சனி, 24 நவம்பர், 2018

மீண்டும் மக்கள் நலக்கூட்டணி?... ஆட்சியில் அதிகார பகிர்வு சாத்தியமா?

ஷண்முகசுந்தரம் சிக்கல் - :  மக்கள் நலக் கூட்டணியை விடுதலைச் சிறுத்தைகள் மீண்டும் தொடங்கினால் என்ன ஆகும்? என்று சில விசிகவினர் சொல்வது கொஞ்சம் பலமாகவே கேட்கிறது. சுருக்கமாகச் சொல்வதென்றால் அது விசிக முன் வைக்கிற அதிகாரப் பகிர்வு என்ற முன்னெடுப்பைக் குழி தோண்டிப் புதைப்பதாக அமையும் என்பது தான் கசப்பான உண்மை.
கடந்த தேர்தலில் விசிக 25 இடங்களில் பெற்ற 0.77 சத வாக்குகளை 234 தொகுதிகளுக்குக் கணக்கிட்டால் 7 - 7.25 சத வாக்குகளைப் பெற்றிருக்கக் கூடும். ஆனால் இந்த எளிய கணக்கீட்டையே கள நிலவரமும் பிரதிபலிக்கும் என்று யாராலும் அறுதியிட்டுக் கூற இயலாது. இந்த 0.77 சதம் வாக்கு என்பதும் கூட மக்கள் நலக் கூட்டணி என்ற அணிச் சேர்க்கையின் விளைவு மட்டுமே. விசிகவின் அணிச் சேர்க்கை வேறு விதமாக அமைந்திருந்தால் அது அதிகரிக்கவும் செய்திருக்கலாம் அல்லது குறையவும் வாய்ப்பு இருந்திருக்கலாம்.
ஆனால், இதில் அடிப்படைத் தர்கம் என்னவென்றால் அதிகபட்சக் கணக்கீடான 7.25% வாக்குகள் கூடவிசிக தலைமையில் ஆட்சியமைக்கப் போதுமானல்ல என்பதே! இந்த நிதர்சனம் மற்றவர்களை விட நாங்கள் மீண்டும் மக்கள் நலக் கூட்டணியைத் தொடங்கினால் என்ன ஆகும் தெரியுமா! என்பவர்களுக்கே மிகச் சிறப்பாகத் தெரியும்.

அதிகாரப் பகிர்வு என்ற கருத்தைப் பேசுவதற்கான வாய்ப்பும் களமும் அமைவதற்கே திமுக போன்ற ஒரு இயக்கம் ஆட்சிக்கு வரவேண்டியிருக்கிறது. தலித் இயக்கங்கள் எப்போதெல்லாம் அதிகாரப் பகிர்வை முன்னெடுக்கின்றனவோ அப்போதெல்லாம் வாக்குகள் துருவமயமாகி அந்த இயக்கள் இடம்பெறும் அணி பரிதாபமாகத் தோற்றுப் போகின்றது. அதன் விளைவாக அதிகாரத்தை நோக்கிய நகர்வுக்காக சிறு துறும்பையும் கிள்ளிப் போடாத அதிமுகவின் தலித் வேட்பாளர்கள் வெற்றியைச் சுவைத்துவிடுகிறார்கள்.
உண்மையில் அறுதிப் பெரும்பாண்மையினால் பிரதிநிதித்துவம் பெறமுடியாமல் போகிறவர்களை அதிகாரத்தை நோக்கி நகர்த்துவதற்கான ஒரு முயற்சியைத் திமுக 2009ல் முன்னெடுத்தது. கலைக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்கு மீண்டும் உயிர் கொடுப்பது தான் அந்த முயற்சி. 2016 சட்டமன்றத் தேர்தலில் அணிச் சேர்க்கைகள் வேறு விதமாக அமைந்திருந்து திமுக ஆட்சியமைக்க நேர்ந்திருக்குமாயின் இந்நேரத்துக்கு மேலவை செயல்பாட்டுக்கே வந்திருக்கலாம்.
தலித் இயக்கங்கள் அதிகாரத்தைத் தொடுவதற்கான எத்தகைய சந்தர்பவாத முடிவுகளும் தவறானதோ விமர்சனத்துக்குரியதோ இல்லை. ஆனால் வீசுகிற நூறு கற்களுக்கு நாலைந்து காய்கள் கூட விழாவிட்டால் அந்த சந்தர்பவாத நிலைப்பாடும் கேலிக்குரியதாகி விடுகிறதே!
எங்களைப் பகைச்சுகிட்டா என்ன ஆகும் தெரியுமா! என்ற தன்முனைப்பு அரசியல் ஆட்டத்தைக் கலைப்பதற்கு வேண்டுமானால் உதவலாம். ஆனால் அடுத்த சில தேர்தல்களில் அதிகாரப் பகிர்வு உங்கள் கண்ணுக்கு எட்டாத தொலைவில் சிறு புள்ளியாகி ஒரு கட்டத்தில் மறைந்தே போகும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக