புதன், 28 நவம்பர், 2018

ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பு முழுமையாக நின்ற பின்புதான் ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது விசாரணையில் தகவல்

தினத்தந்தி :சென்னை, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு
நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. அப்பல்லோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் சுந்தர் நேற்று ஆணையத்தில் ஆஜரானார்.
2016-ம் ஆண்டு டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட போது அவரது இதயத்தை செயல்பட வைப்பதற்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது.
 இந்த குழுவில் மருத்துவர் சுந்தர் இடம் பெற்று இருந்தார். ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது தொடர்பாகவும், அதன்மூலம் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதா? என்பது குறித்தும் மருத்துவர் சுந்தரிடம் ஆணையம் பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
அதற்கு அவர் பதில் அளித்தார்.< அவர் தனது வாக்குமூலத்தில், ‘ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது அவரது இதயத்தை செயல்பட வைப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
மின்சாரம்(‘கரண்ட் ஷாக்’) மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதில் முன்னேற்றம் இல்லாததால் மார்பகத்தை பிளந்து இதயம் மசாஜ் செய்யப்பட்டது.
அது சரிவரவில்லை என்றதும், ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது. இருந்தபோதிலும் ரத்த ஓட்டம் சீராகவில்லை. இதன்காரணமாக மூளை செயல் இழந்து ஜெயலலிதா இறக்க நேரிட்டது’ என்று கூறினார்.

எந்தெந்த சூழ்நிலையில் ‘எக்மோ’ கருவி பொருத்த வேண்டும் என்று உலகளாவிய மருத்துவ ஒப்பந்தத்தில் கூறி இருப்பதை சுட்டிக்காட்டி மருத்துவர் சுந்தரிடம், ஆணையத்தின் வக்கீல் எஸ்.பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். இதய துடிப்பு குறைவாக இருந்து அதனால் உடல் பாகங்களுக்கு ரத்தம் சரிவர செல்லவில்லை என்றால் மட்டுமே ‘எக்மோ’ கருவி பொருத்த வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறி இருப்பது குறித்தும், இதயம் செயல் இழந்த பின்பு எக்மோ பொருத்துவது குறித்து ஒப்பந்தத்தில் எதுவும் சொல்லப்படாதது குறித்தும் கேட்ட ஆணையத்தின் வக்கீல், ‘ஜெயலலிதாவுக்கு இதய துடிப்பு முழுமையாக நின்ற பின்பு எக்மோ பொருத்தியது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மருத்துவர் சுந்தர், ‘கடைசி முயற்சியாகவே ஜெயலலிதாவுக்கு ‘எக்மோ’ கருவி பொருத்தப்பட்டது’ என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக