திங்கள், 19 நவம்பர், 2018

நந்தீஷுக்கு மோதிரம் போட்டு அழைத்து சென்ற சுவாதியின் அப்பா.. ஓசூர் ஆணவ கொலை!

நந்தீஷுக்கு மோதிரம் போட்டு அழைத்து சென்ற சுவாதியின் அப்பா.. காதல் பட பாணியில் நடந்த ஓசூர் ஆணவ கொலை!tamiloneindia : ஓசூர்: ஓசூரில் நடந்த ஆணவ படுகொலை எப்படி நடந்தது என்று திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
காதல் பட பாணியில் இந்த கொலை நடந்துள்ளது.
நந்தீஷ் – சுவாதி திருமணமும் அதையடுத்த கொலையும் தமிழகத்தில் பெரிய புயலை கிளப்பி இருக்கிறது. தொடர்ந்து தமிழகத்தில் நடந்து வரும் ஆணவக் கொலைகளை எப்படி தடுத்து நிறுத்துவது என்று யாருக்கும் தெரியவில்லை. சங்கர் படுகொலை, இளவரசன் படுகொலை என்று தொடர் படுகொலைகளை தொடர்ந்த தற்போது நடந்து இருக்கும் நந்தீஷ் – சுவாதி படுகொலை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவர் நந்தீஷ். நந்தீஷ் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த, இடைநிலை சாதியை சேர்த்த என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து பெண் வீட்டில் ஜாதியை காரணம் காட்டி காதலுக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் நந்தீஷ் – சுவாதி இருவரும் ஓசூர் சென்று திருமணம் செய்துள்ளனர். மூன்று மாதம் முன் இந்த திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து ஒரு மாதம் முன் சுவாதி கர்ப்பம் ஆகியுள்ளார்.


 இந்த சந்தோசத்தை பகிர ஆசைப்பட்ட சுவாதி தனது வீட்டினருக்கு போன் செய்துள்ளார். முதலில் சரியாக பேசாத அவர்கள், பின் மக்களிடம் பாசமாக பேசியுள்ளனர். மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வா என்று கூட கூப்பிட்டு இருக்கிறார்கள்.
இதையடுத்து ஓசூர் வீட்டு விலாசத்தை வாங்கி கொண்டு நேரடியாக வீட்டிற்கே வந்துள்ளார் சுவாதியின் அப்பா சீனிவாசன். சீனிவாசனுடன் உறவினர்களும், சில ஏரியா நபர்களும் இரண்டு சுமோவில் வந்துள்ளனர். அங்கு வந்து சுவாதி கையால் சாப்பிட்ட சீனிவாசன் ஆட்கள், பின் நந்தீஷ் – சுவாதிக்கு மோதிரம் அணிவித்து இருக்கிறார்கள். புதுப்புடவையும் எடுத்து வந்துள்ளனர்.

இதையடுத்து காரில் ஏற்றிக்கொண்டு அவர்களை இருவரையும் வீட்டிற்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளனர். ஆனால் இரவு நேரம் பார்த்து ரூட் மாற்றிய அவர்கள், எதிர்திசையில் கர்நாடக நோக்கி சென்று உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 10ம் தேதி நடந்துள்ளது. போகும் வழியிலேயே இருவரையும் மாறி மாறி தாக்கி இருக்கிறார்கள்.
சீனிவாசன், நந்தீஷை மோசமாக தாக்கியுள்ளார். பின் இருவரும் சுயநினைவு இழந்த பின் வாகனம் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் மலவள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறது.

அங்கு வைத்து இவர்களை கொலை செய்த சீனிவாசன் மற்றும் அவரது ஆட்களும், கைகள், கால்களை கட்டி சிவசமுத்திரம் காவிரி ஆற்றில் வீசி உள்ளனர். 10ம் தேதி நள்ளிரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நந்தீஷின் சகோதரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. அதன்பின் 13ம் தேதி இவர்கள் உடல் ஆற்றில் மீட்கப்பட்டது. இவர்களை தண்ணீரில் போடும் முன், இருவரின் கையில் இருந்து மோதிரத்தை எடுத்துவிட்டு வீசியுள்ளனர்.

அதேபோல் நந்தீஷின் முகத்தை கொடூரமாக அடையாளம் தெரிய கூடாது என்று சிதைத்துள்ளனர். மேலும் சுவாதியின் தலைமுடியை பிடுங்கி எறிந்துள்ளனர். முழுக்க காதல் பட பாணியில் இந்த கொலை அரங்கேறி இருக்கிறது. மராத்தியில் வந்த சாய்ராத் படமும் இதேபோல் கதையை கொண்டதுதான். இரண்டிலும் பெற்றோர் திருந்தி வருவது போல காட்டி கொலை செய்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக