வெள்ளி, 30 நவம்பர், 2018

ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராபர்ட் காலமானார்!

ஒளிப்பதிவாளர் ராபர்ட் காலமானார்!மின்னம்பலம் :பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ராபர்ட் ஆசீர்வாதம் இன்று (நவம்பர் 30) காலமானார். அவருக்கு வயது 68.
தமிழ்த் திரையுலகில் 80 களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இணைபோல் பேசப்பட்டவர்கள் ராபர்ட்-ராஜசேகர். மாபெரும் வெற்றிப் படங்களான பாலைவனச் சோலை, மனசுக்குள் மத்தாப்பு, சின்னப்பூவே மெல்ல பேசு ஆகிய படங்களை இயக்கியவர்கள். ஒரு தலை ராகம், குடிசை உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவும் செய்துள்ளனர். இதனையடுத்து இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததன் விளைவு அடுத்த படங்கள் அவர்களால் வெற்றிக் கொடுக்க முடியாமல் போனது.

இதனிடையே ராபர்ட் சென்னை திரைப்படக் கல்லூரியில் சில காலம் ஒளிப்பதிவு துறை பேராசிரியராக பணியாற்றினார். அப்போது பயின்ற மாணவர்கள் தான் பிரபல ஒளிப்பதிவாளர்கள் பி.சி.ஸ்ரீராம், கிச்சாஸ், ஜி.பி.கிருஷ்ணா போன்றோர். பின்னர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யததோடு, ஆபாவாணன் தயாரிப்பில் பல டி.வி தொடர்களுக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ராபர்ட்.

நடிகர்கள் சந்திர சேகர், தியாகு, சுகாசினி போன்றோரைத் தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இவர்களையே சாரும். இசை மீது ஆர்வம் கொண்ட ராபர்ட் ஒரு கிட்டார் வாசிப்பாளர். மேலும், இசையால் பலரது மனதை கட்டுப் போட்டிருக்கும் இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரை அறிமுகப்படுத்தியதும் இவர்களே.
இயக்குநரும், நடிகருமான மனோபாலா, மணிவண்ணன் போன்றோர் கதை, திரைப்படங்கள் பற்றிய விவாதத்திற்காக ராபர்ட் அறைக்கு அடிக்கடி செல்வதும் உண்டு. தென்னிந்திய ஒளிப்பதிவாளர்கள் சங்கத்திலும் தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தவர் ராபர்ட்.
திருமணம் செய்யாமல் தனது சகோதரர், சகோதரிகளின் குடும்பத்தோடு வாழ்ந்து வந்த ராபர்ட், உடல்நலக்குறைவு காரணமாக பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைப் பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவிற்குத் திரையுலகைச் சார்ந்தவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக