ஞாயிறு, 18 நவம்பர், 2018

லாலு பிரசாத் யாதவ் உடல்நலம் பாதிப்பு!

லாலு உடல்நலம் பாதிப்பு!மின்னம்பலம் : ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நலம் மோசமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் அவரது ஆட்சிக் காலத்தில் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான நான்கு வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு மொத்தம் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு ராஞ்ஜி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை தண்டனை அனுபவித்துவரும் லாலுவின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிம்ஸ் மருத்துவமனையில் நேற்று (நவம்பர் 17) லாலுவைச் சந்தித்த பின் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ரேகா தேவி எம்.எல்.ஏ, “லாலுவின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவரால் நிற்கவும் உட்காரவும் முடியவில்லை. அவரது ரத்த அழுத்தத்தின் அளவும் அதிகரித்துள்ளது. சிறந்த சிகிச்சை வழங்கப்படும் இடத்துக்கு அவரை மாற்ற வேண்டும்” என்று தெரிவித்தார்.

லாலுவின் சிறுநீரகம் செயல்படவில்லை என அவருக்கு சிகிச்சையளித்து வரும் மருத்துவர் உமேஷ் பிரசாத் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே ரத்தத் தொற்று, நீரிழிவு மற்றும் வேறு சில நோய்களால் லாலு பாதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 29ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாரடைப்பு மற்றும் சிறுநீரகத்துடன் தொடர்புடைய பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், வழக்கில் தண்டனை பெற்றிருப்பதால் அவர் அங்கிருந்து மாற்றப்பட்டு ராஞ்சி ரிம்ஸ் மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் அனுமதிக்கப்பட்டார்.
அவர் அங்கு அனுமதிக்கப்பட்டதில் இருந்தே வேறு மருத்துவமனைக்கு அவரை மாற்ற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக