ஞாயிறு, 18 நவம்பர், 2018

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு!

காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு!மின்னம்பலம் : ஓராண்டுக்கு முன்னர் காணாமல் போன அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த நீர்மூழ்கிக் கப்பல், அட்லாண்டிக் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதியன்று, அர்ஜெண்டினா நாட்டு கடற்படையைச் சேர்ந்த ஏஆர்ஏ சான் ஜுவான் என்ற நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போனது. அதில், கப்பலின் கேப்டன் உட்பட 44 பேர் பயணித்தனர். அந்தக் கப்பல் தகவல் தொடர்பிலிருந்து துண்டிக்கப்படுவதற்கு முன்னால், கப்பலின் பேட்டரி அமைப்பில் மின் கோளாறு ஏற்பட்டதென்று கேப்டன் தெரிவித்ததாகக் கூறியது அர்ஜெண்டினா நாட்டு கடற்படை. அதன்பிறகு, அக்கப்பல் எங்கிருக்கிறது என்று யாராலும் கண்டுபிடிக்க இயலவில்லை.

இந்த நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியில் 28 கப்பல்களும் 9 விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன் உட்பட கடற்படையில் சிறந்து விளங்கிய 9 நாடுகள் இதில் ஈடுபட்டும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அர்ஜெண்டினா கடற்கரையில் இருந்து 900 கி.மீ. தொலைவில் தேடுதல் பணி நடைபெற்றது. கப்பல் காணாமல்போன இரண்டு வாரங்களில், அதில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அறிவித்தது அர்ஜெண்டினா அரசு. அதன்பின்னர், நீர்மூழ்கிக் கப்பலைத் தேடும் பணியை, அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.

அட்லாண்டிக் கடல்பகுதியில் 60 மீட்டர் நீளத்தில் ஒரு பொருள் கிடக்கும் தோற்றத்தைக் கண்டுபிடித்துள்ளதாகவும், அது காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பலாக இருக்கலாம் எனவும், இரண்டு நாட்களுக்கு முன்பு அர்ஜெண்டினா கடற்படை ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிவு செய்தது. அடுத்த சில மணி நேரங்களிலேயே, அது காணாமல் போன நீர்மூழ்கிக் கப்பல்தான் என்று உறுதி செய்யப்பட்டது. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் ஆழத்தில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக