சனி, 3 நவம்பர், 2018

BBC :மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிப்போம்' - தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இலங்கை நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ஷ அரசுக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆதரிக்கப்போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பதென்பது அராஜகம் வெற்றிபெற வழிசெய்யும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமரை பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லையெனவும், இந்த அதிகாரம் 19வது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டுவிட்டதாகவும் ஆகவே பிரதமரை நீக்குவதாக வெளிட்ட வர்தமானி அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்துவிட்டு, பெரும்பான்மையை அவர் நிரூபிப்பதற்கு வேண்டிய தேவையை தாமதிக்கவே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இந்த காலநீட்டிப்பைப் பயன்படுத்தி, மந்திரி பதவிகளையும் பணத்தையும் லஞ்சமமாகக் கொடுத்து தனது பக்கத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை இழுத்தெடுப்பது ஜனநாயக விரோத நடவடிக்கையென்றும் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இந்த சதிக்கு பலியானது கடுமையான கண்டனத்திற்கு உரியதென்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


;மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் என்றும் இந்தத் தருணத்தில் நடுநிலை வகிப்பது அராஜகம் வெற்றியீட்டக்கூடிய ஜனநாயக விரோத செயல் என்றும் கூட்டமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் தற்போது எழுந்துள்ள சூழல் குறித்து முடிவெடுக்க கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமையன்று மாலையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக