இவர்கள் யார்?
அரசு தரும் எதையும் இலவசம் என்று குறிப்பிட்டால், நாம் அரசுக்கு செலுத்துகின்ற வரியை இவர்கள் என்னவென்று சொல்வார்கள்?
ஓர் அரசு என்பது மக்களுக்காக பணியாற்றுகிற ஒரு இயந்திரம் தானே தவிர மக்களுக்கு பிச்சை இடுக்கிற முதலாளிகள் அல்ல!
முற்போக்காளர்களை போலவும், அறிவுஜீவிகளை போலவும் இவர்கள் இலவசத்திற்கு எதிராக பேசுவது அபத்தமானது! ஆபத்தானது!!
கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் இன்னபிற அனைத்து உரிமைகளையும் பெறக்கூடிய தகுதியும் உரிமையும் மக்களுக்கு உண்டு.
ஓர் அரசு என்பது மக்களுக்கானது, மக்களுடையது.
ஒரு அரசு நிர்வாகத்தில் மக்களுக்காக வழங்கப்படுகிற அல்லது செயல்படுத்தப்படுகிறது எந்த ஒன்றும் இலவசமல்ல மக்களின் வரிப்பணமே!
மக்களுக்கும், அரசுக்கும் தொடர்பே இல்லாதது போலவும், மக்கள் பிச்சைக்காரர்கள் போலவும், அரசு பெருமுதலாளி போலவும், அரசு பார்த்து நமக்கு பிச்சை இடுவதைப் போலவும் இலவசங்களை எதிர்த்துப் பேசுகிற அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்ல?

ஆழமாக சிந்தித்தால் உண்மையில் இவர்களின் முற்போக்கு என்பது உழைக்கும் மக்களை இழிவுபடுத்துகிற பார்ப்பன மனப்போக்குதான்!
அரசின் செயல்பாடுகள் குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் பகடி செய்யும் பல வசனங்களை திரைப்படங்களில் இப்பொழுது பதிவு செய்கிறார்கள்.
இப்படி விமர்சனம் செய்வது இவர்களின் ஜனநாயக உரிமை என்று வாதிடுகிறார்கள்.
உண்மையில் கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் வரவேற்கப்பட வேண்டியவையே! ஆனால் உள்நோக்கம் கற்பிக்கிற பொய் மூட்டைகள் எப்படி விமர்சனங்கள் ஆகும்?
ஓர் அரசியல்வாதியின் சித்தாந்தத்தை நீங்கள் விமர்சிக்கலாம், அவர்களின் செயல்பாடுகளை நீங்கள் விமர்சிக்கலாம் ஆனால் அவரின் தனி மனித வாழ்க்கையும், அவர்களின் உறவுகள் சம்பந்தப்பட்ட வகைகளையும் பகடி செய்ய உங்களுக்கு யார் அனுமதி அளித்தது? அது எப்படி ஜனநாயக உரிமையாகும்?
முதலாளித்துவ பார்ப்பனிய சமூகத்தின் தவிர்க்க முடியாத, உப்பு பெறாத ஊழலை பேசுவதைவிட;
கூத்தாடிகளின் கோடிக்கணக்கான வரிஏய்ப்பு குறித்தும், இயற்கை வளங்களையும் மக்களின் உழைப்பையும் சுரண்டுகிற கார்ப்பரேட்டுகள் குறித்தும், சாதிவெறி மதவெறியைத் தூண்டி தன் அரசியல் அரிப்பை தீர்த்துக் கொள்ளும் இந்துத்துவா குறித்தும் இவர்கள் பேச தயாரா? விமர்சிக்க தயாரா?
சுருக்கமாக சொல்வதானால் சர்க்கார் திரைப்படம் அடுத்தவர் கதையை திருடிய படம் மட்டுமல்ல! அடுத்தவர் உரிமையை திருடுவதும், மக்களை பிச்சைக்காரர்களாக இழிவுபடுத்தி, கார்ப்பரேட்டுகளின் திருப்தியே நாடுகிற போலி முற்போக்குவாத திரைப்படமே!
கடைசியாக!
அரசின் விலையில்லா பொருட்களை தீயிட்டு கொளுத்துவதைப் போல் சிலர் சமூகவலைதளங்களில் பதிவேற்றுகின்றனர்.
இது பைத்தியக்காரத்தனமான செயல்!
அரசின் கல்விக் கூடங்களில் இலவசமாக பயின்றதால் அந்த சான்றிதழ்களை இவர்கள் தீயிட்டு கொளுத்துவார்களா?
அல்லது..,
அரசு மருத்துவமனைகளில் பிறந்ததால் அரபிக்கடலில் சென்று குதித்து விடுவார்களா?
கூத்தாடிகளுக்கு பாலூற்றும் ரசிகர்களின் பைத்தியக்காரத்தனமான இரசிக மனோபாவச் செயல்களுக்கு முற்போக்கு முலாம் பூச முயலும் முட்டாள்களை கண்டிக்கிறோம்!
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக