செவ்வாய், 27 நவம்பர், 2018

கஜா புயல் .. 20 தொகுதி தேர்தல்களும் தமிழக அரசு கேட்டுகொண்டால் தள்ளி வைக்கப்படும் தேர்தல் ஆணையர் அறிவிப்பு ..

கஜா புயல் பாதிப்பு எதிரொலி தமிழக அரசு கேட்டுக்கொண்டால் 20 தொகுதி தேர்தல் தள்ளிவைக்கப்படும் தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்தினத்தந்தி :கஜா புயல் பாதிப்பை சுட்டிக்காட்டி தமிழக அரசு கேட்டுக்கொண்டால், 20 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை தள்ளிவைப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் தெரிவித்தார்.
 புதுடெல்லி, தி.மு.க. தலைவராக இருந்த மு.கருணாநிதி எம்.எல்.ஏ. மறைவைத் தொடர்ந்து அவர் தேர்வு செய்யப்பட்ட திருவாரூர் சட்டமன்ற தொகுதி காலியாக உள்ளது.< இதேபோல் திருப்பரங்குன்றம் தொகுதியில் இருந்து அ.தி. மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.கே.போஸ் மரணம் அடைந்ததால் அந்த தொகுதியும் காலியாக இருக்கிறது.< இந்த 2 தொகுதிகளுக்கும் நடக்க இருந்த இடைத்தேர்தல், பருவமழையை காரணம் காட்டி ஏற்கனவே தள்ளிவைக்கப்பட்டது.


இதற்கிடையே தகுதி நீக்க வழக்கில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று கடந்த மாதம் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து, இந்த தொகுதிகளும் காலியாக இருப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தொகுதிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. தேர்தல் நடத்தப்பட்டால், ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. ஆட்சியை தக்கவைக்க குறைந்தபட்சம் 6 தொகுதிகளையாவது கைப்பற்ற வேண்டும் என்னும் நிலை காணப்படுகிறது. இதனால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை சந்திக்க ஆளும் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அனைத்துமே ஆவலுடன் காத்திருக்கின்றன.

மேலும், தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத், தமிழகத்தில் காலியாக உள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாகவே இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி இரவு தமிழகத்தின் 12 மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதனால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் அடியோடு அழிந்துபோனது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண மற்றும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. எனினும் கஜா புயலின் தாக்கத்தில் இருந்து மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் ‘தந்தி’ டி.வி.க்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- புயல் பாதிப்புகளை மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. பாதிப்புகள் கடுமையாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். தற்போதைய சூழலில் வரும் மாதங்களில் தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்துவது சாத்தியமா?

பதில்:- எப்போது தேர்தல் தேதி குறித்து ஆலோசித்தாலும், திருவிழாக்கள், இயற்கை பேரிடர்கள், பொதுத்தேர்வுகள் உள்ளிட்டவற்றை கணக் கிட்டே முடிவு செய்வோம். புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில், பாதிப்புகள் குறித்து ஆராய்ந்த பின்னரே இடைத்தேர்தல் குறித்து முடிவு செய்யப்படும்.

கேள்வி:- 20 தொகுதி இடைத்தேர்தல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நடத்தப்படும் என கூறியிருந்தீர்கள். தற்போது புயல் பாதிப்புக்கு பிறகு, அது சாத்தியமா?

பதில்:- இப்போதே அதைச் சொல்ல முடியாது. ஏனென்றால், 15 நாட்களில் எல்லாம் சரியாகிவிடலாம். அரசியல் சாசனப்படி, 6 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவேண்டும். இடைத்தேர்தல் நடத்துவதற்கு முன்பு இதையெல்லாம் கணக் கில் கொள்ளவேண்டும்.

கேள்வி:- தமிழக அரசு அதிகாரிகளிடம் பேசியபோது, சீரமைப்பு பணிகளுக்கு 4 மாதங்களாவது ஆகும் என கூறுகிறார்களே?

பதில்:- இது குறித்து தமிழக அரசு அறிக்கை அனுப்பட்டும்.

கேள்வி:- தமிழக அரசின் அறிக்கைக்காக தேர்தல் ஆணையம் காத்திருக்குமா?

பதில்:- இல்லை. இடைத்தேர்தல் குறித்து முடிவெடுக்கும்போது நாங்கள் கோருவோம். 24 மணிநேரத்திற்குள் தமிழக அரசு அறிக்கை அளித்தாக வேண்டும்.

கேள்வி:- இடைத்தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பாக கடந்த முறை தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக அரசு தாமதமாக கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறதே...

பதில்:- தாமதம் எதுவும் இல்லை. முதலில் தொலைபேசியில் தமிழக அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த 3 மணி நேரத்தில் அறிக்கை கிடைத்துவிட்டது.

கேள்வி:- புயல் பாதிப்பை மனதில் வைத்து தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமா?

பதில்:- தேர்தல் ஆணையம் எப்போதுமே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்காது. களத்தில் இருந்து தான் தேர்தல் ஆணையம் தகவல்களை கோரும். ஏனென்றால், களத்தில் இருப்பவர்கள் அவர்கள் தான்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக வருந்துகிறேன். இறைவனை பிரார்த்திக்கிறேன். மக்கள் விரைவில் இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும். இடைத்தேர்தல் அறிவிக்கப்படும்போது தங்கள் துன்பங்கள் எல்லாம் மறந்து, ஜனநாயகத்தை வலுப்படுத்த வாக்களிக்க வேண்டும்.

கேள்வி:- 20 தொகுதிகளில் இடைத்தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கடிதம் எழுதினால், தேர்தல் ஒத்திவைக்கப்படுமா?

பதில்:- அப்படி அறிக்கை வந்தால், அது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்.

கேள்வி:- தற்போதைய சூழலில், தேர்தல் ஆணையத்தால் எதையும் உறுதி செய்யமுடியாது. தமிழக அரசு அறிக்கை அனுப்பினால் அதன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும் என்று இதை எடுத்துக்கொள்ளலாமா?

பதில்:- தமிழக அரசு தானாக அறிக்கை அனுப்பாவிட்டால், தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்கும்.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக