செவ்வாய், 20 நவம்பர், 2018

"கஜா: தென்னைக்கு இழப்பீடு வெறும் 600 ரூபாயா?

கஜா: தென்னைக்கு இழப்பீடு 600 ரூபாயா?மின்னம்பலம் : “எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுத்தபோது ஒரு தென்னைக்கு 50 ஆயிரம் இழப்பீடாக வழங்கிய தமிழக அரசு, கஜா புயலால் சேதமடைந்துள்ள தென்னைக்கு வெறும் 600 மட்டுமே வழங்கியுள்ளது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஐந்தாவது நாளாக இன்று நடைபெற்றுவருகிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியை நேற்று முதல்வர் அறிவித்திருந்தார். அதில், தென்னை பயிருக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு நிவாரணமாக ஒரு மரத்திற்கு 600 ரூபாய் வழங்கவும், அவற்றை வெட்டி அகற்றிட ஒரு மரத்திற்கு 500 ரூபாய் வழங்கவும், மொத்தம் ஒரு மரத்திற்கு 1100 ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.“

இதுதொடர்பாக இன்று (நவம்பர் 20) அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் தமக்கும் அமைச்சர்களுக்கு கிடைத்த வரவேற்பு தான் கிடைக்கக்கூடும் என்பதை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மக்களின் கோபத்தை தணிக்கும் வகையில் நேற்றிரவு பயிர்களுக்கான இழப்பீடு மற்றும் நிவாரண உதவிகளை அறிவித்திருக்கிறார். இது மக்கள் கோபத்தை தணிக்கவில்லை; மாறாக மக்களின் கோபத்தை அதிகரித்திருக்கிறது என்பது தான் உண்மை” என்று விமர்சித்துள்ளார்.
“நெல், கரும்பு, வாழை, காய்கறிகள் உள்ளிட்ட பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500, அதாவது ஏக்கருக்கு ரூ.5400 வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது சேதமடைந்த பயிர்களை அகற்றி நிலத்தை சீரமைப்பதற்குக் கூட போதாது. ஒரு தென்னை மரத்துக்கு 600 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ள ராமதாஸ், எட்டுவழிச் சாலைக்கு நிலம் எடுக்கப்படும் போது ஒரு தென்னைக்கு ரூ.50,000 வழங்குவதாக அறிவித்த அரசு, இப்போது அதில் கிட்டத்தட்ட நூற்றில் ஒரு பங்கு மட்டுமே இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? தென்னை மரங்களில் ஒருமுறை தேங்காய் பறித்தாலே இதைவிட அதிக வருமானம் கிடைக்கும் எனும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள நிதி உதவி யானைப்பசிக்கு சோளப்பொறியாகவே அமையும். இது போதுமானதல்ல” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், சேதமடைந்த குடிசைகள், படகுகள், மீன்வலைகள் உள்ளிட்ட எந்தப் பொருட்களுக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடு போதுமானதல்ல. இது மக்களின் கண்ணீரைத் துடைக்காது. துயரங்களைப் போக்காது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று பார்வையிடும் முதலமைச்சர் மக்களின் பாதிப்புகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்து அதனடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மக்களின் உணர்வுகளை மதித்து அதற்கேற்ற வகையில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்” என்றும் தனது அறிக்கையில் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக